பக்தி மந்தம்

அன்புள்ள ஜெ,

சைவ வகுப்புகள் மீண்டும் எப்போது நிகழும்? கலந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. வசதிப்படுமா என்று பார்க்கவேண்டும்.

ஆர்.கணபதி

அன்புள்ள கணபதி,

சென்ற எல்லா சைவ வகுப்புகளிலும் இதைக் கேட்டீர்கள், எல்லா வகுப்புகளிலும் உங்களுக்கு வசதிப்படவில்லை.

வைணவம் சைவம் இரண்டுக்குமே பொதுவாக அதிகமான பங்கேற்பாளர்கள் வருவதில்லை. ஆகவே பொருளிழப்பு. எனவே   குறைவாகவே அவற்றை நிகழ்த்த முடிகிறது.

சைவம், வைணவம் ஆகியவை மதம் சார்ந்த கல்வியாகவே நம் சமூகத்தில் பார்க்கப்படுகின்றன.மதம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர்கள் ஊக்கமான கல்வி மனநிலைக்கு வருவதில்லை. அவர்கள்  தேங்கி போனவர்கள். சைவத்தின் மொழியில் சொன்னால் தமோகுணம் கொண்டவர்கள். ஆனால் அதை சாந்த குணம் என்று அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். அது எங்கே நின்றிருக்கிறார்களோ அங்கேயே அசையாமல் நின்றிருக்கும் நிலை. இல்லம் விட்டுக்கூட அவர்கள் கிளம்ப மாட்டார்கள். ஆகவே சைவ, வைணவத்திற்கு பெரிய அளவில் ஆர்வலர் இருப்பதாகத் தோன்றும். எவருமில்லை என்பதே மெய்நிலை.

இவ்வகுப்புகளை இணையத்தில் நடத்தினார் நூறு பேர் வரை அவற்றில் பங்கு கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் பங்கு கொண்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கிக் கொள்ளலாம், மூளையை அசைக்கவும் வேண்டாம்.  அத்துடன் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே இருந்துகொண்டும் இருக்கலாம்

ஒன்றைக் கற்பதற்காகக் கிளம்பிச் செல்வது என்பது உள்ளத்தை அசைப்பது கூடத்தான். உள்ளத்தில் ஒரு மாற்றம் வருவதற்கு உடலை மாற்ற வேண்டியுள்ளது.  அதை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. நம் பக்தர்கள் உள்ளத்தை ஊறப்போட்டு வைத்திருக்கிறார்கள். மூளையையும் உடலையும் கூடுமானவரை  பயன்படுத்துவதில்லை. வம்புகளில் மட்டுமே திளைப்பார்கள். அந்த வம்புகளின் ஒரு பகுதியாகவே வைணவம் அல்லது சைவம் போன்றவற்றை பற்றி ஏதேனும் ஒரு நல்ல வார்த்தைகள் கேட்க விரும்புகிறார்கள்

இந்த தேக்க் நிலையால் அவர்கள் நோயுறுகிறார்கள். நோய் காரணமாக  எங்கும் செல்லாது தங்கள் வீட்டுக்குள்ளே சிறைப்பட்டுகொள்கிறார்கள். கிளம்பி வந்து கற்பவர்களுக்கு நவீன கலை போன்றவற்றில் மட்டுமே ஆர்வம் இருக்கிறது . எங்கள் ஆர்வத்தால் மட்டுமே இந்த வகுப்புகள்ம் நிகழ்கின்றன.

ஜெ

முந்தைய கட்டுரையோகம்