நாவல் அரங்கு – கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வெர்ஜீனியாவில் நவம்பர் மாதம் நீங்கள் நடத்திய புனைவு பயிற்சி பட்டறையில் நானும் கலந்து கொண்டேன். மிக சிறப்பாக இருந்தது. உங்கள் கதைகள்  கச்சிதமாக பொருத்தும் தைக்கப்பட்ட கதைகளாக இருப்பதைக் கண்டு இதற்கு ஒரு சமன்பாடு இருக்க வேண்டும் என எண்ணியதுண்டு. அதை உறுதி செய்யும் விதமாக இருந்தது பயிற்சியில் நீங்கள் பகிர்ந்துக் கொண்ட உத்திகள்.

நீங்கள் பயிற்சியை நடத்திய விதத்தினாலேயே என் கவனம் எந்த நேரத்திலும் சிதறவில்லை.நாள் முழுவதும் நீங்கள் நின்று கொண்டே பேசினாலும்  சீரான சக்தியுடன், நேர்த்தியான தகவலுடன் பயிற்சியை அளிக்கும் போது கவன குவியல் இயல்பான ஒன்றாகவே அமைந்தது.

அமர்வின் இறுதியில் இலக்கியம் வெறும் பொழுதுபோக்கிற்காக அல்ல, உயர்ந்த நோக்கம் கொண்டது  என்கிற தரிசனத்தை நீங்கள் பகிரும் போது

பார்பாஸின் கதையையும் அதன் சாராம்சத்தையும் பற்றி சொன்ன போது, என் கண்கள் கண்ணீரில் தளும்பியது.

பட்டறைக்கு தாமதமாக வருபவர்களை அனுமதிக்க விரும்ப மாட்டீர்கள் என்று கேள்விப்பட்டதால்,சரியான நேரத்தில் வர முந்தைய இரவு முழுவதும் பதட்டமாக இருந்தேன்.இரட்டிப்பு எச்சரிக்கையாக  முப்பது நிமிட இடைவெளியில் வெவ்வேறு நேரத்திற்கு காலை கடிகார எச்சரிக்கையை அமைத்திருந்தேன்.அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றின் மூலம் நான் காப்பாற்றப்படவேன் என்கிற நம்பிக்கையில்.அவ்வாறே பட்டறைக்கு முப்பது நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டேன்

யாராவது நின்று கொண்டிருந்தாலோ, இருக்கையில் அமர்ந்து இருந்தவர்களின் முகத்தில் சூரிய ஒளி படுவதைக் கண்டாலோ அவர்களை வசதியான இடத்தில் அமரச் சொன்னீர்கள்.உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து அக்கறையின்றி உங்களால் கடந்து போக முடியாது என்பதை  கவனித்தேன்.

இருப்பினும் சமூக வளையங்களில் நீங்கள் பதிலளிக்க வேண்டியவற்றிற்கு ஒரு எல்லையை உங்களால் நிர்ணயிக்க முடிகிறது,அவ்வப்போது நான் கேட்கும் முழுமையறிவு யூடியூப் சேனலிலுள்ள ஒரு வீடியோவில் அதற்கான வரையறையை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்.அது எனக்கு ஒரு தெளிவை அளித்தது. சமூகத்தில் நடக்கும் எதிர்மறை விஷயங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை அல்லது எதிர்வினையாற்றவில்லை என்றால், நான் சரியானதைச் செய்யவில்லை என்று நினைந்திருந்தேன். அந்த காணொளியை கேட்டப் பிறகு குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு எல்லையை நிர்ணயிக்க முடிந்தது.

சில சமயங்களில்  தற்செயல்கள் அனுகூலமானவை. நீங்கள் வெள்ளை பலகையில் எழுத திரும்பி நின்றப் போது தற்செயலாக வந்தது முந்தைய நாள் அசதியினால்  வந்தக் கொட்டாவி. ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த யாரோ ஒருவருக்கு அனுகூலமாக இல்லைநீங்க என்ன கொட்டாவி விடுறீங்கன்னு என்று நேரடியாகவே நீங்கள் அவரை கேட்கசார்என்ற பதில் மட்டும் கேட்டது பின் இருக்கையிலிருந்து.

பள்ளிகூட நாட்களில் பின்பெஞ்சு காரர்களுக்கும் முன்பெஞ்சு காரர்களுக்கும் இடையே மூடுபனி உறுமல் இருந்துக் கொண்டே இருக்கும். ஆசிரியரிடமிருந்து 

நாம் தப்பித்தது ஒரு  குஷி என்றால்  பின்பெஞ்சு காரர்கள் மாட்டிக் கொண்டால் இரட்டிப்பு குஷியாக இருக்கும்.நினைவு அடுக்குகளில் தங்கியிருந்த பள்ளிக்கூட அனுபவம் எட்டிப் பார்த்த தருணம்.

 மற்றொரு பள்ளிக்கூட மாணவ அனுபவம் 12-13 வருடங்களுக்கு முன்பு வேறொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது. நான் திண்ணை மற்றும் பிற இணைய வழி பத்திரிக்கைகளில் தொடந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம்.திண்ணை முகப்பு பக்கத்தில் கவிதைப் பிரிவின் கீழ் அந்த வாரத்தில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் செங்குத்து வரிசையில் பட்டியலிட பட்டிருக்கும்

பட்டியலில் எனது கவிதைக்கு முன்பிருந்த கவிதைக்கு எதிர்பாராத சமயத்தில் உங்களிடமிருந்து ஒரு கிண்டலாக வசை பாடும் பின்னூட்டம். மறு பேச்சு பேசும் மாணவனை வெளுத்து வாங்கும் வாத்தியார் போல மாறி மாறி பின்னுட்டங்கள்பதிலகள் போய் கொண்டிருந்தது. வரிசையில் முன் நிற்கும் மாணவனை அடிக்கும் வாத்தியார் என்னையும் அடிப்பாரா அல்லது நகர்ந்துவிடுவாரா என்ற பதட்ட நிலையில்  என் கவிதை குறித்து உங்களிடமிருந்து ஏதேனும் கருத்து வந்திருக்கிறதா என்று அடுத்த ஞாயிற்றுக்கிழமை திண்ணை முகப்பு பக்கம் புதுப்பிக்கப்படும் வரை பார்த்தேன்.நல்ல வேளை அப்படி எதுவும்  இல்லை.

