புதுக்கோட்டை ஆலயப் பயணம் – கடிதம்

கடந்த பிப்ரவரியில் JKவின் ஆலயக் கலை அறிமுக வகுப்பு முடிந்த நாளிலிருந்தே அவருடனான நேரடி ஆலயக் கலைப் பயணத்தை வாட்ஸப் குழுவில் அனைவரும் கேட்டுக் கொண்டேயிருந்தோம். இப்போது போகலாம், அப்போது போகலாம் என்று தாக்காட்டி, ஒரு வழியாக வாட்ஸப் குழுவில் ஒரு அறிவிப்பு வந்ததுமே பாய்ந்து முன்பதிவு செய்து கொண்டேன். அதன் பின்னர் தான் விடுமுறை கிடைப்பது, வீட்டில் சமாளிப்பது முதலிய கடமைகளை எதிர் கொண்டேன். (என்னைப் போலவே பலரும் எதிர் கொண்டிருக்க வேண்டும்; பயணத்திற்கு வருவதாக சொல்லி வாட்ஸப் குழுவில் இணைந்தோர் எண்ணிக்கை 55, ஆனால் உண்மையில் பயணம் செய்தோர் எண்ணிக்கையோ 36 மட்டுமே).

22.08.2024 இரவு புறப்பட்டு, 23.08.2024 அதிகாலை திருச்சி சென்றடைந்தேன். வந்தவர் ஒவ்வொருவரையும் JK தனித்தனியாக வரவேற்று அனைவருடனும் ஓரிரு சொற்கள் உரையாடினார். அனைவரும் வந்து சேர்ந்த பின் மூன்று வேன்களிலாக கிளம்பி புதுக்கோட்டை அருகில் நச்சாந்துப்பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு வந்து அறையில் குளித்துக் கிளம்பினோம்.

எங்களது முதல் நாள் பயணத்தில் திருமயம் குடைவரைகள், சத்யகிரிநாதர் ஆலயம், கண்ணனூர் பாலசுப்ரமணியர் ஆலயம், ஆகியவற்றை காலையிலும் மதிய உணவுக்குப் பின் திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் ஆலயத்தையும் கண்டோம்.

இரண்டாவது நாளில் நாங்கள் முதலில் சென்றது ஸ்ரீ பூமிநாதர் ஆலயத்துக்கு, அதன் பின் ஸ்ரீ உத்தமதானேஸ்வரர் ஆலயத்துக்கும், குடுமியான் மலை, சித்தன்ன வாசல், ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள், பிறகு நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் ஆகியவற்றைக் கண்டோம்.

மூன்றாவது நாளில் நாங்கள் கண்டது அகஸ்தீஸ்வரமுடையார் ஆலயம், அதனருகிலுள்ள விஷ்ணு ஆலயம் (வீர பயங்கர விண்ணகரப் பெருமாள் ஆலயம்), கடம்பர் மலைக் கோவில், கொடும்பாளூர் மூவர் கோவில் இறுதியாக ஸ்ரீனிவாசநல்லூர் கோரங்கநாதர் ஆலயம் ஆகியவை.

கடந்த பிப்ரவரியில் ஆலயக் கலை அறிமுக வகுப்பில் நாங்கள் கற்றது தியரி வடிவில் இருந்ததேயொழிய, அதை தொடர்ச்சியாக கோவில்களுக்குச் சென்று அனுபவ அறிவாக மாற்றிக் கொள்ளவில்லை. இப்போதைய JKவுடனான பயணம் இதனை சாத்தியமாக்கியது. முந்தைய வகுப்பில் சொன்னதெல்லாவற்றையும் மீண்டும், மீண்டும் சொல்லிக் காட்டி (தூண்களின் உறுப்புகள், ஆதிஷ்டானத்தின் உறுப்புகள், விமான உறுப்புகள் பற்றி குறைந்தது இருபது முறையாவது தொட்டுக் காட்டி விளக்கினார்.) JK அனைவருக்கும் புரிய வைத்தார்.

மிக முக்கியமானது, அவர் சிற்ப சாஸ்திர சொற்களை போட்டு, இட்டு நிரப்பவில்லை; வந்திருப்பவர்களுக்கு அவர் இக்கோவில்களின் முக்கியத்துவம் என்ன என்று சொல்லித் தந்தார்; அவற்றின் வரலாற்று இடமென்ன என்று சொல்லித் தந்தார்; அழகியல்ரீதியாக இக்கோவில்களையும், அவற்றின் சிற்பங்களையும் ரசிக்க சொல்லித் தந்தார். மிக முக்கியமான சிற்பங்கள் / கல்வெட்டுகள் அருகில் நின்று அனைத்தையும் காட்டித் தந்தார். எதையும் தவற விடவில்லை. போலவே, இயன்ற அளவு அதிகமான இடங்களை ‘கவர்’ செய்ய முயற்சித்தார். அதற்காக பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டேயிருந்தார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளித் தந்து கொண்டேயிருந்தார். (Spreading the knowledge is the way to keep it alive and existing என்று அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது). ஆசிரியருக்கு நன்றி.

JK தன்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டேயிருந்தார். எந்தளவுக்கு என்றால், விஜயாலய சோழீஸ்வரம் மலை ஏறிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு சுனையை சுட்டிக் காட்டி ஆனந்த் “இதைக் கட்டியவர் யார், JK?” எனக் கேட்க, JK சீரியசாக “கொத்தனார்” என பதிலளிக்கும் அளவுக்கு. பின்னே? கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பதுதானே நல்லாசிரியருக்கழகு?

அறிமுக வகுப்பு முடித்த அனைவருமே ஆசிரியருடன் ஒரு பயணம் கட்டாயம் சென்றாக வேண்டும் என்பதே நான் இப்பயணத்தில் தெரிந்து கொண்டது.

பிரகாஷ்குமார்

முந்தைய கட்டுரைஜெர்மானிய தத்துவம், கடிதம்
அடுத்த கட்டுரைமேலைத்தத்துவம், பாடம் சுமையா?