அறியாமை பேரின்பமா?

 அன்புள்ள ஜெ,

அறியாமையே பேரின்பம் (Ignorance is bliss) என்றும் “அறிதல் தரும் ஆனந்தம்” பற்றியும் எங்கும் படிக்கக் கிடைக்கிறது. இவை முரண்பட்ட கருத்துகளா அல்லது வெவ்வேறு தளங்களா எனத் தெரியவில்லை. உங்கள் பதில் கிடைத்தால் மகிழ்வேன்.

அன்புடன்,

கிருஷ்ணமூர்த்தி

 

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

முழுமையான அறியாமை என்று ஒன்று உண்டு. குழந்தைகளிடம் இருப்பது. உளவளர்ச்சி அற்றவர்களிடம் உள்ளது. வெகுளிகளிடம் அது உண்டு. அரிதாக பிறப்பிலேயே ஞானம் கனிந்த சிலரிடமும் அது உண்டு.

அது இப்புவியின் பாவங்களும் பழிகளும் அணுகாத நிலை. பாவங்களும் பழிகளும் ஓர் உள்ளத்தை அணுகுவது ஒரே பாதை வழியாகத்தான். அதை அகங்காரம் என வேதாந்தம் வகுக்கிறது. அகங்காரம் நம் அன்றாடவாழ்க்கையில் தன்னலம், தன்முனைப்பு என்னும் இரண்டு நிலைகளாக அறியப்படுகிறது. அகங்காரம் அற்ற நிலையே முழுமையான அறியாமை என்று சொல்லத்தக்கது. அது அமைந்தால் அது இன்பநிலைதான் விடுபட்ட நிலைதான்.

ஆனால் உயிர்களில் முதலில் தோன்றுவதே அகங்காரம்தான். ஆணவமலம் என அதை சைவசித்தாந்தமும் சொல்கிறது. கருப்புகுந்ததுமே அந்த முதல் அணுவுக்கு நான் இங்கிருக்கிறேன், நான் வளர்வேன் என்று தோன்றும் தன்னுணர்வே ஆணவமலம். அது உருவானபின்னர்தான் உடலே உருவாக ஆரம்பிக்கிறது.

அந்த அகங்காரம் அல்லது ஆணவமலம் துளியளவு எஞ்சுபவர்கள்கூட அறிவால் மட்டுமே மகிழ்ச்சியையும், விடுதலையையும் அடையமுடியும். அறிவுதான் அகங்காரம் உருவாக்கும் துயரத்தில் இருந்து விடுதலை செய்வது. அந்த அறிவு உருவாக்கும் அறிவாணவத்தில் இருந்து விடுதலை செய்வதும் அறிவைக் கடந்த பேரறிவுதான்.

அறிவு இல்லாத இடத்தில் வெறும் ஆணவம் மட்டுமே இருக்கும். அறிவு குறையக்குறைய ஆணவம் கூடிக்கொண்டே செல்வதை சூழலில் காணலாம். நாம் படிப்பற்றோர், பாமரர் என நினைப்பவர்கள் ஆணவமற்றவர்கள், எளியோர் என நினைக்கிறோம். அது உண்மையல்ல என கடுமையான அனுபவங்கள் வழியாகச் சிலர் கற்றுக்கொள்கிறார்கள்.

கல்லாப்பாமரர் பிறரை விட பலமடங்கு ஆணவம் கொண்டவர்கள். பொருளியல்நிலையில் கீழே இருந்தால் அவர்கள் அதனாலேயே ஒரு பணிவை கைக்கொள்வார்கள் – அது அவர்களின் ஆணவத்தை மறைக்கிறது. அவர்கள் சற்று பொருள் ஈட்டினால் அந்த ஆணவம் மூர்க்கமாக வெளிப்படும். எளியவர் என்றாலும் சந்தர்ப்பம் அமைந்தால் ஆணவமே வெளிப்படும்.

அந்த ஆணவத்தால் அவர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதை நம் கற்பனாவாதத்தைக் கொஞ்சம் ஒத்திப்போட்டுவிட்டு கவனித்தால் புரிந்துகொள்ளலாம். கல்லா எளியோர் எப்போதுமே அர்த்தமற்ற அச்சங்களும், ஆசைகளும் கொண்டவர்கள். ஆகவே காழ்ப்பும் பொறாமையும் நிறைந்தவர்கள். பெரும்பாலானவர்கள் எப்போதும் ஏதேனும் ஒரு பூசலில் இருந்துகொண்டிருப்பார்கள். எவருக்கேனும் எதிராகவே உளம் கொண்டிருப்பார்கள். அவர்களின் அத்தனை மகிழ்ச்சியையும் அது இல்லாமலாக்கிவிடும்.

கல்லாப்பாமரருக்கு குடி, தீனி, புணர்ச்சி தவிர உடல்சார்ந்த எளிய இன்பங்கள் தவிர நேர்நிலை மகிழ்ச்சியே இருக்காது, எதிர்நிலை மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். அதை நாம் கண்கூடாகவே பார்க்கலாம்.

ஆனால் நாம் கல்லாதோர் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்ப விரும்புகிறோம். ஏனென்றால் நமது துன்பம் நமது கல்வியால் என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் துன்பம் நமது கல்வி போதாது என்பதனால்தான். நாம் கற்கவேண்டியவற்றை முறையாகக் கற்கவில்லை என்பதனால்தான்.

நம்மில் பெரும்பாலானவர்கள் கல்வி என நினைப்பது எளிய மொழி மற்றும் பொதுப்பாடக்கல்வியும் அதற்கு மேல் கொஞ்சம் தொழிற்கல்வியும்தான். அந்தக்கல்வி உண்மையில் கல்வி அல்ல, எளிய அடிப்படைப்பயிற்சிதான். அதை கல்வி அல்ல என நம்மால் ஏற்கமுடியாது, நம் ஆணவம் புண்படும்.

ஆகவே நம்மை கற்றோர் என நினைக்கிறோம். கல்வியின்மையால் நாமடையும் எல்லா துயரையும் கல்வியின் துயராக கற்பித்துக் கொள்கிறோம். அதன் விளைவே கல்வியற்றோர் மகிழ்ச்சியானவர்கள் என்னும் அசட்டுக் கற்பனை.

கல்வியின் மகிழ்ச்சி என்பது உண்மையா? எந்தக் கல்வியும் அந்த அளவுக்கு மகிழ்வளிப்பதே. அதை நாமனைவருமே அறிவோம். ஒரு சாதாரண கணக்கை போட்டுவிட்டாலே நமக்கு மகிழ்ச்சிதான் உருவாகிறது. ஒரு பிரியாணி தின்பதை விட அது பற்பல மடங்கு மேலான இன்பம் என அறியாத எவருமில்லை.

மெய்யான கல்வி மேலும் மேலும் இன்பம் அளிப்பது. தத்துவக்கல்வி, அறக்கல்வி, அழகியல் கல்வி, பயனுறுக்கல்வி ஆகியவை மகிழ்வை மட்டுமே அளிப்பவை. ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் நாம் கட்டுண்டு இருக்கும் ஒரு சிறையில் இருந்து நம்மை விடுவிப்பவை.

ஜெ

முந்தைய கட்டுரைதத்துவ வகுப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைமுழுமையறிவு சில விளக்கங்கள்