குடைவரைப் பயணம்

ஆசிரியருக்கு,

நான் 2016ல் இருந்து உங்கள் படைப்புகளை மணவாளன் மூலம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்தவுடன் வெண்முரசு படிக்க தயக்கமாக இருந்தது. ரப்பர், உலோகம்,  ஊமைச்செந்நாய்,  அறம்,  வழியாக வந்தேன். அறம் படித்து முடித்தவுடன் மிக்க தைரியமாக வெண்முரசு படிக்க ஆரம்பித்து 2021 இல் முடித்தேன். வெண்முரசு முழுவதும் இணையதளத்திலே தான் படித்தேன். விஜயரங்கன் சார் வெண்முரசு முடித்த கடிதம் எழுதி இருந்தார், என்னுடைய அனுபவமும் அதே கடிதத்தை ஒத்திருந்தது.

உங்கள் படைப்பிற்குள் நுழைந்த அனுபவமும்,  வெண்முரசு முடித்தவுடன் இருந்த வெறுமையும், இளையயாதவரை நீண்ட கரிய பேருருவத்துடன் இணைத்து பார்த்ததையும் நானும் உணர்ந்தேன். தொடர்ந்து தங்களது படைப்புகள், அஜிதனின் மைத்ரி,  சிறுகதைகள் படித்து வருகிறேன். விஷ்ணுபுரம் 2023ல் தங்களை சந்தித்து சில வார்த்தைகள் பேசினேன். விஷ்ணுபுரம் நிகழ்வும் மனதிற்கு மிகவும் உவப்பானதாக இருந்தது.

ஆலய கலை ஆசிரியர் ஜே கே சாரை முதலில் மகாபலிபுரத்தில் சந்தித்தேன். குடைவரை கோயில் பற்றி மிக விளக்கமாக பேசினார். அப்போது அஜந்தா எல்லோரா பற்றி  நிறைய பேசினார்கள், திட்டமும் வகுத்தனர்.  பிப்ரவரி 23 24  25 மூன்று நாட்கள்.  மகாபலிபுரத்தில் வெயில் காரணமாக நிறைய கவனிக்க முடியவில்லை. அஜந்தா எல்லோரா இன்னும் பல மடங்கு என்று கேள்விப்பட்டு உடல் ஒத்துழைக்காத என நினைத்து தவிர்த்து விட நினைத்தேன். ஆனால் மகளும் மகனும் நிறைய தைரியம் கொடுத்து என்னை தயார்படுத்தினார்கள். கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே உடற்பயிற்சி தியான பயிற்சி எல்லாம் எடுத்து நானும் மிகுந்த பயத்துடன் தான் சென்றேன். முதல் விமான பயணம். நிறைய சந்தேகத்துடன் தான் விமானம் ஏறினேன். மிகுந்த உற்சாகமாக இருந்தது. 23ஆம் தேதி அஜந்தா பார்க்க சென்றோம்.

முதல் நாள் இரவே ஜேகே சாரம் சாம்ராஜ் சாரும் அஜந்தா ஓவியங்கள் எப்படி பார்க்க வேண்டும், காட்சி எப்படி நினைவில் தங்கும் என்பதை பற்றியும் மிகத் தெளிவாக விளக்கமாக உரையாடல் நடத்தி தயார் செய்தார்கள். ஜேகே சார் நிறைய முயற்சி செய்து எங்களை தயார்படுத்தி அழைத்துச் சென்றார். அஜந்தா ஓவியங்கள் பற்றிய புத்தரின் ஜாதக கதைகளை சுருக்கமாக தயார் செய்து முன்னரே அனுப்பி இருந்தார். அந்த இடத்திலேயே ஜெயராம், வேல், லிங்கராஜ் எல்லோரையும் கதை சுருக்கத்தை  சொல்ல வைத்து ஓவியங்களை காட்சிப்படுத்தினார். மிகப் பிரமிப்பாக இருந்தது. ஓவியங்களுடைய உணர்ச்சிகளும், வண்ணங்களும், அந்தக் காலகட்டத்திற்கே கொண்டு சேர்த்தது. சிதிலமடையாமல் எல்லா ஓவியங்களும் அப்படியே இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எங்கள் எல்லோருடைய மனத்திலும் அதுவே எண்ணமாக இருந்தது.

ஹம்சம், கபீசம், யானைகள்,  மனிதர்களுடைய முக உணர்ச்சிகள், முப்பரிமாண காட்சிகள், அரண்மனை வாயில்கள், ட்ரோன் மூலமாக நகரை பார்ப்பது போன்று காட்சிகள், போர் காட்சிகள், ஆபரணங்களின் அமைப்புகள், நிறங்கள், எதுவுமே மனதை விட்டு அகலவில்லை. குகைக்குள் இருந்த குளிர்ச்சி, புத்தரின் ஆழ்ந்த அமைதி, அந்த இடத்தை விட்டு பிரிய மனமில்லை. இரண்டு நாள் அஜந்தாவில் பார்க்க வேண்டியிருந்தது.

மூன்றாம் நாள் எல்லோரா, முதலில் இந்து சமய சிற்பங்கள். கஜலட்சுமி சிற்பமும், இராவண கைலாச மலை தூக்கும் சிற்பமும் மிக மிக பிரமிப்பாக இருந்தது. சிவ தாண்டவ காட்சிகள், விஷ்ணுவின் அவதாரக் காட்சிகள், ஒருபுறம் ராமாயண காட்சி சிற்பங்கள், ஒருபுறம் மகாபாரத காட்சி சிற்பங்கள், எண்ணிலடங்கா சிற்பங்கள். கண்ணும் மனதும் நிறைந்திருந்தது. புத்தருடைய பல சிலைகளை சார் நன்றாக புரிய வைத்தார். 29ஆவது குகை செல்லவே கடினமாக இருந்தது. அங்கு சுந்தரேசர் திருக்கைலாய நிகழ்ச்சி சிலைகள், துவாரபாலகர்கள் அவர்களுடன் நிற்கும் அவர்களுடைய பெண்மை தோற்றம் அருகில் சிறியதாகவும், என மிக பிரம்மாண்டமாக இருந்தது. குழந்தைகள் மிகவும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.  விஜய பாரதியின் குழந்தைகள்  சாப்பிடும் போது கூட வெண்முரசு கதையை கேட்டுக் கொண்டே தான் சாப்பிட்டனர்.

இது போன்ற பயணங்களில் இணைந்து செல்வது எனக்கு இதுவே முதல் முறை.இதிலிருந்து மீண்டு வர ஒரு வாரம் ஆயிற்று. மிக்க நன்றி ஜே கே சார் சாம்ராஜ் சார் மற்றும் எல்லா நண்பர்களுக்கு

இபஂபடிகஂகு

விஜயலடஂசுமி.

முந்தைய கட்டுரைபதஞ்சலி மரபு, யோகப்பயிற்சி
அடுத்த கட்டுரைமனிதனின் ஆழம் என்பது என்ன?