பறவைபார்த்தலும் குழந்தைகளும்

அன்புள்ள ஜெ

அக்டோபர் 11 12 மற்றும் 13ல் நிகழும் பறவைபார்த்தல் நிகழ்வுக்கு என் 5 வயது மகனை அழைத்து வரலாமா? அவனுக்கு இப்போதே இயற்கையுடன் ஓர் அறிமுகம் நிகழவேண்டும் என நினைக்கிறேன். இல்லையேல் அவன் செல்போனிலும் கம்யூட்டர் கேமிலும் மூழ்கிவிடுவான் என்று பயமாக இருக்கிறது. அவன் படிப்பது நல்ல பள்ளியில். ஒன்றாம் வகுப்புதான் படிக்கிறான். ஆனால் பள்ளிச்சூழலில் எல்லா பேச்சுமே கம்ப்யூட்டர்கேம் பற்றித்தான். அனிமேஷன் கேரக்டர்கள் தவிர ஒன்றுமே தெரியாது. இயற்கையை இப்போதே அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன்

வசந்த்

அன்புள்ள வசந்த்

நாங்கள் பறவைபார்த்தலை தொடங்கியபோது உத்தேசித்தது நடுநிலை- உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு தொடக்க வகுப்பு. ஆனால் வந்தவர்கள் பெரும்பாலும் குழந்தைகள். குழந்தைகளுக்கு எப்படிக் கற்பிப்பது, அவர்கள் கவனிப்பார்களா என்ற ஐயமும் குழப்பமும் இருந்தது. ஆனால் அவர்கள் கவனித்தார்கள், ஈடுபட்டார்கள். அது ஓர் இனிய ஆச்சரியம்.

குழந்தைகளுக்குத்தான் அந்த அறிமுகம் இன்று தேவையாக உள்ளது. அதை பல பெற்றோர் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே குடும்பத்துடன் வருகிறார்கள். ஆனால் மிக அவசியமாகத் தேவையாக உள்ள இளவயதினருக்கு அக்கறையே இல்லை. அவர்களிடம் இந்த வகையான ஈடுபாடுகள் எப்படி அவர்களின் உலகையே மாற்றியமைக்கும் என்று சொல்லவும் வழியில்லை. பெற்றோர்கூட சொல்லிவிடமுடியாது.

ஆகவே பெற்றோர் வழிநடத்தும் வயதில் உள்ள குழந்தைகளுக்குத்தான் இவ்வகுப்பை நடத்தமுடியும் போலும் என எண்ணிக்கொண்டோம். அவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கலாம். அவர்கள் எளிதில் உள்ளே செல்லலாம்.

ஆனால் சிறுகுழந்தைகளுக்கு பெற்றோர் உடன் வந்து சொல்லிக்கொடுக்கவேண்டும். தாங்கள் புரிந்துகொண்டு, அக்குழந்தைக்குப் பழகிய மொழியில், அவற்றை திரும்பச் சொல்லி புரியவைக்கவேண்டும். அதற்கு பெற்றோருக்கு பறவையியல் ஆர்வம் இருக்கவேண்டும். அவர்கள் இங்கே பெறும் பயிற்சியை வீட்டிலும் தொடரவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைகவனம், கடிதம்
அடுத்த கட்டுரைதலைகொடுத்தல்