சாதி

அன்பான ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சாதிகள் எவ்வவாறு தோன்றியது? ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவை போரில் வென்று அடிமைப்படுத்தியபோது, அடிமைப்படுத்தப்பட்ட குழு கீழ்சாதியாக மாறியதா?

சாதிய கட்டுமானங்கள் எப்படி உருவாயிற்று? தொழிலை அடிப்படையாக கொண்டு உருவாயிற்றா?

சித்ரா.

சாதி ஓர் உரையாடல் – வாங்க

 அன்புள்ள சித்ரா

அடுக்கதிகாரம் ( heirarchy ) வழியாகவே எந்த அரசும், எந்தச் சமூகமும் செயல்பட முடியும். மேலுக்கு மேலே அடுக்கப்பட்ட அதிகார வர்க்கங்களால் ஆனது எந்த சமூகமும், இன்றும். 

இன்று, உழைப்பும் திறமையும் அளவுகோல். தொழிற்புரட்சிக்கு முன்னால் மனிதன் உழைப்பாலோ திறமையாலோ மதிப்பிடப்படவில்லை. ஏனென்றால் அதற்கான புறவயமான அமைப்புகள் இல்லை. அன்றைய சமூகம் நிலைத்த தன்மையை நாடியது. நிலைத்த தன்மை என்பது பிறப்புதான். ஆகவே எல்லா நிலப்பிரபுத்துவ (feudal) சமூகங்களும் பிறப்படிப்படையிலேயே தங்களை பிரித்துக்கொண்டு, அடுக்கதிகாரத்தை உருவாக்கின. அன்று ஆட்சியாளர்களும் பிறப்பாலேயே தீர்மானிக்கப்பட்டனர். 

பொதுவாக, மதத்தலைவர்கள், அரசர்கள் மற்றும் போர்வீரர்கள், வணிகர்கள், நிலவுடைமையாளர்கள், உழைப்பாளிகள் என்னும் பிரிவினை உலகமெங்கும் இருந்தது.அது பிறப்பாலேயே அமைந்தது. செயல்களால் அமைந்தாலும் பின்னர் பிறப்பால் ஆனதாக மாறியது.

ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழிற்புரட்ச்தான் அந்த பிறப்படிப்படைகளை மெல்ல மெல்ல ரத்து செய்தது. ஆயினும் பிரபுக்கள், அடித்தளத்தோர் என்னும் பிரிவினை இன்றும்கூட நீடிக்கவே செய்கிறது. 

இந்தியாவில் பல ஆயிரம் பழங்குடிகள் இருந்தனர். பற்பல ஆயிரம் இனக்குழுக்கள் இருந்தன. அவை’, அந்தந்த காலகட்டத்தில் அவை செய்த தொழிலுக்கு ஏற்ப மேல் மேலே அடுக்கப்பட்டு இங்கு இருந்த நிலப்பிரபுத்துவ கால அதிகாரம் உருவாக்கப்பட்டது. அதுவே சாதி. வென்ற சாதி, நிலம் கொண்ட சாதி உயர்நிலையில் தன்னை வைத்துக்கொண்டது. கீழே புதிய சாதிகளை அடுக்கிக்கொண்டே இருந்தது. அது எவரும் திட்டமிட்டுச் செய்த சதி அல்ல. அன்றைய பொருளியல்- சமூகவியல் கட்டுமானம் அது. தன்னியல்பாக பல நூற்றாண்டுகளாக வரலாற்றில் நிகழ்ந்தது. 

நான் சாதிகளைப் பற்றி ஒரு நூலாகவே இதையெல்லாம் எழுதியுள்ளேன்

ஜெ 

சாதியை இந்துமதம்தான் உருவாக்கியதா?

முந்தைய கட்டுரைகோணலின் தொடக்கம்
அடுத்த கட்டுரைவிபாசனா, கடிதம்