
பூன் குன்றில் “இந்திய தத்துவம்” வகுப்பில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன், இருபக்கம் சாய்ந்த உயர் கூறையிட்ட விலாசமான அறை , மிக குறைவான சன்னல்கள் மற்றும் மேக மூட்டத்தினால் அறையுனுள் அரையிருட்டு பரவியிருந்தது. நண்பர்களின் மெல்லிய ஆரவாரம் கேட்டுக்கொண்டிருந்தது. வகுப்பு தொடங்க பத்து நிமிடங்களுக்கு முன் ஜே உள்ளே நுளைகிறார் , நண்பர்களின் ஆரவாரம் குறைகிறது. பாடகர்களின் பாடல் முடிகிறது. ஜே வெண் பலகையின் முன்னால் வந்து ஒரு பத்து வினாடிகள் அமைதி காக்கிறார், வகுப்பு ஆழ்ந்த அமைதியில் உறைகிறது. மழைக்குப்பின் முதல் உழவில் ஆழ்ந்து செல்லும் மேலிக்கொழுவின் கார்வையில், ஜேயின் மென்குரல் ஒலிக்கிறது,
அனைத்து துறைகளிலும் உள்ள அடிப்படை தர்க்கங்களின் தொகுப்பே தத்துவம், ஆகவே “அறிவின் அடிப்படை கட்டுமானம்”.
வானில் மேகங்கள் விலகியதில் , கிழக்கு சாளரத்திலிருந்து அறையினில் நுளைந்த திடீர் ஒளி ஜேயின் வெள்ளுடையில் பட்டு அறை முழுதும் பரவியது.
இந்த வகுப்பு ஏன் எனக்கு தனித்துவமானது ?
ஜே கற்றுகொள்ளலை கற்பிகிறார். சித்தத்தை கூர் தீட்டி, உறிஞ்சுதாளில் மையென பரவும் உள்ளத்ததை ஆசிரியனில் நிலைக்க வைக்கிறார். நினைவு தெரிந்த நாள் முதல் உள்ளே விழுந்த ஒவ்வொரு துளியையும் எதிர் திசையில் செலுத்தியே பழகியிருந்த சித்தத்தை அமைதிப் படுத்துகிறார். ஆசிரியன் ஆழ்ந்து கற்றதை சிதறாது உள்ளெடுக்க வைக்கிறார்.
ஜேயின் கற்பித்தல் வடிவம் ?
ஜே வகுப்பின் கண்களை அல்ல சித்தத்தை தொடர்கிறார். கேள்விகளில் இருந்து மனதை அகற்றி அகற்றி, சித்தத்தில் விதைகளை நட்டவாறே தொடர்கிறார். தீவிர குரு மரபில் இருந்து வந்த தேர்ந்த ஆசிரியனின் வழி.குழுவின் பின்னால் வறும் மலையேற்றக்குழு வழிகாட்டிபோல், வகுப்பு உறுதியுடன் இருக்கும்போது மேட்டை நோக்கிய கடின பாதையிலும், தளரும்போது பக்கவாட்டு எளிய பாதையிலுமாக உச்சியை நோக்கி செல்ல வைக்கிறார்.
அவர் உபயொகிக்கும் சுற்றிச்சென்று மலையேறும் பாட அமைப்பு, மிகச்சிக்கலான தத்துவ பாடத்தை உள்வாங்க உதவுகிறது. ஆரம்ப விரிந்த வட்டங்கள், விரிவான அடித்தளம் மூலம் அடிப்படைகளை கற்றுக்கொள்ளவும், மனதில் நிறுத்தவும் உதவுகிறது. இதன் பிறகு கடின மேலேரும் பாதையை தொடர முடிகிறது.
ஜேயின் கற்பித்தல் கருவிகள் ?
