கோணலின் தொடக்கம்

அன்புள்ள ஜெ

பறவைபார்த்தல் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். என் 16 வயது மகனிடமும் 15 வயது மகளிடமும் அதற்கு செல்லுங்கள் என்று சொல்லி மன்றாடிப்பார்த்தேன். அவர்களுக்கு அக்கறையே இல்லை.

இருவரும் கம்ப்யூட்டர்கேம் அடிமைகள். ‘கேம்’ என்பதுதான் வாழ்க்கை. ஆனால் மனப்பாடம் செய்து மார்க் வாங்கிவிடுவார்கள். ‘அதான் மார்க் வாங்குறோம்ல?” என்று சொல்கிறார்கள். படிப்பார்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

என் பிரச்சினை அவர்களுக்கு வாழ்க்கையே தெரியவில்லை என்பதுதான். கேம்- ஃபுட் இரண்டும்தான் வாழ்க்கையே. இரண்டுபேருமே நல்ல குண்டு. இந்த வயதிலேயே கால்கள் வளையும் அளவுக்கு. பத்தடி நடக்க முடியாது. ஐந்தாண்டுக்கு முன்புவரை இரண்டுபேருக்கும் கிரிக்கெட் பிடிக்கும். இப்போது எவர் விளையாடுகிறார்கள் என்றே தெரியாது. கேம் விளையாடுவதிலும் முழுக்கவனம் இல்லை. வேறு பாட்டு போட்டுக் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் விளையாடுகிறார்கள்.

செய்தித்தாளில் ஒரு பத்தி கூட படிக்கமுடியாது. அரசியலே சுத்தமாக தெரியாது. எடப்பாடி பழனிச்சாமி என்று போன ஆண்டு சொன்னேன். யாரென்றே தெரியவில்லை. இந்த ஊர் அரசியல் மட்டும் அல்ல வெளியூர் அரசியலும் தெரியாது. சினிமாகூட தெரியாது. ரஜினி கமல் விஜய் எந்தப்படத்திலும் ஆர்வமில்லை. ஹாலிவுட் படங்களில் அனிமேஷன் படங்களில் மட்டும்தான் ஆர்வம் இருந்தது. இன்றைக்கு அதுவும் இல்லை.

அவதார் நாங்களெல்லாம் போய் பார்த்த படம். அவதார் 2 பார்க்க வா என்று கூப்பிட்டேன். ஆர்வமே இல்லை. படம் ஆரம்பித்த அரைமணிநேரத்தில் வெளியே போய் செல்போனில் கேம் ஆட ஆரம்பித்தாகிவிட்டது. பறவைபார்த்தலுக்கு வந்தால் ஓர் ஆர்வம் வரும் என நினைத்தேன். அவர்களுக்கு ஆர்வம் இல்லை. நீங்கள் பேசிப்பார்க்க முடியுமா?

ஶ்ரீ

அன்புள்ள ஶ்ரீ

அடிப்படையில் உங்களிடம் இருந்த – இருக்கும் ஏதோ பிரச்சினைதான் அவர்கள் இப்படி இருக்க ஒரு காரணம். அதை நீங்கள்தான் சரி செய்யவேண்டும்.சரி செய்ய முடியாவிட்டால் பொறுப்பேற்கவேண்டும். நான் தலையிடமுடியாது

ஜெ

முந்தைய கட்டுரைஎத்தனை வகுப்புகள்?
அடுத்த கட்டுரைசாதி