ஆனால், பயிற்சி பட்டறைக்கு முந்தைய நாள் நான் முதன்முறையாக இலக்கிய வாகர் வீட்டில் நேரில் உங்களை சந்தித்த போது எந்த மன அழுத்தமும் ஏற்படவில்லை, இயல்பாக சுதந்திரமாகப் பேச முடிந்தது. முக்கிய காரணம் உங்கள் அணுகக்கூடிய குணம் என்று நான் நினைக்கிறேன். அருண்மொழி மேடமும் அலங்கார திரையில்லாத இயல்பாக பழகுபவராக இருந்தார்கள்.

வாசகர்கள் பலர் பல விஷயங்களைப் பற்றி அன்று உங்களோடு உரையாடினோம்.அப்போது அமெரிக்காவில் உள்ள நூலகங்களை பற்றி, அதனை சார்ந்த கேள்வியையும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.ஆகையால் கடிதத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

அமெரிக்காவில் உள்ள பிராந்திய பொது நூலகங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்கள் அல்லது நகரங்கள் ஒப்பந்தத்தின் மூலம் ஒன்றிணைந்து, பங்கேற்கும் அனைத்துப் பகுதிகளிலும் புத்தகங்களை வழங்குகிறது.

நாம் தேடும் பத்தகம் அருகிலிருக்கும் நூலகத்தின் இணையத்தில் கிடைக்கவில்லை என்றால், பங்கேற்கும் நெட்வொர்க் குழுவில் உள்ள பிற நூலகங்களில் அதுவே தேடி, அருகிலிருக்கும் நூலகத்திற்கும் பரிமாற்றம் செய்த பிறகு மின்னஞ்சல் அனுப்பி விடும்.நாம் சென்று புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம்..

வாசிப்பவர்களின் பரவலான வாசிப்புக்கும், நூலகங்களின் பொருள் மேலாண்மைக்கும் உதவியாக இருக்கும் ஒன்றிணைந்து பங்கேற்கும் முறையை 

தமிழ்நாட்டில் பதிப்பாளர்கள் மேற்கொண்டால் வாசகர்கள் பயன் பெறலாம் என நினத்தேன். புத்தகங்களை விற்பனை செய்வதற்குப் இணையாக 

சந்தா செலுத்தி பயன் பெறும் முறையையும் நடைமுறை படுத்தலாம்.

தற்போது உள்ள தனியார் நூலகங்கள் பெரும்பாலும் சரக்குகளைப் புதுப்பிப்பதில்லை. சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகத்தைப் பற்றி நாம் கேட்டால், ஒரு வேற்றுகிரகவாசியாகப் பார்ப்பார்கள்.

கையொப்ப அறிக்கை துணைப் பொருளாக, மௌனமாக நின்றுக் கொண்டிருக்கும் பணக்கார வீட்டு புத்தகங்களை தவிர்த்து, பெரும்பாலோர் குறுகிய இடத்தில் வசிப்பதால் புத்தகங்களை வாங்குவதும் சேமிப்பதும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.வாசிக்க நினைப்பதை முழு பணம் கொடுத்து வாங்குவதும் சிரமம். வாசித்து பார்த்து விட்டு வாங்கலாம் என நினைப்பவர்களும் உண்டு.

 பல் வேறு பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் ஒருங்கிணைந்த சந்தா முறை, விநியோகம்  சிக்கல்களை ஒரு வகையில் கையாண்டு வாசிப்பு வட்டத்தை விரிவடைய செய்யும் என்று தோன்றியது.

எல்லா சேவைகளும் பணம் செலுத்துஉபயோகப்படுத்து முறைக்கு மாறிவிட்ட நிலையில், புத்தகங்கள் ஏன் விற்பனை மற்றும் வாங்குதலை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தோன்றியது.

இதை பற்றி சிந்திக்கும் போது தோன்றிய கேள்வி அடிப்படையில் புத்தகம் தொட்டறியக் கூடிய தயாரிப்பா அல்லது சேவையா (Is book a tangible product or service) ?

மீண்டும் புனைவு பயிற்சி முகாமிற்கு நன்றி. உங்கள் எழுத்தின் கட்டமைப்பு ரகசியங்களை அவதானித்து புரிந்துக் கொள்ள பல ஆண்டுகள் எடுத்திருக்கும், ஒரு நாள் பயிற்சியில் அதை எளிமை படுத்தி விட்டீர்கள். இருப்பினும், இரண்டு வார்த்தைகள் உரசினால் நெருப்பு வரவேண்டும் என்கிற உங்கள் எழுத்து நிலையை அறிந்துக் கொள்ள இப்பயிற்சி ஒரு பனிப்பாறையின் முனை மட்டுமே என்பதும் நான் அறிந்ததே

பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்த நிர்மல் மற்றும் குழு நண்பர்களுக்கும் நன்றி.

சித்ரா

வெர்ஜினியா

முந்தைய கட்டுரைபூன் தத்துவ முகாம்- கண்ணபிரான் நடேசன்