தலைகொடுத்தல்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

எனது கணவர் உங்களது மாபெரும் வாசகர் என்ற அடிப்படையில் உங்களின் பெயர் எனக்கு அறிமுகமாகியது. குடும்பம் குழந்தை என்று என்னை சுற்றி ஒரு குறுகிய வட்டத்திற்குள் எனது நினைவுகளை செலுத்தி புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகம் கொண்டிராத ஒரு சாதாரண சாமானிய பெண்ணாகவே என்னை இதுநாள் வரைக்கும் கண்டு வந்தேன்.

என் கணவர் மூலமாக உங்களது படைப்புகளில் ஒன்றான அறம் சிறுகதை என் கவனத்திற்கு வந்தது. வாசித்தேன், எனக்குள் உண்டான உணர்ச்சிகளுக்கு என்னால் வார்த்தை கொடுக்க தெரியவில்லை. ஆனால் ஒரு புதுவித அனுபவம் என்னை புத்தகங்கள் வாசிக்க தூண்டியது. அது மட்டுமில்லாமல் ஒரு தவறு நடக்கும் பொழுது ஒரு பெண்ணின் வாழ்க்கைக்காக எனது அப்பாவையும் எதிர்த்து நிற்பது தவறல்ல என்ற தைரியம் உங்களது எழுத்துக்கள் எனக்கு அளித்ததுஎன் மகனுக்கும் பனிமலை கதையை வாசித்து காட்டினேன். அவனுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் மீண்டும் இரண்டு முறை வாசித்துகாட்டினேன்இப்பொழுது உடையாள் கதையை அவனுக்கு  வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 தேதிகளில் நடந்த தத்துவ வகுப்பில் பங்கேற்பதற்காக எனது கணவர் பதிவு செய்தார். எனக்கு தத்துவம் பற்றிய அறிவு பூஜ்யம் ஆனால் உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நானும் கூட வருவேன் என அடம்பிடித்து எங்களது இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்தோம். அந்த வகுப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்த மூன்று நபர்கள் எனது குழந்தைகள் மற்றும் நான். “ரஸல்என்ற தத்துவவாதியை தெரியாதவர் யாருமில்லை என்றிற்கள், ஆனால்  உண்மையிலேயே அவர் யார் என்று தெரியாமல் நான்  அங்கே பேந்த பேந்த விழித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பயன்படுத்திய நுட்ப வார்த்தைகள் அனைத்துமே எனக்கு புதியவையாகவும் , புரியாதவையாகவும் இருந்தது. ABCD தெரியாமல் இலக்கணம் கற்றுக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.

அதனால் இரண்டாவது நாளே கிளம்பிவிடலாம் என்று Taxi யை வர சொல்லிவிட்டோம். ஆனால் அன்று காலை நேர உணவு வேலையில் உங்களை பார்த்ததும் மனம் மாறிவிட்டது. இருந்து உங்களது வகுப்பை முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வந்த taxi யை திருப்பி அனுப்பிவிட்டோம். இதுகுறித்து அந்தியூர் மணி அவர்களை நாங்கள் (குறிப்பாக நான் ) பாடாய் படுத்திவிட்டோம். அவர் பொறுமையாக எங்களை கையாண்டதிற்கு மிகவும் நன்றி.

உங்களது வகுப்பிற்கு வருவேன் என்று அடம் பிடித்து வந்தேன், ஆனால் அங்கு வந்து உங்கள் வகுப்பை பார்த்தும், மற்ற அனைவரும் (என்னை தவிர) உங்களுக்கு பதில் அளித்ததை பார்த்தும் எனக்கு வியப்பாக இருந்தது. மற்றவர்களுடன் பேசுவதற்கே எனக்கு தயக்கமாக இருந்தது. உங்களை மற்ற நேரங்களிலோ, உணவு விடுதிகளிலோ பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. அதனாலேயே விலகி விலகி நின்றுகொண்டிருந்தேன்.

தத்துவம் என்றால் என்ன? ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள், நான்கு வேதங்கள் என்று நீங்கள் எடுத்த வகுப்புகளில் நூறு சதவீதத்தில் என் அறிவிற்கு ஒரு சதவீதமாவது என் மண்டையில் ஏற்றியதில் எனக்கு  மகிழ்ச்சி.

