ஒரு பெண்ணின் கடிதம்

 

ஜெ

ஒரு பெண்ணாக நான் இன்று ஓர் அர்த்தமின்மையை வாழ்க்கையில் உணர்ந்துகொண்டிருக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது மிகவும் சூட்டிகையான பெண்ணாக இருந்தேன். கல்லூரியிலும் அப்படித்தான். மிகச்சிறப்பாக படித்தேன். கலைநிகழ்ச்சிகளில் பரிசுகள் பெற்றேன். தினமணி இதழில் 6 கதைகள் அப்போதே எழுதியிருக்கிறேன். அதன்பிறகு வேலை. வேலையை விட்டு கல்யாணம் செய்துகொண்டேன். குழந்தைகள். வாழ்க்கை அப்படியே நீண்டுவிட்டது. அதில் எந்தக்குறையும் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைதான். குழந்தைகள் இப்போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டார்கள். அவர்களுக்கும் எனக்கும் ஒரு தூரம் வந்துவிட்டது. என் கணவர் வேலையில் பதவி உயர்வு பெற்று இன்றைக்கு கொஞ்சம் சலிப்படைந்து ஓய்வு பெறும மனநிலையில் இருக்கிறார். இந்தியாவில் செட்டில் ஆவதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் அவ்வளவுதானா வாழ்க்கை என்ற எண்ணம் ஏற்படுகிறது. நான் வேலையை விட்டிருக்கக்கூடாதா என்ற சந்தேகம் உருவாகிறது

அன்புள்ள க

வேலையில் இருந்திருந்தால் வேலை சலித்து விருப்ப ஓய்வு பெற்றிருப்பீர்கள். அல்லது அதைப்பற்றி யோசித்து ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்திருப்பீர்கள்.

பிரச்சினை வேலை அல்ல. உங்கள் ஆற்றல்களை பயன்படுத்தும் ஒரு களம் உங்களால் கண்டடையப்படவில்லை. உங்கள் தனிப்பட்ட சாதனை என ஏதுமில்லை. நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஆற்றல்தான் பிரச்சினை

அந்த ஆற்றலில் பெரும்பகுதி வயதால் ஏற்கனவே வீணாகிவிட்டது. ஆனால் எதுவுமே முற்றாக அழிவதில்லை. ஆற்றல் என்பது அனல். அதை பெருக்கிக்கொள்ள முடியும்

இப்போதுகூட உங்களுக்கான இடத்தைக் கண்டடையலாம். உங்களுக்கான செயற்களத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.

ஆனால் எதை அடைவதென்றாலும் எதையாவது விடவேண்டும். அடைந்த வசதிகளை, சொகுசுகளை விடாமல் புதிய எதையும் அடைய முடியாது

ஜெ 

முந்தைய கட்டுரைஅபுனைவு வாசிப்பு
அடுத்த கட்டுரைதுறத்தல்