செயலில் இறங்குதல்

அன்புள்ள ஜெ,

குழந்தைகளுக்கு அடிப்படை விளக்கத்துடன்  கலை (ஓவியம்) கற்றுக் தரவேண்டும் என்று நினைக்கிறேன். இது சரியான முடிவாக இருக்கும்மா ? நான் என்னை தயார் செய்ய வேண்டும் மற்றும் சிறுவர்களுக்கான கற்பிக்கும் முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று குழப்பமாக உள்ளது. இதற்கு ஆசிரியர் துணை தேவை தானே?

கலை மேல் சிறுவயதில் இருந்தே ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அறிந்து கொண்டேன் எனக்கான (passion ) தேடல் என்று. கலை என்னை தினம் புதிய புதிய கேள்விகளை கேட்டு கொண்டு இருக்கிறது. அதை சற்று விரித்து செல்ல கலை பயிற்றுவிக்கும் (தனியார் ) துறையில் சேர்ந்தேன். அங்கு எதற்கு,ஏன், எவ்வாறு என்ற கேள்விக்கு பதில் இல்லை. அங்கு ஒன்று தான் பணம், எதன் வழி பணம் சம்பாதிக்க முடியும் என்று தான் கலையை பார்க்கிறார்கள்.பெற்றோர்களும் Instant முறையில் தங்கள் குழந்தைகளை பயிற்றுவிக்கும் முறையில் தான் ஆர்வமாக உள்ளனர்.

என் தேடல் சார்ந்து அல்லது எனக்கான சந்தேகம் பற்றி பேசும் போது சிலருக்கு புரியவில்லை ,இப்படி செய்தால் பணம் சம்பாதிக்க முடியாது, சிலர் Boomer, 80s என்று பெயர் வைத்து உள்ளார்கள். என்னால் அவர்கள் எதிர்பார்க்கும் (Trending , cinema , songs, )  பயனற்ற உரையாடல் எனக்கு பிடிக்கவில்லை. இதனால் எனது சந்தேகங்களையும் பிற உரையாடல்களும்கும் யாரும் இல்லை. எனக்கான மனிதர்களை எவ்வாறு கண்டு அடைவது? .

கலை எவ்வளவு பெரிய உலகம். A.V. மணி மற்றும் J.K அவர்களின் முகாம் மிகவும் சிறப்பான தருணத்தில் அமைந்தது. இரு வேறு கலை பற்றிய ரசனை, புரிதல், நுணுக்கம் என்று எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இஸ்லாமிய கலை பற்றிய புத்தகம் படித்து கொண்டு இருக்கிறேன் A.V. மணி அவர்களின் பரிந்துரையின் மூலம்.  இதில் இருந்து எனக்கான இலக்கை சற்று இன்னும் இறுகப்பற்றி கொண்டேன். இருந்தும் நான் எங்கே இருக்கிறேன். எங்கு செல்ல வேண்டும் என்று குழம்பி இருக்கிறேன்.

– லதா

 

அன்புள்ள லதா

உண்மையிலேயே எனக்கு புரியாத மனநிலை இது. ஒருவர் தனக்குச் சரியென தோன்றுவதை, தன் நிறைவுக்கான வழி என நினைப்பதை மேற்கொள்ள ஏன் இத்தனை தயக்கங்கள். பூமர் என்று சொல்வார்கள், சிரிப்பார்கள் என்றெல்லாம் சொல்பவர்களைக் காண பரிதாபம்தான் வருகிறது. அப்படிச் சொல்பவர்களின் ஏற்புக்காக இதையெல்லாம் செய்ய நினைக்கிறீர்களா? அல்லது செய்யாமலிருப்பதற்கான காரணங்களை தேடி நீங்களே உருவாக்கிக்கொள்ளும் சாக்குகளா இவை எல்லாம்? நம் வாழ்க்கையை நாம் வாழ எவருடைய ஏற்புக்காக நாம் காத்திருக்கவேண்டும்?

ஒரு சூழல் ஏற்கனவே சரியாக இருந்து, மக்களுக்கெல்லாம் போதிய விழிப்புணர்வு இருந்தால் நீங்கள் செய்வதற்கான அவசியம்தான் என்ன? அதுதான் எல்லாம் சரியாக இருக்கிறதே. ஒன்று இல்லாமலிருந்து, அதை நிரப்பத்தானே நீங்கள் செயல்படவேண்டும்? எனில், செயல்படுவதற்கான இடத்தை நீங்கள்தானே உருவாக்க வேண்டும்? நீங்கள்தானே உரிய மனநிலைகளை கட்டமைக்கவேண்டும். உங்களுக்கான வழி ஏற்கனவே அங்கே தயாராகி இருக்கவேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

எந்தச் செயலாக இருந்தாலும் அதைச் செய்யத் தொடங்குவதே முக்கியம். அதை தொடங்குவதற்கு தேவையான அளவுக்கு கற்றுக்கொண்டால் போதும். செய்யச்செய்ய செய்யும் வழியும் செய்யத் தேவையான ஆற்றலும் தெளிந்து வரும். செய்யச் செய்ய தேவையான உதவிகளை உள்ளம் கண்டடையும். வழிமுறைகளை கற்றுக்க்கொள்ளும். நம் ஆற்றல்கள் வெளிவரும். நம் ஆற்றலின்மைகளும் தெரியவரும். அவை தெரிந்தால் நாம் நம்மை பயிற்றுவிக்கவும் முடியும்

ஆனால் தொடங்குவதற்கு முன்னரே எதிர்மறை மனநிலைகளை உருவாக்கிக் கொள்வது என்பது ‘ஒண்ணும் சரியில்லே, சரியா இருந்திருந்தா நான்லாம் நெறையச் செஞ்சிருப்பேன்’ என்ற சமாதானத்தை நமக்கே உருவாக்கிக்கொள்ளும் கோழைத்தனமான முயற்சி மட்டுமே.

அதேசமயம் ஊக்கத்துடன் தொடங்கி, உடனே எதையாவது கண்டு சுணங்கிவிடுவது ஆபத்து. அது மேலும் செய்யமுடியாமல் வெற்றுத் தன்னிரக்கத்தையே உருவாக்கும். ஒன்றைத் தொடங்கினால் என்ன வந்தாலும் சில ஆண்டுகளுக்கு இதைச் செய்வேன், விளைவை கணக்கிடவே மாட்டேன், செய்வதன் நிறைவே எனக்குப் போதும் என்னும் உறுதி முன்னரே இருந்தாகவேண்டும்

ஏ.வி.மணிகண்டனின் வகுப்பு உங்களுக்கு அடிப்படையான ஊக்கத்தையும் பயிற்சியையும் அளித்திருக்குமென நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவம், பாடம் சுமையா?
அடுத்த கட்டுரைபறவை பார்த்தல் பயிற்சி