பௌத்தம், தியானம்- கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம்

திரு அமலன் ஸ்டான்லி அவர்களின் விபாசனா பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களில் நானும் என் துணைவியும் தான் மிகக் குறைந்தபட்ச தியானம் அனுபவம் கொண்டவர்கள். மற்ற பங்கேற்பாளர்கள்ஏதோ ஒரு தேடலில் காரணமாக இந்த நிகழ்வில்  கலந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் பேசும்போது தெரிந்து கொண்டோம் .நாங்கள் இது போன்ற நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில்லை. உபாசனா தியான அனுபவத்திற்காகவும்  அதைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காகவும் நாங்கள் கலந்து கொண்டோம்

எத்தனையோ எழுத்தாளர்களையும் ,அவர்களுடைய கனவுகளையும் கொள்கைகளையும் பற்றிப் படித்திருக்கிறோம்.ஆனால் தான் முயன்று பெற்ற  கல்வியறிவு ,தனக்குக் கிடைத்த பல்வகைக் கலை அனுபவங்கள்  மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த  நோக்கத்தில் அந்தியூர் மலைத்தங்கும் இடத்தில்  குடில்களை அமைத்து நித்தியவனத்தினை ஏற்படுத்திய உங்கள் நற்சிந்தனையை என் மனது முதலில் பாராட்டுகிறது . கலை தத்துவம் இலக்கியம் பற்றிப் பேசும் நீங்கள் அதனைப் பற்றிய விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க அமைதியான சூழ்நிலை,ஆரோக்கியமான உணவு, ஆசிரியரின் அருகாமை தேவை என்பதை உணர்ந்தீர்கள். அனைவரும் கற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டும் என்பதை மனத்தில் கொண்டு அதற்குரிய முன்னேற்பாடுகளை நண்பர்கள் வழியேசெய்திருக்கிறீர்கள். மனதிற்கு மிக நிறைவாக இருக்கிறது.ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் ஊதியம் மற்றவர்களைப் போல இல்லை என்ற போதிலும் இந்தக் கனவை மனதில் நிறுத்தி மலைத் தங்கும் இடத்தை அமைத்திருக்கிறீர்கள்  . திரு அமலன் ஸ்டான்லி அவர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில்  பகிர்ந்து கொண்டது போல நீங்கள் ஒரு எழுத்தாளரின் சமுதாயக் கடமையை நிறைவேற்றி இருக்கிறீர்கள்

 கூடவே ஒவ்வொரு தொழிலிலும் இருப்பவர்கள் தங்கள் தொழில் சார்ந்த, சமுதாயத்திற்குத் தேவையான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு அவாவினைத் தூண்டி இருக்கிறீர்கள் .  எழுத்தாளராக உங்களுடைய சமுதாயக் கடமையை ஆற்றி விட்டீர்கள்.சரியான திட்டமிடலும் நீண்ட நெடிய உழைப்புமே எதையும் சாத்தியமாக்கும் என்பதையும் நான்  அறிந்து கொண்டேன் . மிகச்சிறந்த அனுபவத்தினைத் தந்தமைக்கு நன்றி.

வாய்ப்பு கிடைக்கும் போது மறுபடியும் மலைத்தங்குமிடத்திற்கு வருவேன்.

செல்வன் இரத்தினசாமி

முந்தைய கட்டுரைவிபாசனா, கடிதம்
அடுத்த கட்டுரைமரபிலக்கியம் பயில…