இன்றைய உளச்சோர்வுகள்

ஒரு நண்பருக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள—

உங்கள் கடிதம் படித்தேன்.

ஒரே ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் சொந்த உலகியல் நன்மைக்கும் சொந்த மகிழ்ச்சிக்கும் அல்லாமல் ஏதாவது செய்கிறீர்கள?

உங்கள் கடித முழுக்க திரும்பத் திரும்ப நீங்கள் ‘மகிழ்ச்சியாக இருக்க’ என்னென்ன செய்தீர்கள் என்று இருக்கிறது. அதற்கு ‘மற்றவர்கள்’ என்னென்ன தடைகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

இந்த வகைக் கடிதங்களில் எல்லாம் இருப்பது ஒன்றே. சுயநலம். சோம்பல். வெற்று பெருங்கனவுகள். சோர்வு. நான் ஆக்கபூர்வமாக வாழ்வதே வெற்றி என நினைத்த தலைமுறையைச் சேர்ந்தவன். அதுவேண்டும் இது வேண்டும் என சிணுங்கிக்கொண்டே இருக்கும் இந்த தலைமுறை பெரும் சலிப்பை ஊட்டுகிறது

இன்று தேவையற்ற சோர்வுகளைப் பெருக்கிக்கொண்டு, திரும்பத்திரும்ப ‘டிப்ரஷன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் காண்கையில் முதலில் பரிதாபமும் மெல்லமெல்ல ஒரு சீற்றமும் உருவாகிறது. இந்த வெட்டித்தலைமுறைக்கு என்ன சொல்லி என்ன என்று தோன்றிவிடுகிறது

இயல்பான உளச்சோர்வு அவ்வப்போது வந்துசெல்லலாம். சிலருக்கு நோய் போன்ற தவிர்க்கமுடியாத உளச்சோர்வுக்காரணங்கள் இருக்கலாம். அவ்வாறன்றி உளச்சோர்வில் நீடிப்பவர்கள் உள்ளூர அதை விரும்புகின்றனர். அதை ஓர் அடையாளமாகக் கொள்கின்றனர்.

பெரும்பாலும் நீடித்த உளச்சோர்வு கொண்டவர்கள் சோம்பல், செயல்திறனை வளர்த்துக்கொள்ளாமை, தன்னலம் ஆகியவற்றிற்கான சாக்குபோக்காக உளச்சோர்வை கொண்டிருக்கின்றனர். நான் பார்த்தவரை பிறருக்காக எதையேனும் செய்பவர்கள், சமூகப்பணி ஆற்றுபவர்கள், அளித்துச்செல்பவர்கள் ஒருபோதும் உளச்சோர்வில் நீடிப்பதில்லை. அவர்கள் செயலூக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

களச்செயல்பாடே இல்லாமல், உளச்சோர்வுக்கான ஒரு வெளிப்பாடாக மட்டுமே அரசியலைக்கொண்டிருப்பவர்கள்

உளச்சோர்வில் வாழ்பவர்கள் பெரும்பாலும் எளிமையான சுயமைய நோக்கு கொண்டவர்கள். பிறருக்கு எதையும் அளிக்காதவர்கள், இந்த உலகமே தனக்கு எல்லாவற்றையும் அளிக்கும்பொருட்டு உருவாகி தன்னைச் சூழ்ந்திருப்பது என நினைப்பவர்கள். ஆகவே பிறர் பற்றிய உளக்குறைகள் கொண்டிருக்கிறார்கள். பிறரைச் சார்ந்திருப்பார்கள், ஆனால் பிறரை மிக எளிதாக அவமரியாதையும் செய்வார்கள், புண்படுத்துவார்கள்.

எனக்கு ‘வெறும் குமாஸ்தாக்கள்’ ஆகவே வாழ்ந்து மடிபவர்கள் மேல் ஓர் அருவருப்பு எப்போதுமுண்டு. குமாஸ்தாவாழ்க்கையின் எளிமையான அன்றாடச்சுழற்சி, பாதுகாப்பு வளையம் ஆகியவற்றை மகிழ்ச்சியாக அனுபவித்தபடி அதை குறைகூறிக்கொண்டிருப்பார்கள். அதாவது அவர்கள் எதுவோ அது அல்ல அவர்கள், அவர்கள் மேலும் பலமடங்கு பெரியவர்கள், உரிய இடத்தை அடையாதவர்கள் என நம்ப ஆசைப்படுகிறார்கள். அதற்காக அந்த சோர்வையும் சலிப்பையும் நடிக்கிறார்கள். எதை நடிக்கிறோமோ அதுவே ஆகிவிடுகிறோம்.

அத்தனை சலிப்பிருந்தால் கிளம்பிச்செல். உன் கனவுகளை துரத்து. களத்தில் நின்று போராடு. எது நீயோ அதை நிகழ்த்து. அதில் மடியவும் தயாராக இரு. அதுவே மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான ஒரே வழி. அதைத்தான் கீதை சொல்கிறது.

அதைக்கேட்டதுமே அப்படியே சுருங்கி மீண்டும் அந்த குமாஸ்தாச்சுருளுக்குள் ஒடுங்கிக்கொண்டு முனக ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த வெட்டி ஆளுமைகளிடம் பேசுவது சொல் விரயம்

 

ஜெ

முந்தைய கட்டுரைகாணொளிகள் கடிதம்
அடுத்த கட்டுரைஆசாரங்கள் எதுவரை தேவை?