எனது இரண்டாவது மகன் உங்கள் வகுப்பில் நீண்ட நேரம் அமர முடியாததால் நாங்கள் இடை இடையே எழுந்து சென்றுகொண்டிருந்தோம் அதுகுறித்து உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு உங்களுக்கு கடிதம் எழுதலாமா என்று எனக்கு தெரியவில்லை. எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதி விட்டேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு

லோகாம்பாள் 

அன்புள்ள லோகாம்பாள் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் கண்டேன்.

தத்துவம் என்பது தன்னளவில் சிந்தனையில் முற்றிலும் ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கு எளிய விஷயம் அல்ல. அதற்கு அறிவார்ந்த ஓர் அடிப்படை தேவை. அறிவார்ந்த பயிற்சியும் அப்பயிற்சிக்கான மனநிலையும் தேவை. பொதுவாக சிந்தனைக்குக் கொஞ்சம் அறிமுகமாகி, அதன்பின்னரே நாம் தத்துவத்திற்கு வருகிறோம்

அதிலும் என் தத்துவ வகுப்புகள் ஓரளவு இலக்கியம்தத்துவம் சார்ந்த ஆர்வமும் பயிற்சியும் கொண்டவர்களுக்கு உரியவை. ஒரு தத்துவ வகுப்பு அப்படித்தான் இருக்க முடியும் இல்லையா? நான் முடிந்தவரை நேரடியாக, எளிமையாக, சுவாரசியமாகவே நடத்துகிறேன். ஆனாலும் அதற்கு ஓர் அடிப்படையான தரம் இருக்கும். அதை மாணவர்கள் கடந்தாகவேண்டும்.

ஆனால், நீங்கள் சொல்வதைப்போல ஒன்றுமே தெரியாதவர் என்றாலும்கூட சற்று கவனித்தால் ஓர் ஆர்வத்தை அடைய முடியும்.  ஒரு தொடக்கத்தை அடைய முடியும். அந்த தொடக்கம் சாமானியமானது அல்ல. மிகப்பெரிய ஓர் உலகுக்குள் நுழைகிறீர்கள். உங்கள் ஒட்டுமொத்த உலகப்பார்வையும் மாறவிருக்கிறது. உங்கள்  சிந்தனை மாறவிருக்கிறது. சொந்த குணச்சித்திரமே மாறப்போகிறது. உங்கள் வாழ்நாளெல்லாம் நீடிக்கும் ஒரு பெரும் நிகழ்வு தொடங்கவிருக்கிறது.

ஒரு புதிய கலையில் அல்லது ஒரு புதிய அறிவுலகில் நுழைவது எப்போதுமே மிக சவாலானது. உதாரணமாக, கர்நாடக இசையை சாதாரணமாகக் கேட்க ஆரம்பித்ததுமே இதெல்லாம் நம்மால் கேட்கமுடியுமா என்ற மலைப்பு உருவாகும்.அதை தெரிந்தவர்கள் பேசும் ராகங்களின் பெயர்கள் திகைக்கச் செய்யும். நம்மால் உள்ளே நுழையவே முடியாது. பலர் அந்த தொடக்கத்தயக்கத்திலேயே நின்றுவிடுவார்கள்

ஆனால் அந்த முதல் திரையை கிழித்தவர்கள் ஒரு பயணத்தை தொடங்கிவிடுவார்கள். உதாரணமாக, திருவையாறு தியாகராஜ உத்ஸவத்திற்கு ஒருவர் சென்றாரென்றால் அங்கே 3 நாட்களில் நூறு தியாகையர் பாடல்களாவது காதில் விழும். அதன்பின் எங்கே அப்பாடல் கேட்டாலும் கவனிக்கத் தோன்றும். அவ்வாறு இசைக்குள் நுழைந்துவிடலாம்.

சிலர் தற்செயலாக உள்ளே வருவதுண்டு. என் நண்பர் ஒருவர் ஆற்றூர் ரவிர்வர்மாவிற்கு துணையாக தஞ்சையில் இருந்து வந்தார். (தஞ்சையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த மலையாளி). இன்று அவர் இசைநிபுணர். அவர் விரும்பி வந்தது அல்ல. 

