அன்புள்ள ஜெ
முழுமையறிவு வழியாக நீங்கள் அளிக்கும் திரைப்படக் கலை பயிற்சி பற்றி பார்த்தேன். திரைப்படத்தை பார்க்கவும் ரசிக்கவும் ஏன் தேவையென்றால் திரைப்படத்தை எடுப்பதற்கும் இன்றிருக்கும் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் ஆச்சரியமளிப்பவை. இன்றைய சூழலில் இவ்வகுப்புகளின் பயன் என்ன?
ரவிச்சந்திரன் ஆராவமுதன்.
அன்புள்ள ரவி,
இந்தியத் திரைப்பட இயக்கம் 1960 களின் இறுதியில் தொடங்கியது. 1990 களு டன் அந்த யுகம் முடிவுக்கு வந்தது . ஒரு 25 ஆண்டுகள் மிகத் தீவிரமாக அது இருந்தது என்று சொல்லலாம். சத்யஜித் ரே, ரித்விக் கதக், மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் என அதில் மேதைகள் இருந்தனர்.
இந்தியச் சூழலில் திரைப்படங்களுக்கான நிதி குறைவாக இருந்தமையால் மிகக் குறைவான தொழில்நுட்ப உதவிகளுடன் சாத்தியமான உத்திகளை பயன்படுத்தி அக்கலைப்படங்கள் எடுகப்பட்டன . ஆகவே அவை திகைக்கச்செய்யும் காட்சியழகு கொண்டவை அல்ல. எந்த கலையும் உண்மையில் இருக்கும் வாய்ப்புகளைக்கொண்டு வளர்வதே, பாறையிடுக்கில் முளைக்கும் செடி போல.
நம் கலைப்பட இயக்கம் இந்தியாவின் ஆன்மாவைப் பற்றிய ஒட்டுமொத்த சித்திரத்தை உலகம் முன் உருவாக்கியது .இந்தியாவில் எழுதப்பட்ட நவீன இலக்கியங்களுக்கு அணுக்கமானவையாகவும் அவை இருந்தன. அந்த படங்களை இன்று பார்க்கையில் கூட அவற்றின் தொழில்நுட்பம் போன்றவை காலாவதியாகி விட்டிருந்தாலும் நடிப்பும் கதைக்களமும் அவை உருவாக்கும் மெய்யான உணர்வுகளும் அழியாத கலைத் தன்மையுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
90க்கு பிறகு இந்திய அரசின் திரைப்பட வளர்ச்சித் துறை கலைப்படங்களுக்கு நிதியளிப்பதை கிட்டத்தட்ட முழுமையாகவே நிறுத்திக் கொண்டு விட்டது .பெரும்பாலும் அந்த நிதியை நம்பியே உருவாகி வந்த படங்களின் காலகட்டம் முடிவுக்கு வந்தது .உலக அளவில் திரைப்பட விழாக்கள் வழியாக வரும் நிதி என்பது கலைப்படங்களுக்கான இரண்டாவது வருமான வழியாக இருந்தது. கார்லேவாரி, கேன் போன்ற புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் கூட செயலிழந்து வணிகமயமான போது அவற்றிலிருந்து தரமான கலைப்படங்களுக்கு நிதி வருவதும் நின்று விட்டது. உலகெங்கும் கலைப்படங்களுக்கு மிகப்பெரிய ஒரு தேக்க நிலையே இன்றுள்ளது .
இன்று உலகம் எங்கும் வந்து கொண்டிருக்கும் மாற்றுப் படங்கள் பெரும்பாலானவை மிக மேலோட்டமானவை. அண்மையில் திரைவிழாக்களுக்குச் சென்றவர்கள் ஒரு நல்லபடம்கூட பார்க்கக்கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். அவை மனச்சிக்கல், உறவுச்சிக்கல் என ஒரே வகையான கருக்களை அதிர்ச்சியூட்டும்படி சொல்ல முயன்றன. அவற்றை உலக சினிமா என்று இங்குள்ள கலைப்பார்வை அற்ற சிலர் தங்களை அறிவுஜீவுகள் என்று எண்ணிக் கொண்டு மதிப்ப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வெறும் முற்போக்கு கருத்துக்களை ஒட்டி எடுக்கப்படும் பிரச்சாரப் படங்களும் மாற்று திரைப்படங்கள் என கருதப்படுகின்றன
எப்படி சிற்றிதழ் சார்ந்த தீவிர இலக்கியம் வணிக எழுத்திற்கு மாற்றாக உள்ளதோ அதைப்போல இந்த வணிகத் திரைப்பட உலகத்துக்கு மாற்றாக ஒரு தீவிர திரைப்பட இயக்கம் தேவை. அது உருவாகி இருந்தது, இன்று அழிந்துவிட்டது. அது மீண்டும் உருவாக வேண்டும். அதற்கு நேற்று இருந்தது என்ன என நாம் அறியவேண்டும். அதன் கலையம்சத்தை ரசிக்கும் கண் நமக்கு வேண்டும். அதற்கான பயிற்சியே நாங்கள் அளிப்பது.
ஜெ












