தத்துவ வகுப்பு, கடிதம்

அன்புள்ள ஜெ,

“தத்துவத்தில் தச்சனுக்கு என்ன வேலை” என்று மலை ஏறிக்கொண்டிருக்கும்போது முருகேசன் சொன்னார்.

“கலைஞனுக்கு தத்துவமும் வரலாறும் இரண்டு சிறகுகள் னு ஜெயமோகன் சொல்லிருக்காருண்ணா. சிற்ப வேலைகள் செய்றனால நீங்களும் கலைஞன் தான்.” என்றேன்.

இது எங்களுக்கு மூன்றாவது வகுப்பு. ஆலயக்கலை, யோகம், இப்போது தத்துவம் முதல் நிலை. வரும்வழியிலேயே வகுப்புக்கான இனிய மனநிலையை இயற்கை உருவாக்கி அளித்தது. கொஞ்ச நேரம் மேகத்தினூடே பயணம். ஒரு மேகத்திலிருந்து வெளியேறி இன்னொரு மேகத்தில் நுழைந்தோம். கல்யாண மண்டபத்தில் தெளிக்கும் பன்னீர்போல நீர் சிதறல்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கும் வகுப்பிற்கு வெவ்வேறு இடங்களிலிருந்து சுமார் 70 பேர் வந்திருந்தாலும் ஒருவர் கூட பிந்தி வரவில்லை. உங்களிடமிருந்து நாங்கள் முதலில் கற்றுக்கொள்வது இந்த ஒழுங்கைத்தான். மாணவ :பாவம் (Bhavam).

வகுப்பின் தொடக்கத்தில், பொதுவாக கவனித்தலில் நாம் செய்யும் தவறுகளை சொல்லி (Association Fallacy, Negation Fallacy, Paraphrase Fallacy), அரூபமான ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ளும் முதல் நிலை வகுப்பில் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்றும் சொன்னீர்கள். ஆரம்ப நிலைகளில் பொதுவில் கேள்வி கேட்பதோ, தங்களுக்குள் விவாதித்துக்கொள்வதோ கூடாது. மேலும் தத்துவத்தில் பயன்படும் கலைச்சொற்களை அன்றாடத்தில் கேலி சொல்லாகப் பயன்படுத்தக்கூடாது.

தத்துவம் என்றால் என்ன, அதன் இன்றைய நிலை, மனிதனுக்கு தத்துவத்தின் தேவை என தொடங்கி, மேலைத்தத்துவதின் வரலாறு, இந்திய தத்துவத்தின் வரைபடம் என முதல் அரைநாள் சென்றது. மாலை நேர வகுப்பிற்கு முன் நாங்கள் குறிப்பெடுத்து வைத்திருந்ததை முழு வாக்கியமாக எழுதச் சொன்னீர்கள். நான் பத்து பக்கங்கள் எழுதினேன். பெயர்கள் மறந்துவிட்டது, ஆனால் கருத்துகள் நினைவிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

சமணம் பௌத்தம் நீங்கலாக இந்திய ஞான மரபின் பாடத்திட்டம் நான்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று தத்துவங்களை உள்ளடக்கியது. அவற்றின் வரலாறு, ஞானிகள், அமைப்புகள், அதன் தற்போதைய நிலை என நீங்கள் சொல்லச்சொல்ல ஒரு விரிவான பிரம்மிக்கத்தக்க வரைப்படமாக எங்கள் மனதில் உருவாகி வந்தது. இதை கோர்வையாக்க பெரிய உழைப்பு தேவை. முயற்சிக்கிறோம் என்று மட்டுமே இப்போதைக்கு எங்களால் கூற முடியும்.

இருள் கவியத் தொடங்கும் நேரத்தில் ரிக் வேதத்தின் ஸ்ருஷ்டி கீதத்தை நீங்கள் வாசிக்க கிட்டத்தட்ட நான்காயிரம் வருடத்திற்கு முந்தைய அதே மனநிலையில் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்.

இயற்கை சூழ்ந்த பரந்த வெளியில் சூரிய அஸ்தமனத்தை மௌனமாக கவனித்த அந்த இருபது நிமிடங்கள் முக்கியமானது. பறவைகள் கூடணைந்து கொண்டிருந்தன. பூமியின் நிறம் மாறியபடியே வந்தது. பிரபஞ்ச லீலை எனும் வார்த்தையை மனது அரற்றிக் கொண்டே இருந்தது. இரவில் மாண்டூக்ய வனத்தில் மழைப்பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது.

வகுப்பு நாட்களில் இரவு உறங்க அந்தியூர் மணியிடம் கடைசியாகத்தான் போய் நிற்போம். எப்போதும் Tentல் தான் இரவு உறக்கம். அது தான் எங்களுக்கும் பிடித்திருக்கிறது. தனியறையை விட இப்படி கூட்டமாக பெரிய இடத்தில் உறங்குவது உற்சாகமாக இருக்கிறது. பார்கவி போன்ற அழகிய பாடகர்கள் அமைந்தால் அந்த இடம் மேலும் பொலிவு பெறுகிறது. உங்களின் அருகாமையும் அதில் முக்கியமானது

நீங்கள் விவாதிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தாலும் நானும், சிற்பி முருகேசனும் காரில் செல்லும்போது வகுப்பில் நடத்தியதை திரும்ப பேசிப் பார்த்தோம். ஒரு சொல்லின் வேர்ச்சொல் தேடிப் பொருள் கொள்வது. ஒரு நிகழ்வை தத்துவமாக்குவது போல சில பேச்சுகள். “இரண்டாம் நிலை வகுப்புக்கு Apply பண்ணிடுங்க, ரதீஷ்” என்றார் சிற்பி.

“அண்ணா, டிசம்பர் ல இருக்கலாம் னு சொன்னாரு. இன்னும் announce பண்ணல ணா”  என்றேன். நீண்டகாலமாகவே தத்துவத்தின் மீது ஒரு பயம் கலந்த விலக்கம் இருந்தது. இப்போது ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நேர்நிலை கொண்ட செயலூக்கமே உங்களிடமிருந்து ஒரு ஒளியென நாங்கள் பெற்றுக்கொள்வது என்று தோன்றியது.

தத்துவ வகுப்பிற்கு நீங்கள் செல்லவேண்டும் என்று எங்களை வற்புறுத்திய கவிஞர் சாம்ராஜ், அந்தியூர் மணி, உணவு சமைத்தவர்கள், சக மாணவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கு என் அன்பு. கற்றலின் இனிமை நிறைந்த மூன்று நாட்கள்.

ரதீஷ் வேணுகோபால்

முந்தைய கட்டுரைபதில்கூறக்கூடாதவை!
அடுத்த கட்டுரைஅறியாமை பேரின்பமா?