ஆசிரியருக்கு வணக்கம்
இன்று மரபின் மைந்தன் முத்தையா அண்ணாவின் மரபிலக்கிய வகுப்பு முடிந்தது.
பொதுவாக மரபு என்று சொன்னாலே நம் மனதில் பழையது அல்லது மிக இறுக்கமான ஒன்று என்று தான் எண்ணம் வருகிறது. ஆனால் மரபான குருகுல கல்வி முறையில் பயின்ற எனக்கு எப்போதுமே மரபு என்பது அப்படி தோன்றியது இல்லை. அது நமக்கு ஒரு வழியாகவும்,அந்த வழியில் நம்மை அழைத்து செல்லும் வழிகாட்டியாக அமைவதாக தான் தோன்றுகிறது, ஏனென்றால் மரபின் அடிப்படை அம்சங்கள் என்றும் மாறாத மனிதனின் ஆழ்மனதுடன் தொடர்புடையவை.
இந்த அழியா சரடை மூன்று நாட்களில் கண் முன் காட்டினார் முத்தையா அண்ணா. ஆகாசம்பட்டு சேஷாசலம், கே சி எஸ் அருணாசலம், கண்ணதாசன், பாரதிதாசன் போன்ற கடந்த நூற்றாண்டை சேர்ந்த கவிஞர்களிலிருந்து தொடங்கி , பாரதியார், வள்ளலார், தாயுமானவர், காலமேக புலவர், இரட்டை புலவர்கள், சென்னிகுலம் அருணாசல ரெட்டியார், திரிகூட ராசப்பர் , தேவார மூவர், ஆழ்வார்கள்,கம்பன், வில்லிபுத்தூரார் முதலிய புராண ஆசிரியர்கள், ஔவையார், திருவள்ளுவர் முதலிய நீதி நூல் ஆசிரியர்கள், இலங்கோ அடிகள், சீதளை சாத்தனார் போன்ற காப்பிய ஆசிரியர்கள் வழியாக கடைசியில் சங்க இலக்கிய கவிஞர்கள் வரை ஒரு மாபெரிய வரைபடம் எங்கள் முன் விரிந்தது.
இதெல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது ரசனை. இந்த ரசனையே இலக்கியத்துக்கு அடிப்படை என்று ஓங்கி உறைத்த ரசிகமணி டி கே சிதம்பரனாத முதலியாரும் அறிமுகமானார்.
ஆசிரியரின் அற்புதமான நகைச்சுவையும் அழகிய உவமைகளும் மிக கடினமான சொற்தொடர்களையும் எளிதில் மனதில் புகுத்தது. ஆசிரியர் பாடலை சொல்ல அதை நாங்கள் மீண்டும் சொல்வதால் கவிதையின் சொல் நயத்துடன், ஓசை நயத்தையும் ரசிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆசிரியருடன் இணைந்து வகுப்பை மேலும் சிறப்பாக்கிய ஓதுவாராகிய நன்பர் ராம்குமாருக்கும், திருக்குறளை கரைத்து குடித்த திருமூலநாதன் அண்ணாவுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
வகுப்பு நேரங்களுக்கு வெளியே புதிய நன்பர்களுடன் தீவிர உரையாடல்களும் நிகழந்ததால் படிப்பு என்பது வகுப்போடு முடியவில்லை.
திருவிளையாடல் புராணத்தில் பற்பல பூக்களின் வாசனையை அள்ளும் தென்றலுக்கு உவமையாக பல இடங்கள் சென்று அறிவை சேர்ப்பவர்களை சொல்கிறார் பரஞ்சோதியார். அந்த விதத்தில் கடந்த மூன்று நாட்களாக வெள்ளிமலையில் இலக்கிய நறுமணம் வீச தென்றல உலாவியது.
இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தமைக்கு நன்றி
தேஜஸ்