சிந்தனையும் சிடுக்கும்

அன்புள்ள ஜெ

இவ்வாண்டு குருபூர்ணிமா இணையவழி உரையாடலில் வெண்முரசு சார்ந்து அத்தியாயங்களில் இருந்து நுணுக்கமாக கேட்கப்பட்ட கேள்விகளையொட்டி ஒன்றை பகிர்ந்தீர்கள்அதாவதுகடந்த நான்காண்டுகளில் மிகுந்த பிரயத்தனத்துடன் வெண்முரசில் இருந்து என்னை பிரித்து கொண்டு வந்துள்ளேன்அதன்பொருட்டே நூறு கதைகள் எழுதியதும் பின்னர் மூன்று நாவல்கள் எழுதியதும் எல்லாம் என்று சொன்னீர்கள்.

இன்று முழுமையறிவு தளத்தில் வெளியாகியுள்ள சிவமீனாக்ஷி அவர்களின் கடிதத்தில் நீங்கள் கேட்ட சித்ராங்கதனை கொன்றவன் கந்தர்வன் யார் ? என்ற கேள்விக்கு பதிலளித்து தங்கள் பரிசாக எழுதழல் பெற்றதை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்அந்த கேள்வி தகவல் நுட்பம் சார்ந்தது.

அடுத்து கடந்த ஒருவாரமாக வெண்முரசு முழுத்தொகுப்பில் கையெழுத்திட்டு அளிப்பதை ஒட்டிவெண்முரசு பதிப்பு பணியின் பிரம்மாண்டத்தையும் அதனை ஆதரிக்கும் சிறு வாசகர் குழாமையும் எண்ணியவற்றையும் பெருமிதமும் மகிழ்வும் வியப்பும் கலந்த உணர்வை பதிவாக எழுதியிருந்தீர்கள்வெண்முரசு நூல்களில் கையெழுத்திடுவது தவிர்க்க முடியா பணி என அறிவேன்.

ஆனால் சொற்களை விட நம் செயல்கள் மேலும் நம்மை ஆள்கின்றனஇந்நிலையில் வெண்முரசு தொகுதிகளில் கையெழுத்திடும் போது அதன் மேல் எழும் உளப்பீடிப்பை எப்படி கையாள்கிறீர்கள் ? அதிலிருந்து விடுவித்து கொள்ள ஆற்றும் அகசெயல்கள் எவை என அறியப்படுத்த முடியுமா ? அந்த அக செயல்கள் தனிமனிதருக்கு ஏற்ப மாறுபவை என்றால் அவற்றின் பின்னுள்ள இயங்குமுறையின் கட்டமைப்பை மட்டுமாவது விளக்க முடியுமா ?

ஏன் கேட்கிறேன் என்றால் கற்கும்தோறும் கற்றவற்றை எங்கேனும் வெளிப்படுத்துகிறோம்நம்மிடம் இருந்து அவற்றை பெறுபவர்கள் அந்த அறிவு நம்முடையது என நம்புகையில் உடன் என் அகமும் ஆம் என கூச்சலிடுகிறதுஆனால் என் மறுபாதி அறியும் அறிவென இங்கிருப்பது என் வழியாக ஒழுகி செல்கிறதுநான் ஆற்றவேண்டியதுஅறிவு பயணிக்கும் பாதையாக என்னை நலமுற பேணுவது மட்டுமேசிறிய செயல்களை செய்யும் எனக்கு இந்த பிரச்சினை உள்ளதுபெருஞ்செயல் ஆற்றும் தங்கள் அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும் என நினைத்து கேட்டேன்.

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்

உங்கள் வினாக்களில் பாதிக்குமேல் நான் பதிலளிப்பதில்லை. ஏனென்றால் அவை பெரும்பாலும் வெறும் ஊகங்களில் இருந்து ஊகங்களுக்குச் செல்லும் கேள்விகள். அவற்றுக்கு பதிலளிக்க முடியாது. அதனால் பயனில்லை.

ஓர் ஐயம், அல்லது வினா நடைமுறை சார்ந்த தளத்தில் இருந்து எழவேண்டும். நாம் நடைமுறையில் ஒன்றைச் செய்து அந்த ஐயத்தை அடையலாம். அல்லது அப்படிக் கற்பனை செய்து அடையலாம். அவ்வாறன்றி நடைமுறையே இல்லாமல் யோசிக்கும்போது வீண்வினாக்களே எழும்.

உங்கள் வினாவுக்கே வருகிறேன். வெண்முரசு ஒரு பெரிய படைப்பு. அதை எழுதியவன் அதன் சிந்தனைக்களத்தில், மொழிக்களத்தில் தன்னை சிக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. (பல பெரும்படைப்பாளிகள் அவர்கள் எழுதிப்பழகிய நடையிலும் கதைக்களத்திலுமே வாழ்நாள் முழுக்க நீடிப்பவர்கள்)

அவ்வாறன்றி, அதிலிருந்து மீண்டு முன்செல்லவேண்டும் என்பதை எனக்கான நெறியாக வகுத்துக்கொண்டேன் என்று சொல்கிறேன். ஆகவே அந்த நாவல்தொடரின் சிந்தனை, கதைக்களம், மொழிநடை ஆகியவற்றை முற்றாகக் கைவிட்டு சிறுகதைகள் மற்றும் வேறுவகை நாவல்கள் வழியாக என்னை முன்னகர்த்திக்கொண்டேன் என்று சொன்னேன்

அந்நாவல்கள் நான் எழுதியவை அல்ல என்று சொல்லவில்லை. அவற்றுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றும் சொல்லவில்லை. அவற்றில் உள்ளவற்றை மறுக்கவுமில்லை. அவற்றை முன்வைக்க மாட்டேன் என்று சொல்லவுமில்லை. அதன் களத்தையும் மொழியையும் உளநிலையையும் திரும்பச்செய்ய மாட்டேன் என்று மட்டுமே சொன்னேன்.

இதை என் கதைகளை வாசிக்கும் எவரும் கண்கூடாக உணரலாம். சிந்தித்துக் குழம்ப இதில் ஒன்றுமே இல்லை. நீங்கள் அப்படியென்றால் அந்த புத்தகங்களை கைகளால் தொட்டாலோ, அவற்றில் கையெழுத்திட்டாலோ, அவற்றை வாசிப்பவர்களிடம் உரையாடினாலோ அந்நாவலை ‘கைவிட்டது’ என்பது பொய்யாக ஆகுமல்லவா என்கிறீர்கள்

இந்த வினா உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக உங்களுக்குப்படுகிறது என்றால் சொல்ல ஒன்றுமே இல்லை. ஏனென்றால் அந்த வகை விவாதத்திற்குப் பொருள் இல்லை.

சிந்தனை என்பது அடிப்படையில் வாழ்க்கைசார்ந்து, நடைமுறை சார்ந்து நிகழவேண்டும். வெறும் ஊகங்கள், தர்க்கத்துக்கான தர்க்கங்கள் நேர வீணடிப்பு. இரு கேள்விகளை நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்

அ. உங்கள் சிந்தனை திட்டவட்டமான நடைமுறைக்களத்தில் இருந்து, உறுதியான செய்திகளில் இருந்து உருவாகின்றதா?

ஆ. நீங்கள் ஒரு கேள்வி சார்ந்து சாத்தியமான எல்லா பதில்களையும் நீங்களே யோசித்துவிட்டீர்களா?

அதன்பின்னரே அதை விவாதிக்க முயலவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி
அடுத்த கட்டுரைவேண்டுதலா தியானமா?