பக்தி இல்லாத சைவமா?

அன்புள்ள ஜெ

சைவ, வைணவ வகுப்புகளை முழுமையறிவு சார்பாக நிகழ்த்தி வருகிறீர்கள். ஆனால் பக்தி இல்லாமல் நடத்துகிறீர்கள். இந்த இரண்டு மதங்களையும் பக்தி இல்லாமல் கற்பிப்பது முழுமையானதாக இருக்குமா?

க.ஆவுடையப்பன்.

சைவ, வைணவ வகுப்புகளை முழுமை அறிவு சார்பில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். இப்போது நாங்கள் சைவ, வைணவ இலக்கிய வகுப்புகளை மட்டுமே நடத்துகிறோம். உதாரணமாக வைணவ இலக்கிய அறிமுகத்தில் வைணவ இலக்கியத்தை அறிவதற்கு எந்த அளவிற்கு தேவையா இருக்குமோ அந்த அளவுக்கு மட்டுமே வைணவ தத்துவம் விளக்கப்படும்.

குறிப்பாக வைணவ தத்துவத்தில் இரண்டு கட்டங்கள் உண்டு. இராமானுஜருக்கு முந்தைய வைணவ மதத்தின் வளர்ச்சி, அதில் தத்துவத்தின் பங்கு. ராமானுஜரின் விஷிடாத்வைத மரபுக்குப் பிறகு அவரது தத்துவம் வழியாக வைணவ இலக்கியம் விரிவாக்கம் செய்யப்பட்ட முறை. இவ்விரு பகுதிகளாக நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை புரிந்து கொண்டால் மட்டுமே  வைணவ இலக்கியத்தை சரியாக உள்வாங்க முடியும்

அதேபோல சைவ இலக்கியமும் கற்பிக்கப்படுகிறது. இந்திய அளவில் சைவம் உருவாகிவந்த வரலாற்றுக் காலகட்டம் ஒன்று. அது சைவ சித்தாந்தமாக தமிழகத்தில் கூர் கொள்வது வரை இன்னொரு காலகட்டம்  அதன் பிறகு சைவ சித்தாந்த அடிப்படையில் சைவம் மறு வரையறை செய்யப்பட்டது. சைவத்தின் பல துணை பிரிவுகள் உணரப்படாமல் சைவஇலக்கியத்தின் சித்தர் பாடல்களையும் திருமூலர் பாடல்களையும் புரிந்து கொள்ள முடியாது .இவற்றை கற்பதற்கான வகுப்புகளை நாங்கள் நடத்தி வருகிறோம்.

இந்த வகுப்புகள் பக்தியை கற்பிப்பவை அல்ல. வரலாறு மற்றும் தத்துவத்தை கற்பிப்பவை மட்டுமே.அதனுடாக இலக்கியத்தின் அழகியலை கற்பிக்கும் நோக்கம கொண்டவை .அவற்றிலிருந்து பக்திக்கு செல்வது என்பது அவரவர் தெரிவு மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைபக்தி மந்தம்
அடுத்த கட்டுரைவனம் வகுப்பு- கடிதம்