காணொளிகள் கடிதம்

வணக்கம் ஜெ,

உங்களுடைய முழுமை அறிவு காணொலியைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். எந்தக் குறிப்பையும் பார்க்காமல் சொல்லும்போது அதன் flow தடையில்லாமல் செல்கிறது. எளிமையான எடுத்துக் காட்டுகளின் வழி முழுமை அறிவு விஷயங்களை அழகாக நிறுவுகிறீர்கள். 15 நிமிடங்களுக்குள் நீங்கள் பேசும் இந்தக் காணொலிகள் பரவலாகப் போய்ச் சேரும் கண்டிப்பாக. நன்றியும் மகிழ்ச்சியும் ஜெ.

கோ.புண்ணியவான்

எல்லா காணொளிகளும் யூடியூப் இணைப்பு

அன்புள்ள புண்ணியவான்,

இந்தக் காணொளிகள் எல்லாமே விளம்பரங்கள்தான், எங்கள் நிகழ்வுகளை அறிமுகம் செய்கிறோம். இவற்றின் அமைப்பும் மொழிநடையும் எல்லாமே கவனம் ஈர்ப்பதற்கானவை. ஆனால் பெருவாரியான மக்களின் கவனம் எங்களுக்குத் தேவையில்லை, அது பிழையாகவும் ஆகலாம். எங்களுக்குத்தேவை குறிப்பான வாசகர்கள். எங்கள் நிகழ்வுகளுக்கு வரும் வாய்ப்புள்ளவர்கள்

ஆகவே மூளையைச் சீண்டும் ஒரு சிந்தனைக்கீற்று, ஒரு கேள்வி, ஒரு தொடக்கம் – அது மட்டுமே இந்தக் காணொளிகளில் இருக்கும். அந்தக் கேள்விக்குச் சமானமான, அந்த தொடக்கத்திற்கு அணுக்கமான ஒரு சிந்தனையை ஏற்கனவே கொண்டிருப்பவர் உடனே அவருடைய அகத்துடன் என்னை தொடர்புபடுத்திக்கொள்வார். மேலும் சிந்திக்கவும், முன்செல்லவும் தூண்டுதலை அடைவார்

அத்தகையோர் வந்துகொண்டே இருக்கிறார்கள். அது இக்காணொளிகள் வெற்றி என்பதற்கான சான்று

ஜெ

முந்தைய கட்டுரைஆன்மீகத்திற்கு அறிவியல் விளக்கம் தேவையா?
அடுத்த கட்டுரைஇன்றைய உளச்சோர்வுகள்