ஒரு கனவு

அன்புமிகு ஜெ,

நித்யவனத்தில் நீங்கள் ஆற்றிய “ஏன் காப்பியம்” என்ற உரையில் உந்துதல் அடைந்து இதை எழுதுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்பு என்னால் எழுத முடியும் என அறிந்ததிலிருந்து பல முயற்சிகள் செய்து வந்திருக்கிறேன். ஆனால் சென்ற நவம்பரில், திடீரென சிறு பொறி கிளம்பி மெல்ல மெல்ல விரிந்து வேள்வி நெருப்பென ஒரு சிறுகதை எழுந்து நின்றது. எழுதி முடித்ததும் பெரும் திகைப்பு. அக்கதையில் வந்த எதையும் நான் திட்டமிடவில்லை. பின் அது என் ஆழ்மனம் அல்லது கனவு என்றறிந்தேன். அவ்வறிதலுக்குப் பின் என் எழுத்துலகம் முற்றிலும் மாறிவிட்டது. எழுத எதையும் திட்டமிடவில்லை. அவ்வகையில் மேலும் இரு சிறுகதைகள் என் வழியே நிகழ்ந்தது. அந்நிலை சன்னதம் போல நிகழும். என்னுள் இன்னொரு “நான்”ஐ உணர்வேன். நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலில் கூட எழுத்து இவ்வாறு தான் நிகழும் என குறிப்பிட்டிருந்தீர்கள்.

நான் இதுவரை உணர்ச்சிவசப்பட்டு வழிபட்டது சிவ பெருமானை. ஆனால் என் கதைகளில் குறியீடாகப் படிமங்களாக வந்தவை சுடலைமாடன், இசக்கியம்மன், அய்யா வைகுண்டர் போன்ற நாட்டார் மரபுகள். அதன் பின்பு தான் என் மரபோடு மேலும் பற்று கொள்ள ஆரம்பித்தேன். நாட்டார் தெய்வங்கள் மானுட கனவுகள் வழியே செவ்வியல் தன்மை அடைகின்றன. சுடலைமாடன் கதையை நாவலாக எழுதும் எண்ணமிருந்தது. ஆனால் கடைசியாக எழுதிய சிறுகதைக்குப் பின் அய்யா வைகுண்டர் வாழ்க்கையை நாவலாக எழுதும் முனைப்பு மனதை விடாமல் உறுத்துகிறது. அம்மா அய்யா வழி என்பதால் தீவிரம் கூடுகிறது போலும். வெண்முரசு வாசிக்கத் தொடங்கியதிலிருந்து அது காப்பியமாகும் எனத் தோன்றிற்று. உங்கள் உரைக்குப் பின் உறுதி செய்து கொண்டேன்.

எனக்கு அந்த காலகட்டம் தெரிந்தால் போதும். என் வழியே அக்காப்பியம் நிகழும். அதற்கு நான் எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும். அன்றைய வரலாறு, சமூக அமைப்பு, நில அமைப்பு, அரசாங்கம், மொழி, சிந்தனை, நெறி, போன்று வேறேதும் உண்டா. அவற்றை அறிய எந்தெந்த நூல்களைக் கற்க வேண்டும். நூல் பட்டியல் அளிக்க முடியுமா?, நீங்கள் காப்பியம் எழுதும்போது மேற்கொண்ட ஆய்வுகளின் மாதிரியை விளக்க முடியுமா?

உங்களோடு தொடர் உரையாடலில் இருக்க ஆசை. ஆனால் நேரில் உங்களைக் கண்டதுமே உள்ளுக்குள் படபடப்பு, கூச்சம், தயக்கம்.

சிவ கிஷோர்.

அன்புள்ள சிவகிஷோர்

சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள். தமிழ் விக்கியிலேயே ஐயா வைகுண்டர் பற்றிய ஒரு நல்ல பதிவும், தொடர்ச்சியாக வாசிக்கத்தக்க நூல்களின் பட்டியலும் உள்ளது.

கூடுதலாக நீங்கள் வாசிக்கவேண்டியவை அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய குமரிமாவட்ட வரலாறு போன்ற நூல்கள். என்னுடைய தெய்வங்கள் பேய்கள் தேவர்களும் உதவியாக இருக்கக்கூடும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇஸ்லாம் – குழப்பங்களும் விளக்கங்களும் | நிஷா மன்சூர்
அடுத்த கட்டுரைஉண்மைக்கான உணர்புலன்