அன்புள்ள ஜெ,
வணக்கம்.
கடந்த பிப்ரவரியில் நான் தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்டேன். அப்போதிலிருந்து குழந்தைகளையும் அழைத்து வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் வகுப்பை பற்றிய அறிவிப்பு வந்தவுடன் பதிவு செய்து விட்டேன். பறவை பார்த்தல் வகுப்பு நண்பர்களை மீண்டும் சந்தித்ததில் குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சி.
மதிப்பிற்குரிய ஆசிரியர் லோகமாதேவியும் வியாழனன்றே வந்து விட்டார். அன்று கிறிஸ்துமஸ் என்பதால் ஆசிரியர் கேக் கொண்டு வந்திருந்தார். இரவு உணவுக்கு பின், குழந்தைகள் அதை வெட்டினார். கடும் குளிராக இருந்தாலும் எங்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாக இருக்க விட வேண்டும். பிரச்சனை வரும்போது, உதவி செய்ய நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தால் மட்டுமே, பிற இடங்களில் கிடைக்கும் வெற்றிக்கு மதிப்பு இருக்கும். வெற்றியை சந்தோஷமாக பகிர்ந்து கொள்ள ஆளில்லாத போது, அதற்கு என்ன பயன் என்று ஆசிரியர் கூறியது சிறந்த அறிவுரையாக இருந்தது.
புத்தரையும், வாக்தேவியையும் வணங்கிய பின், ஆலமரத்தடியில் வகுப்பு தொடங்கியது. ‘ஆலடி அமர்ந்து கற்பது‘ நமது பண்பாடு.குளிர் மிக அதிகமாக இருந்ததால், வகுப்பறைக்கு சென்று விட்டோம். வேங்கை மரங்கள் நிறைந்திருந்ததால், அது பங்கா ஊர் என்றாகி, பின் பெங்களூரு என்ற பெயர் வந்தது. தாவரங்களின் அறிவியல் வகைப்பாடு, ஆக்கிரமிப்பு தாவரங்கள், ஆச்சரியமூட்டும் அரிய வகை தாவரங்கள் பற்றி கற்றுக்கொண்டோம். அதன் பின் இயற்கை நடை சென்று, பல வகை தாவரங்களை நேரில் பார்த்தோம்.

மதிய உணவிற்குப்பின், புளிய மரத்தடியில் அமர்ந்து கேள்வி பதில் குறித்து உரையாடினோம். மாலை அரங்கத்தில் வகுப்பு. ரிக் வேதத்திலேயே தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மல்லி, தாமரை,அல்லி, மா, அசோக மலர்கள் மன்மதனின் மலர் கணைகளில் உள்ளன. இந்த ஐந்துமே பாலுணர்வூக்கி (Aphrodisiac) என்பது ஆச்சரியம். நம்மைச் சுற்றியுள்ள விஷ தாவரங்கள் பற்றி விரிவாக அறிந்து கொண்டோம்.
இரவு உணவிற்குப்பின், ஆசிரியர் அறையருகே வகுப்பு நடந்தது. ழ்ஜான் பாரெ, மரியா சிபில்லா, சுநீதி, நிர்மலா , ஜானகி அம்மாள், கமலா, பாபா புதான் காபி, ஆமணக்கு விஷ குடை கொலைகள், டைபாய்டு மேரி, DNA Double helix Model முதலில் புகைப்படம் எடுத்த ரோசலின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை கதை போல ஆசிரியர் கூறினார். இவர்களைப் பற்றிய கட்டுரைகளை நான் ஏற்கனவே வாசித்திருந்தேன். சுநீதியின் ஆய்வில் முதல் 6 பெண்களில் இருந்த நூரி என்பவர், AIDS நோயாளிகள் திருமணம் செய்து கொள்ள முயற்சிகளை எடுக்கிறார் என்பதை, வாசிக்கும் போது ஒரு தகவலாக கடந்து விட்டேன். ஆனால் ஆசிரியர் கூறும்போது தான், அது எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றி இருக்கும் என்று புரிந்தது. அறிதல் வேறு; கற்றல் வேறு என்பதை உணர்ந்த தருணம் அது.
சனிக்கிழமை காலை, நமக்கு அதிகம் தெரிந்திராத பெண் ஆராய்ச்சியாளர்கள் குறித்த வகுப்பு. அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு
இருந்த போதிலும், அது மறைக்கப்படுகிறது. பண்டைய ஆராய்ச்சியாளர்கள் , இப்போது புதிய கண்டுபிடிப்புகளை செய்யும் பெண்கள் பற்றி தெரிந்து கொண்டோம். குடிநீருக்காக பெண்கள் தலையில் சுமக்கும் குடங்களுக்கு பதிலாக உருளும் வண்டிகளை உருவாக்கிய சிந்தியா (Cynthia Koenig) மனதில் நிற்கிறார்.

அதன்பின் களத்தில் தாவரத் தேடல். பெரியவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் கொடுக்கப்பட்டன. குழந்தைகள் மட்டும் தனியாக மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு பெரியவர்கள். 20 பணிகள் இருந்தன. அதில் ஏதேனும் 10 முடித்தால் போதும். புதிதாக ஏதாவது கொண்டு வந்தால், கூடுதலாக அதற்கு மதிப்பெண் தரப்படும். யார் யார் என்ன கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்த பின், நான், ஹரிஷ் மற்றும் பத்து குழந்தைகளுடன் தாவரத் தேடுதல் வேட்டைக்காக கிளம்பினோம். அமுதன் வேகமாக வெளியில் ஓடினான். நான் பிடிப்பதற்காக பின்னால் சென்றால், குனிந்து ஒரு சிறு பூவை பறித்து என்னிடம் நீட்டினான். சிறு குழந்தைகள் கூட சட்டென்று என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். ஒவ்வொரு செடியாக கவனித்து, குறிப்பிட்ட பண்புகள் அதற்கு இருக்கிறதா என்று பார்த்து, ஆர்வமாக களத்தில் வேலை செய்தனர். அரங்கிற்கு வந்து சேகரித்த மாதிரிகளை அடுக்கி வைத்தோம். ஆசிரியர், வந்து பார்த்து மதிப்பெண் வழங்கினார்.