அதைப்போல 2008 ல் எங்களுக்கு இந்தியப்பயணத்தில் கார் ஓட்டிய ரஃபீக் பாபு என்னும் நண்பர் அப்பயணத்தில் நாங்கள் பேசிய சிற்பம்ஆலயம் பற்றிய செய்திகளை கேட்டு முதலில் எனக்கு ஏதோ உளச்சிக்கல் என்றுதான் நினைத்தார். நாங்கள் ஏதோ மர்மக்கும்பல் என கருதினார். ஆனால் 20 நாட்கள் அப்பேச்சு காதில் விழுந்துகொண்டே இருந்தது. கடைசியில் அவர் ஆலயங்களைப் பார்க்க ஆரம்பித்தார். இன்று அவர் இந்தியச் சிற்பக்கலையில் நிபுணர். அவருடைய தொழிலே சிற்பங்களை கொண்டு காட்டுவதுதான்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ உள்ளே வந்துவிட்டீர்கள். இது உங்கள் ஊழின் நிமித்தமாகக்கூட இருக்கலாம். கற்ற வகுப்பை நினைவுகூருங்கள். குறிப்புகளை மீண்டும் படியுங்கள். கொஞ்சம் உழைப்பை அளியுங்கள். அடுத்தடுத்த வகுப்புகளில் காட்சி தெளிவடைந்தபடியே வரும். ஓராண்டில் ‘எங்கிருந்து எங்கே வந்துவிட்டோம்’ என்ற திகைப்பை அடைவீர்கள்.

தெளிவாகப்புரியவில்லை என்றால், தேவை என்றால் செப்டெம்பரில் நிகழும் அதே வகுப்புக்கு மீண்டும் வரலாம்.

இந்திய வாழ்க்கையில் நாம் 20 வயதுக்குமேல் எதையுமே கற்பதில்லை. மூளைக்கு வேலையே அளிப்பதில்லை. ஆகவே நம் மூளை சோம்பலுறுகிறது. காலப்போக்கில் உளச்சோர்வு முதலிய நோய்களில் வீழ்கிறது. உடல்நலமில்லாமல் ஆக்கிவிடுகிறது. அதை வெல்லும் வழி மூளைக்கு வேலைதான். நான் அதை மூளையை சாட்டையாலடியுங்கள்! என எழுதியுள்ளேன்.

முதுமையை நெருங்கும்போது இந்த ‘மூளைச்சேறு’ நம்மை அழுத்தமாகக் கவ்விக்கொண்டுவிடுகிறது. வெளியே வரமுடியுமா என்றே தோன்றிவிடுகிறது. வெளியேறவேண்டும் என்று தோன்றுபவர்களே லட்சத்தில் ஒருவர்தான். அவர்கள் முயன்றால் முடியும். அந்த வயதில் செய்தே ஆகவேண்டிய பயிற்சி அறிவுச்செயல்பாடுதான். அதற்காகவே முழுமையறிவு நிகழ்வுகள்.

உங்கள் பிழை என்னவென்றால் மகனை அழைத்துவந்தது. தத்துவம் என்பது முழுமையாக ஈடுபட்டு , முழு உள்ளத்தையும் அளித்து, ஈடுபடவேண்டிய ஒரு துறை. ஒரு சுற்றுலா போல அதில் கலந்துகொள்ளக்கூடாது. பிற பணிகளுடன் கலந்து அதைக் கற்க முயலக்கூடாது.

உங்கள் பிரச்சினை நீண்டகால மூளைச்சோம்பல். அதை வென்றே ஆகவேண்டும். மூளையை உசுப்பி வேலை வாங்கியாகவேண்டும். அது உளத்திற்கும் உடலுக்கும் நல்லது. உங்கள் கடிதத்தின் மொழியே நீங்கள் கோர்வையாக சிந்திக்கக்கூடியவர் என்பதற்கான சான்று. உங்களுக்கு ஆறு மாதம்கூட தேவைப்படாது, தீவிரமாக வாசிக்க மட்டுமல்ல, எழுதவும்கூட.

அறிவியக்கம் என்பது ஒரு தெய்வம். தலைகொடுக்கத் துணிந்தவர்களுக்கு உடனே கனிவது, அருள்வது.

ஜெ

 

மூளையை சாட்டையாலடியுங்கள்!

 

முந்தைய கட்டுரைபறவைபார்த்தலும் குழந்தைகளும்
அடுத்த கட்டுரைஆன்மீகத்திற்கு அறிவியல் விளக்கம் தேவையா?