ஜெர்மானிய தத்துவ அறிமுகம், கடிதம்

அன்பு ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

தத்துவம் குறித்து உங்கள் புத்தகங்கள் வழியாக ஓரளவு புரிதல் ஏற்பட்டிருந்தாலும் உங்களின் நேரடி தத்துவ வகுப்புகளே எனக்கு தத்துவக் கல்வி குறித்தான முக்கியத்துவத்தை உணர்த்தியவை, என்னை விரிவுபடுத்தி வருபவை. அதன் தொடர்ச்சியாக ஜெர்மானிய கல்வி குறித்து நீங்கள் அளித்த வழிகாட்டுதல் ஜெர்மானிய தத்துவ வகுப்பில் பங்கேற்கும் அவசியத்தை எனக்கு உணர்த்தின. ஆகவே வகுப்பில் பங்கேற்றேன். அதற்கு நீங்கள் அனுமதி அளித்ததற்கு மிக்க நன்றி.

ஜெர்மானிய தத்துவ வகுப்பை மிக விரிவாகவும், நுட்பமாகவும், அதே சமயத்தில் புரிந்துகொள்ளும் விதமாகவும் எடுத்தார் ஆசிரியர் அஜிதன். ஆரம்பம் முதல் இறுதி வரை ஆசிரியர் முகத்தில் இருந்த புன்னகை எப்போதுமே ஒரு புத்துணர்ச்சியையும் கற்கும் ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைக்க உதவியது.

மேற்கு தத்துவ துவக்கம், முன்னோடிகள், அறிவியல், ஜெர்மானிய தத்துவ துவக்கம், தத்துவ பிரிவுகள், அதன் ஆசிரியர்கள், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் செய்த தத்துவ பணிகள் அதன் தாக்கம் என இவ்வளவு விரிவான பாடதிட்டத்தை எவ்வாறு அதன் முழுமை குறையாமல் கச்சிதமாக தயாரித்தார் ஆசிரியர் அஜிதன் என்பது வியப்பாக இருந்தது. அதன் பின்புலமாக இருந்த அர்ப்பணிப்பான உழைப்பே எனக்கு மலைப்பைத் தந்தது. அனைத்து நுட்பங்களையும் அழகான Power point presentationஆக தயாரித்து அளித்தது மேலும் பாடத்தை எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக இருந்தது. தேவைப்படும் இடங்களில் ஜெர்மானிய தத்துவத்துடன் இந்திய தத்துவத்தின் மிக அவசியமான பகுதிகளையும் ஒப்பிட்டு பாடம் நடத்தியது புரிதலுக்கு உதவியதுடன் இந்திய தத்துவத்தின் ஆழத்தையும் உணர வைத்தது.

Power point presentation-ல் இருந்த ஒரு வார்த்தையைக் கூட விடாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கமும் அதற்கான உதாரணங்களும் அளித்து விளக்கம் அளித்தார் ஆசிரியர். தேவையான இடங்களில் பலகையில் படம் வரைந்து விளக்கினார்

கற்பித்தலில் ஆசிரியரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இருந்தால் மாணவனுக்கு கற்றல் ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும் என்பதை மீண்டும் இந்த வகுப்பில் நான் உணர்ந்தேன்.

ஒருவருக்கு மேலை தத்துவம், ஜெர்மானிய தத்துவத்தில் ஏன் அறிமுகம், புரிதல் இருக்க வேண்டும் என்ற எனது கேள்விக்கு விடையாக ஆசிரியர் அஜிதன் அவர்களின் வகுப்பு இருந்தது. இது ஒரு தொடர் கல்வி என்பதை உணர்கின்றேன். இந்த வகுப்புகள் உலக சமுதாயத்தைப் பற்றிய எனது புரிதலை மேலும் விரிவாக்கிக்கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்தது, தொடர் சிந்திப்பின் மூலம் அமையும்.

எனக்கு மேலை தத்துவம் குறித்து அறிமுகம் இல்லை. மேலும், அறிவியல் வார்த்தைகளில் பலவும், தத்துவக் கல்வி குறித்தான ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் எனக்கு புதிது. ஆகவே மொழியாக்கமாகி அர்த்தம் புரிந்து கொள்வது மிக மெதுவானதாகவே இருந்தது. ஆசிரியர் ஆங்கில தத்துவ வார்த்தைகளுக்கான மொழியாக்கத்தை ஆங்காங்கே அளித்து வந்ததனால் புரிதல் சீராக அதிகரித்து. குறிப்பாக எடுத்தவைகளையும், நினைவில் நிற்பவைகளையும் தொகுத்து எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், செய்கிறேன்.

நன்றி,

முந்தைய கட்டுரைகவனித்தலின் அடிப்படை என்ன?
அடுத்த கட்டுரைமூளையலைவுகள்