எளிய நிகழ்வுகளில் தொடங்கி, வரலாற்றுக் காலக்கோடு, பரிணாம வளர்கோடு , உலக தெய்வங்களின் வரலாறு, மானுட வரலாறு, பழங்குடி நாட்டார் மற்றும் செவ்வியல் கலைகள், சடங்குகள்,இலக்கியங்கள்,அழகியல், கடவுள்கள், கோயில் சிற்பங்கள், விரிந்த பயண அவதானிப்புகள், மேற்கின் வழி, கிழக்கின் வழி என பல கருவிகளின் வழியே தேவையானதை உபயோகிக்கிறார்.
இந்திய தத்துவம் கடினமானதா ?
சந்தேகமின்றி. ஜேயின் பாட முறை இவ்வாறு தொடங்குகிறது.
- தயாராகுதல் : தத்துவத்தின் தேவை, தத்துவப்படுத்துதல்,பலவித அறிதல் கருவிகள், மேலை பகுப்பு முறை, கீழை பகுப்பு முறை
- கால வரிசையில் இந்திய தத்துவம்
- பரினாம பாதையில் இந்திய தத்துவம்
- வேதங்கள்
இதன் பெரும்பகுதி தர்க்க மனதின் வழியிலும், சில கடின பகுதிகள் ஆழ்மனதில் உள்ளெடுத்து ஆழ்ந்து மட்டுமே கற்குமாறு அமைந்துள்ளது.
இந்திய தத்துவத்தின் மூலம் நான் பெறுவதென்ன ?
வேதங்களை நான் பெரும்பாலும் ஆசாரவாத அடிப்படையிலேயே அனுகியுள்ளேன், இந்த வகுப்பின் மூலம் இந்திய ஞானத்தின் விளை நிலத்தை தயக்கமின்றி அணுக கற்கிறேன். நான்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று இயக்கங்கள் மற்றும் நவீன வேதாந்தம் என இந்திய தத்துவச் செல்வத்தை, கற்க தொடங்குகிறேன். மேலும் கற்றலையும் கற்பித்தலையும் கற்கிறேன்.
ஜேயின் வகுப்பு ..!
நான்கு நாட்கள், கடினமான தத்துவப்பாடம் ஏன் தொடர முடிவதாக இருந்தது, ஜே இந்த பாடங்களை ஒரு புனைவின் விறுவிறுப்பில் நிகழ்த்துகிறார்.ஜேயின் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு நடையில் இருந்தது. அறம் பற்றிய நீதிமன்ற தீர்ப்பு, குளிர் காற்றில் தொடங்கி, சாரலாகி பெரு மழையில் முடிகிறது, “ஓரு பாவத்தை இன்னொரு பாவத்தால் ஈடு செய்ய முடியாது, இன்நீதிமன்றம் உன் தந்தையை கவனித்துக் கொள்ளுமாறு இறைஞசுகிறது”. சிருஷ்டி கீதம் போன்ற ஆழ்ந்த பகுதிகள், அமைதியான ஆழ்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து இறங்கும் நங்கூரம் போல், ஆழ்ந்து செல்கிறது.விவேகானந்தர் வரலாறு மெல்லிய கங்காக தொடங்கி, காற்றால் உந்தப்பட்டு, படர்ந்து பற்றியேறி பெருநெருப்பானது.
இருபதில் வயதில் புறப்பட்டு, இந்திய நிலம் முழுக்க அளைந்து, தேடி, வழி தவறி,சிதைந்து, பின் குருவை அடைந்து, கற்று , மறு உருவாகி, காவியங்களில் உழன்று, எழுதி, மறு உறுவாக்கி, வளர்ந்து, ஒவ்வொரு கணமும் எனத் துளித்துளியாய் சேர்த்த ஞானத்தை கற்பிக்கும் ஆசிரியனின், ஒவ்வொரு நாளுமென எண்ணமாய், சிந்தனையாய், எழுத்தால் அவியளிக்கும் சாதகனின் தாள் பணிந்து, அவனில் என்றும் எழும் தேவியை வணங்குகிறேன்.











