மேலைத்தத்துவம், பாடம் சுமையா?

Screenshot

அன்புள்ள ஜெ

உங்கள் மகன் அஜிதன் தான் நடத்திய தத்துவ வகுப்பைப் பற்றி இவ்வாறு டிவீட் செய்திருந்ததை வாசித்தேன்.

ஒரு தத்துவ அறிமுக வகுப்புக்கு இது மிக அதிகம் அல்லவா?

என் அளவை வைத்துக் கேட்டேன்

ரகுபதி ஸ்ரீராம்

Had great fun introducing German philosophy to a relatively uninitiated audience of nearly 40. I knew I’d succeeded when each came out liking different philosophers (Fichte, Husserl etc.) And not just Schopenhauer.  Guess I made a good case for each. Started with Hume’s famous jab at metaphysics, followed by Kant’s response, leading to Jena romantics (Fichte, Schelling), the dialectical school of Hegel and Marx, Schopenhauer and Nietzsche with their philosophy of Will, Husserl’s Phenomenology… Heidegger’s Hermeneutics, over to Gadamer, Frege’s initiation of the linguistic turn, followed by Vienna circle and Wittgenstein. Finally a glance at Freudian Psychoanalysis and Jung’s Collective unconscious. A total of 18-19 hours.

 

அன்புள்ள ரகுபதி,

தத்துவத்தை ஒரு கால்பந்து விளையாட்டாக எண்ணிக்கொள்ளுங்கள். அதை எப்படி அறிமுகம் செய்ய முடியும்?

முதலில் களம், அதன்பிறகு பந்து, அதன் பிறகு விளையாட்டு நெறிகள். அடிப்படைக் கேள்விகள்தான் அந்தப்பந்துகள் . அவை எப்படி எவரெவரால் தட்டி தட்டி கொண்டுசெல்லப்படுகின்றன என்பதைப் பற்றி ஒட்டுமொத்தமாகத் தானே சொல்லமுடியும்? அந்தப் பந்துகளை ஒரு வீரரிடமிருந்து இன்னொருவர் எப்படி பறித்துக்கொண்டார், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எப்படி அது கைமாறப்பட்டது- இதுதானே ஆட்டம், இல்லையா?

இங்கே பல பந்துகள் உள்ளன என்று கொள்வோம்.  அதாவது வெவ்வேறு அடிப்படைக் கேள்விகள்.  மானுடவாழ்க்கையின் பொருள், இயற்கையுடனான இணைவு, அடிப்படை அறம் என பல வினாக்கள். அவை சிந்தனை என்னும் களத்தில் வெவ்வேறு ஞானிகளால் எப்படி முன்னெடுக்கப்பட்டன என்பதை அறிவதே தத்துவ அறிமுகம்.

அந்த முழுமையான வரைபடம் முதலில் அளிக்கப்படவேண்டும். அதன்பின்னரே ஒவ்வொருவரைப் பற்றியும் நுணுக்கமாகவும் விரிவாகவும் பேசமுடியும். ஏனென்றால் ஒவ்வொருவரும் இன்னொருவரின் தொடர்ச்சி. இன்னொருவரின் முன்னோடி. ஒவ்வொருவரையும் அந்த விரிவான வரைபடத்தில் ஓர் இடத்தில் பொருத்தித்தான் புரிந்துகொள்ள முடியும்.

இதைத்தான் நீண்டகாலமாகச் சொல்லிவருகிறேன். ஒட்டுமொத்த தத்துவப் புரிதல் இல்லாமல், கைக்குக் கிடைத்தவற்றை படித்து, தோன்றியபடி புரிந்துகொண்டு, பேசப்படும் தத்துவ விவாதம் என்பது அறிவை அழித்து அறியாமையையே வளர்க்கும். ஏனென்றால் தத்துவம் மிக அருவமான ஒன்று. செறிவானதும்கூட. நேரடி வாழ்வுடன் உடனடியான தொடர்பு கொண்டது அல்ல, ஆகவே அனுபவம் சார்ந்து அதை அவ்வப்போது சரிபார்க்க முடியாது.

தத்துவத்தில் நாம் ஆரம்பத்திலேயே ஒரு தவறான புரிதலை அடைந்துவிட்டால் அதை மிக விரிவாக வளர்த்துக்கொண்டுவிடுவோம். அதைச் சரிசெய்வது மிகக்கடினம். மேலும் அதை நாம் தர்க்கப்படுத்திக் கொண்டு விடுவதனால் அது ’நம் கொள்கை’ என ஆகி நம்மை பிடிவாதமாக அதில் ஒட்டியிருக்கச் செய்யும். அத்தகைய ஏராளமான பிழைபுரிதல்களை தத்துவம் பற்றிய உரையாடல்களில் காணலாம்.

அப்பிழைகளை களைந்து பயில மிக அவசியமானது முறையான ஒட்டுமொத்த அறிமுகம். அதன்பின் படிப்படியான விரிவாக்கம். அதுவே உலகமெங்கும் உள்ள வழிமுறை. (சமகாலச் சிந்தனையாளர்களிடமிருந்து தொடங்குவதே பொதுவாக பயில்முறை தத்துவவாதிகளின் வழக்கம். அது மிகப்பிழையானது). இதே முறைதான் இந்திய தத்துவத்திலும் என்னால் கடைப்பிடிக்க்கப்படுகிறது என்பதைக் காணலாம். சைவசித்தாந்த அறிமுகம் செய்த சாந்திகுமார சுவாமிகளும் முதலில் ஒட்டுமொத்த அறிமுகத்தையே அளித்தார்.

தத்துவத்தை ‘தத்துவ பாடம்’ ஆகவோ ’தத்துவ வரலாறு’ ஆகவோ கற்பிக்கலாகாது. தத்துவத்தை தத்துவப்பிரச்சினைகள் வழியாகவே கற்பிக்கவேண்டும். அதையே அஜிதன் செய்ததாக அறிகிறேன்.

தன் தத்துவ அறிமுக வகுப்பை அஜிதன் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் நடத்தியதாகவே பங்கேற்றோர் சொன்னார்கள். விரிவான காட்சித்தட்டுகள் வழியாக முழுமைச்சித்திரம் அளிக்கப்பட்டது. கலைச்சொற்கள் அளிக்கப்பட்டன. கொள்கைகள் துல்லியமாகவே விளக்கப்பட்டன.

தொடக்கநிலையில் ஒரு திகைப்பு உருவாவது மிக இயல்பு. கூடவே ஒரு கிளர்ச்சியும் மிகையான ஆர்வமும் உருவாகும். இரண்டையுமே நாம் மெல்ல மெல்ல இழப்போம். அதுவே இயல்பான பாதை.

கலைச்சொற்களை மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். பெயர்களை நினைவில்கொண்டே ஆகவேண்டும். கற்றவற்றை திரும்ப எழுதிப்பார்க்கலாம். அது மிக உதவியானது. கொஞ்சம் பயில ஆரம்பித்ததுமே திகைப்பு விலகும். தத்துவத்தை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கையில் ஏதேனும் ஒரு கொள்கை, ஓர் ஆசிரியர் சார்ந்து உருவாகும் மிகையான பற்றும் விலகும்.

ஜெ

முந்தைய கட்டுரைபுதுக்கோட்டை ஆலயப் பயணம் – கடிதம்
அடுத்த கட்டுரைசெயலில் இறங்குதல்