என் பெயர்

அன்புள்ள ஜெ,

யானெனது எனும் செறுக்கு அறுக்க அவா. எனினும் சில குடைச்சல்கள் மனதினூடே! தமிழ் என் போதை. என் காதலி. அதுவே என் ஒழுக்கத்திற்கும் கடமையுணர்விர்க்கும் மூலதனம். எப்போது எதைச்செய்தாலும்  ”தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்குஎனும் குறள் ஆழ்மனதினில் நிழலாடும். அது தவறு செய்வதைத்தடுக்கும்

இப்போது எனக்குத்தேவைப்படும் ஆறுதல் என் குழந்தைகள்பெயர் பற்றியது. என் தந்தையாரும் தமிழ்மேல் பெரும் பற்று கொண்டவர். என் தமக்கையைரின் பெயர்கள் மணிமேகலை மற்றும் அருள் மொழி. என் தம்பிகூட தனது குழந்தைகளுக்கு தீரன் என்றும் குந்தவை என்றும் பெயர் வைத்திருக்கிறான்.  

நான் எனது குழந்தைகளுக்கு கோகுல் மித்ரா மற்றும் அமிர்தவர்ஷ்ணி என்றும் பெயரிட்டுள்ளேன்இது காலம் கடந்து எனை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. உங்களின் உரையாடல்கள், சொற்பொழிவுகளினூடே பயணிப்பவன் நான். தாங்கள் உபயோகிக்கும் ஒவ்வொறு தமிழ் வார்த்தைகளின் வீச்சுக்களை அவதானிப்பவன். எனக்கு தெரியாத தாங்கள் உபயோகிக்கும் வார்த்தைகளை குறித்துக்கொண்டு அதை பயிற்சிப்படுத்த முனைபவன்.  

உங்கள் பேரும் ஜெயமோகன்.. நீங்கள் இதை எவ்வாறு கையாளுகிறீர்கள். உங்கள் மகன் பெயரும்அஜீபன்” . இது திட்டமிட்டதா இல்லை தற்செயலானதாஎவ்வாறு இந்த உணர்வைக்கையாளுகிறீர்கள்.

.குமார்

ராஜபாளையம்

அன்புள்ள குமார்

இந்தவகையான சிறிய விஷயங்களில் உளம் உழலவேண்டாம். மனிதன் எண்ணி விரிய ஏராளமான விஷயங்கள் உள்ளன இங்கே. அவற்றை நோக்கிச் செல்லுங்கள்.

மொழி, பண்பாடு, மதம் என எதன்மீதான மிதமிஞ்சிய பற்றும் போதையே ஆகும். இலக்கை தவறவிட்டு பாதையில் மதிமயங்கிக்கிடப்பது அது. அந்தப்போதையில் இருப்பாவ்ர்கள் மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றை அறியவும் முடியாது. அந்தப்போதையே கண்களை மறைத்துவிடும்.

மொழி மேல் பற்றிருந்தால் மொழியை கற்றுக்கொள்ளுங்கள். அப்படிக் கற்கப்புகுந்தால் மொழி என்பது வெறும் உணர்வுநிலை அல்ல என்பது புரியும். அது அறிவின் தொகுப்பு. அந்த அறிவை அடையத் தொடங்கினால் நாம் மொழியினூடாக மொழியின் சாராம்சம் நோக்கிச் செல்கிறோம். மொழிவெறி மறையும், அறிவுத்தேடல் தொடங்கும்

தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது மூவாயிரமாண்டு ஞானத்தின் தொகுப்பு. அந்த ஞானத்தை சமநிலையுடன் முறையாக பயிலுங்கள். அதற்கான நூல்கள் ஒவ்வொரு களத்திலும் தமிழில் உள்ளன. மெய்ஞான நூல்கள், பண்டைய இலக்கியங்கள், நவீன எழுத்துக்கள் 

ஆகவே இந்த வகையான மொழிப்பரவசங்களை நான் ஒருவகையாத தப்பித்தல்களாகவே எடுத்துக்கொள்வேன். தமிழ்ப்பற்றாளர் என சொல்லிக்கொள்பவர்கள் தமிழில் எதையுமே கற்காமல் வெறுமே தமிழை போற்றிக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே.

ஒருவரின் பெயர் அவரது தெரிவு அல்ல. அதேபோல ஒரு குழந்தைக்கு தாய்தந்தை போடும் பெயரும் அவர்களின் தேர்வு அல்ல. அப்படி தோன்றும், ஆனால் அந்த தருணத்தில் அப்பெயர் ஒரு குழந்தைக்கு அமைகிறது. நம் பெயர் நமக்கு அமைவது வெறும் தற்செயல் அல்ல.

என் மகனுக்கு என் விஷ்ணுபுரம் நாவலில் உள்ள பௌத்த ஞானி அஜிதனின் பெயரை போட்டேன். என் மகளுக்கு என் குரு நித்ய சைதன்ய யதியின் பெயரை அளித்தேன். அது என் குழந்தைகளுக்கு நான் அளிக்கும் ஆசி. எனக்கு என் அம்மா வங்காள நாவலின் கவிஞனின் பெயரைப்போட்டாள். அது அவள் எனக்கு அளித்த ஆசி மட்டும் அல்ல நான் எழுத்தாளன் ஆகவேண்டும் என்னும் அவளுடைய ஆணையும்கூட. அதை இப்பிறவியின் முதன்மைப்பணியாக எடுத்து நிறைவேற்றியுள்ளேன்

ஜெ 

முந்தைய கட்டுரைதத்துவம் செயலின்மைக்கு இட்டுச்செல்லுமா?
அடுத்த கட்டுரைவருமாறு ஒன்றில்லையேல்…