விபாசனா, கடிதம்

 

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

என் நன்றி கலந்த வணக்கங்கள். நானும் என் கணவரும் முதல்முறையாக விபாசனா பயிற்சி முகாமிற்காக வெள்ளிமலை வந்திருந்தோம். கண்ணையும், மனதையும் கொள்ளை கொள்ளும் சூழல்.

காலை உணவிற்காக உள் நுழைந்ததும் முதலில் கண்டதுஎமர்சன்அவர்களின் புகைப்படத்தை. என்னை அவர் வரவேற்றதைப் போல் உணர்ந்தேன். நிறைய எழுத்தாளர்களின் புகைப்படமும், வாசகமும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன. படிப்பதற்காக எடுத்து வந்த தங்களது  ‘இயற்கையை அறிதல்புத்தகம் என் பையில். முன்னரே படித்து பக்கங்களில் முன்னேறி, ஏனோ புரிதலில் முழுமை பெறாமல் மீண்டும் முதலில் இருந்து வாசிக்கத் துவங்கியிருந்தேன். இடைவேளையின் போது புல், செடி, மரம், மலை, வானம் என நீண்டிருந்த காட்சிக்கு முன்னால் கல் பெஞ்சில் அமர்ந்து வாசித்தது ஒரு பேரனுபவம். வார்த்தைகளின் அர்த்தம் மெல்ல உணர்த்தப்பட்டு,உணர்ந்து முன்னேறினேன்.மீதி பக்கங்களை புரிந்துணர பார்வையில் வானமாவது இருக்குமாறு பார்த்துக் கொள்வேன், இங்கு சென்னையில்.

அங்கு எளிமையான உணவை நிறைவுடன் சாப்பிட்டோம். மனமறிந்து பரிமாறிய மணியண்ணன் கைகளுக்கும்,சரஸ்வதியம்மா, மல்லிகாம்மா அவர்களுக்கும் நன்றிகள்.

அமலன் சாரிடம் தியானம், பௌத்த தத்துவத்தின் அடிப்படைகளை பயின்றது நிறைவான அனுபவம். சில பௌத்த ஆசிரியர்களின் ஆங்கில வழி நூல்களை, யூடூப்பில் உள்ள

வீடியோக்களை பார்த்து பயில முயன்றுள்ளேன். ஆனால் முழுமையாக என்னால் செய்ய முடிந்ததில்லை. நான் கிடைத்த இடங்களில், கிடைத்த பக்கங்களை வைத்துக் கொண்டு வாசிக்க தெரியாமல் இருந்துள்ளஇரண்டரை நாள் பயிற்சியின் முடிவில் அமலன் சார் எனக்கான முறையான புத்தகமாக்கித் தந்துள்ளார். அதை பயின்று என்/என்னை அறிதலை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.

பயிற்சியின் முதல் நாள் முன்பகலில் மயிலின் துணையுடனும், பிற்பகலில் மழையின் துணையுடனும் தியானம் செய்தோம். பொறுமையாக எங்களைப் பயிற்சியினுள் அழைத்துச் சென்றார். சடார்,சடார் என்ற மழையின் சத்தத்தினூடே அமைதியாக மழைத் தியானம் செய்வித்தார். இயற்கையும், சூழலும் தியானத்திற்குப் பிறகான விழிப்பில் என்னைத் தன்னுள் நிரப்பிக் கொண்டன. ஒவ்வொரு தியான நிகழ்விற்குப் பின்னும் மனம் தெளிவாவதை, பார்வை உள் செல்வதை உணர முடிந்தது. தியானம் முடிந்து நாங்கள் எழும் வேகமும், பேச்சின் சத்தமும் நிதானமானது.

இயற்கையுடன் என் இருப்பை உணர தியானம் உதவியதா அல்லது தியானத்தில் என்னை உணர இயற்கை உதவியதா ? அந்த இரண்டரை நாள் இரண்டிலும் கலந்திருந்தேன். அமலன் சார் spaciousness என்று குறிப்பிடுவார். அதில் என்னை உணர்ந்து நிரப்ப உதவினார். எனக்கு நான் அளித்த சிறந்த பரிசு அதுவென்றே நினைக்கிறேன். நிறைய கற்க வேண்டும் என்ற விதையை எங்களுள் ஊன்றியுள்ளார். எளிமையாக, தெளிவாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவரது நேர்மறை சிந்தனை, பொறுமை,ஆழமான அறிவு அனைவரையும் சென்றடைய வேண்டும்.

வேலையிடத்திலும், கல்யாண வீடுகளிலும் நலவிசாரிப்புகளைத் தாண்டி எனக்கு நிறைய பேச அமைந்ததில்லை. அங்கே பகிர்தலின் சுவையை உணர்த்தத் தான் எத்தனை நண்பர்கள். புத்தகங்கள், ஆன்மிகம், இயற்கை என பேசத்தான் எத்தனை மனங்கள், எத்தனை புன்னகைகள், எத்தனை அன்பு நிறைந்த பார்வைகள். அனைவருக்கும் நன்றி. அருண்மொழி அக்காவை சந்தித்து, பேசியது மகிழ்வான தருணம். கற்றல் பற்றிய அவரது பார்வை, விழைவு எங்களுக்கு என்றும் நல்ல உந்து சக்தி.

நிறைவுடன்

ப்ரீத்தி

முந்தைய கட்டுரைஇஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்
அடுத்த கட்டுரைபௌத்தம், தியானம்- கடிதம்