வேண்டுதலா தியானமா?

அன்புள்ள ஜெ

நான் ஒரு கிறிஸ்தவன். நான் தியான முறைகளைப் பயில்வதைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் என்னுடன் இருப்பவர்கள் தியானம் என்பது கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்று சொல்கிறார்கள். வேண்டுதல் (ஜெபம்) மட்டுமே கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்கிறார்கள். உங்கள் எண்ணம் என்ன?

சாம்

அன்புள்ள சாம்,

இரண்டுவகையான ஆன்மிக அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று, வேண்டுதல் அல்லது பிரார்த்தனை. இன்னொன்று, தியானம் அல்லது யோகம்.

வேண்டுதல்களை செய்பவர்கள் தியானத்தையும் , தியானம் செய்பவர்கள் வேண்டுதல்களையும் நிராகரித்துப் பேசும் வழக்கம் உண்டு.

வேண்டுதல் செய்பவர்கள் உலகியல் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து இறைவனிடம் மன்றாடுகிறார்கள். இது உலகியல் மீது பெரும் பற்றை உருவாக்குகிறது. உலகியல் ஆசைகளை பெருக்குகிறது. ஆசைகள் பெருகப்பெருக நாம் நிறைவடைவது குறைகிறது. மேலும் மேலும் கேட்கிறோம். கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறோம். ஆகவே இறைவனிடம் பிரார்த்தனை, வேண்டுதல் செய்வது பெரிய பிழை – இது தியானம் செய்யும் தரப்பின் கருத்து

தியானம் செய்பவர்கள் இறைவனை மறந்துவிடுகிறார்கள். தங்களைத் தாங்களே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தங்களிலேயே குவிகிறார்கள். அது ஆணவத்தை உருவாக்கும். ஆகவே அது பாவம். இது வேண்டுதல் செய்பவர்களின் தரப்பு.

இரண்டுமே கொஞ்சம் சரி, இரண்டுமே கொஞ்சம் பிழை என்பதே என் எண்ணம். உலகியல் வாழ்க்கை கொண்டவர்கலிடம் தியானமும் வேண்டுதலும் இணைந்தே இருக்கலாம் என நினைக்கிறேன்.

வேண்டுதல் மட்டுமே செய்பவர்கள் உலகியலில் மூழ்கிவிடுவதும், ஏமாற்றங்களை அடைவதும் நடக்கலாம். பலசமயம் அவர்கள் என்ன கிடைத்தாலும் திருப்தி அடையாமல் கடவுளிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார்கள் .அவர்கள் தியானமும் செய்வார்கள் என்றால் தங்களைத் தாங்களே கூர்ந்து பார்க்கக்கூடும். தங்களுடைய மிகையான ஆசைகளையும், அச்சங்களையும் நேருக்குநேர் பார்த்து மதிப்பிட முடியும். அது அவர்களுக்கே ஒரு விலக்கத்தை அளிக்கும். மனம் சமநிலை அடையும்

தியானம் மட்டுமே செய்பவர்கள் பலவகையான தியான உத்திகளை மட்டுமே பயில்பவர்களாக ஆகிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் யோகம் போன்றவற்றை உடற்பயிற்சியாகச் செய்ய ஆரம்பிப்பார்கள். நாம் இந்தப் பிரபஞ்சத்தின் சின்ஞசிறு துளிகள் என்பதை மறந்துவிடுவார்கள். நம் வாழ்க்கை பிரபஞ்சம் என்னும் பிரம்மாண்டமான நிகழ்வில் இணைந்துள்ளது என்பதை உணராமலிருப்பார்கள். இறைவனிடமோ அல்லது இயற்கையுடனோ வேண்டிக்கொள்வது அவர்களுக்கு ஓர் அடக்கத்தை அளிக்கும்.

தியானம் மட்டுமே செய்பவர்கள் ஞானத்தின் பாதையில் விடுதலை நோக்கிச் செல்பவர்கள். உலகியலை துறந்து சென்றுகொண்டே இருப்பவர்கள். அவர்கள் வேறுவகையினர்.

ஜெ

 

தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானவகுப்புகள்

செப்டெம்பர் 27 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைசிந்தனையும் சிடுக்கும்
அடுத்த கட்டுரைவிபாசனா பயிற்சியும் விலக்கமும்