மதிய உணவிற்கு பின் சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு. எவையெல்லாம் சிறுதானியங்கள், அவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன எவ்வாறு உபயோகப்படுத்துவது என்ற தெரிந்து கொண்டோம். தாவரங்களுக்கும் உணர்வு உள்ளது என்பதை விளக்கும் அடுத்த வகுப்பு. அவை எவ்வாறு வேர் நுனியில் இருந்து எடுக்கும் நீரை மர உச்சியில் இருக்கும் இலைகளுக்கு கட்டுகிறது, மியாவாக்கி வனம் அமைக்கும் முறை மற்றும் நாம் தினமும் உபயோகிக்க சில குறிப்புகளும் சொல்லப்பட்டது.
குளிர் அதிகமாக இருந்ததால்,இரவு உணவுக்குப் பின் வகுப்பு பெரிய துயிற்கூடத்தில் (dormitory) நடந்தது. வினாடி வினா என்ற இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நான்கு குழுக்களாக பிரித்து ஆசிரியர் கேள்வி கேட்க, மேனகா Mam மதிப்பெண் எழுதினார்கள். அனைவரும் ஆர்வமாக பதில் கூறினர். Carl Linnaeus வரலாற்றை ஆசிரியர் கூறியதோடு, அன்றைய வகுப்பு முடிந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும், அடுத்த அரை நாளில் வகுப்பு முடிந்து விடுமே என்ற கவலை தொற்றிக் கொண்டது.
ஞாயிறு காலை வகுப்பு தொல் தாவரவியல் பற்றி. நான்கு படிமங்களையும் ஆசிரியர் கொண்டு வந்திருந்தார். நுண்ணோக்கியில் மிகச்சிறிய பூக்கும் தாவரமான Wolffia globosa , சில மகரந்தங்கள் பார்த்தோம். இறுதி வகுப்பு சூழியல் அறம் பற்றியது. படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலையும் ஆசிரியர் கொடுத்தார். சிலர் தங்களின் கற்றல் அனுபவங்களை பகிர்ந்தனர். குழு புகைப்படத்துடன் வகுப்பு நிறைவுற்றது.
சென்ற வகுப்பிற்கும் இந்த வகுப்பிற்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது. ஒரு சில தகவல்களைத் தவிர, மற்ற அனைத்துமே மாறி இருந்தது. முதல் வகுப்பு முற்றிலும் தாவரங்களை பற்றியது. இந்த வகுப்பில் தாவரங்களை தாண்டி, அறிவியலில் பங்காற்றியவர்கள், சூழலியல் என்று ஒரு ஒரு முழுமையான சித்திரம் கிடைத்தது.
குழந்தைகள் தொடர்ச்சியாக கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் மிக பொறுமையாக பதில் அளித்தார்.அவர்களின் ஆர்வம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சிறுசிறு பூக்களை பொறுமையாக அடுக்கி கங்கணம் செய்த பிரதிக்ஷா மற்றும் ரித்விகா, மழலை குரலில் அவனுக்கு புரிந்ததை தொடர்ந்து வகுப்பில் கூறும் அமுதன், அனைத்து வகுப்புகளும் முடிந்த பின்னர் குரு நித்யா அரங்கிடம் விடைபெற்று கிளம்பிய பாசில், இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் அன்றைய நாட்குறிப்பை எழுதி முடிக்கும் வல்லப் , கழுத்தில் கூர்நோக்கியும் கண்களில் பறவைகளுக்கான தேடலும் கொண்ட சிவா, பூமியை காப்பாற்ற முயற்சி செய்வேன் என்று கூறிய தேவ் வாலேஷ், புதியவர்கள் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் எல்லோரிடமும் பேசும் சக்திதரன், சிங்கப்பூரிலிருந்து வந்து வகுப்பில் கலந்து கொண்ட ஹர்ஷா, விதை மாதிரிகள் அடுக்கும்போது ஒரு விதையை இல்லை என்று தெரிந்தவுடன் பையில் இருந்து விதையை தந்த மித்ரன், கொடுத்த பணியை முடித்த பின் அமைதியாக வரைந்து கொண்டிருந்த தேவதாரிணி, பெற்றோர் இல்லாமல் தனியாகவே இது போன்ற தங்கும் முகாம்களுக்கு செல்லும் கேயா, தோழியை நம்பி உடன் வந்த தன்ஶ்ரீ, ஆமணக்கு மற்றும் குன்றிமணி விஷத்திற்கு முறிவு மருந்து இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல கேள்விகள் கேட்டு கவலைப்பட்ட நீயன்த்ரி, ’கப்பூர வல்லியை கழுவி சாப்பிடணும்’ என்று கூறும் வகுப்பின் மிக இளைய மாணவன் ராம் ருத்ரன் என ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷம். அடுத்த தலைமுறை மீது பெரும் நம்பிக்கை வந்திருக்கிறது.
ஒரு பாதுகாப்பான இயற்கை சூழலில், மிகச்சிறந்த ஆசிரியருடன் உடன் இருந்து கற்றலுக்கான வாய்ப்பைத் தந்த தங்களுக்கு மிகவும் நன்றி.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.











