அன்புள்ள ஜெ
மேலைத்தத்துவ வகுப்புகள் பற்றிய அறிவிப்பைக் கண்டேன். நான் அறிவியல்- தொழில்நுட்ப மாணவன். என் கேள்வி இதுதான். மேலைத்தத்துவத்தின் பழைய தர்க்கங்களை இன்று வாசிப்பது நான் இன்றைய அறிவியலில் கற்றுக்கொண்டிருக்கும் தர்க்கமுறைகளுக்கு எதிராக இருக்குமா? இரண்டு தர்க்கமுறைகளும் ஒன்றையொன்று குழப்பிவிட்டுவிடுமா?
செல்வா-ராஜ்
அன்புள்ள செல்வா
கார்ல் பாப்பர் எழுதிய The Logic of Scientific Discovery நவீன அறிவியலின் தர்க்கமுறையை விளக்கும் அடிபப்டையான நூல். இந்நூலிலேயே அவர் அரிஸ்டாடிலைத்தான் அத்தனை தர்க்கமுறைகளுக்கும் அடிப்படையாகக் கொள்கிறார். தத்துவத்திற்கு காலமில்லை. அதன் தர்க்கமுறைகள் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை அல்ல. மனிதனின் மூளை அமைப்பு, இயற்கையின் பொருளமைப்பு ஆகியவை ஒன்றை ஒன்று சந்திக்கும்போது இயல்பாக உருவானவை. அவை முரண்படும், ஆனால் காலாவதியாவதில்லை. அம்முரண்பாடுகள் மெய்யாகவே மானுட மூளையிலுள்ள முரண்பாடுகள்.
அறிவியலில் இரண்டு வகை தர்க்கங்கள் தேவை. ஒன்று அறிவியலுண்மையை புறவயமாக நிரூபிப்பதற்கானவை. இரண்டு, அறிவியலின் அறம் பற்றிய கேள்விகளை விவாதிப்பதற்குரியவை. முதல் தர்க்கம் அரிஸ்டாடிலில் இருந்தும் இரண்டாவது தர்க்கம் பிளேட்டோவில் இருந்தும் தொடங்குகிறது.
ஜெ