மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு
பறவை நோக்குதல் தொடங்கி 100 நாட்கள், 100 மணிநேரங்கள் சென்ற மாதத்துடன் முடிவடைந்தது. பறவை நோக்குதல் பயிற்சிக்கு எட்டு வயது மகளுடன் வந்திருந்தேன். பறவைகளை மகளுக்கு அறிமுகப்படுத்தியதை காட்டிலும் பன்மடங்கு என்னை ஈர்த்தது.
சில வருடங்களுக்கு முன் தங்களிடம் புதிதாக ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பிக்கும் போது நமக்கு அது உகந்தது எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டேன். அதற்கு நீங்கள் எதையும் 100 மணி நேரம் செய்து பார்த்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்றீர்கள். 100 மணி நேரம் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடிகின்ற காரியம் நீண்ட காலம் தொடர்ச்சியாக செய்ய முடியும் என்றே எடுத்து கொள்கிறேன்.
கடந்த மூன்று மாதங்களாக கற்று வந்து அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து, எனக்கு வழிகாட்டியாக இருந்ததற்கும் பறவை நோக்குதல் போன்ற பயிற்சிகளை நடத்த உறுதுணையையாக இருப்பதற்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பறவை நோக்குதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும், விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம் நண்பர்களுக்கும் நன்றி.
ஏன் ?
சுற்றுலாவாக மலை பகுதிகளுக்கும் பசுமை நிறைந்த இடங்களுக்கும் செல்வதுண்டு. இயற்கையின் படைப்பில் நாம் யார் என்று கேள்விகளை எழுப்பிய இடங்கள் உண்டு. அடர்ந்த மலை பகுதிகள், நம் தலைமுறைகளை தாண்டி நிற்கும் மரங்கள், பெருக்கெடுத்து ஓடும் அறுகள் என இயற்கையின் பேருருவை பார்க்க பல இடங்களுக்கு பயணித்து இருக்கிறோம். இவ்வனுபவங்கள் அகந்தையை அகற்றி இயற்கையின் சிறு புள்ளி என என்னை உணரச்செய்திருக்கிறது.
பறவை நோக்குதலை கடந்த நூறு நாட்களாக மேற்கொண்டு வருகிறேன். தினமும் குறைந்தது அரைமணி நேரம் பறவைகளுடன் செலவிடுகிறேன். வீட்டிற்கு அருகில் உள்ள காலி நிலத்தில் புற்கள் மண்டி மரங்கள் சூழ இருக்கும். மழை வந்து சென்றால் சிறு நீர்தேக்கங்களும் உருவாகும். இங்கு பல பறவைகள் வருகிறது. இங்கேயே வாழும் பறவைகளும் உண்டு. இந்த அரைமணி நேரம் ஒரு நாளின் முக்கியமான பகுதியாகி உள்ளது. இயற்கையை உணரும் ஒவ்வொரு நிமிடமும் என்னை உணர்வதாகவே படுகிறது. அத்தகைய நிமிடங்கள் பறவைகளின் வடிவில் கிட்டியுள்ளது
தொலைநோக்கியை வைத்து ஒரு பறவையை பார்க்கும் போதும் அதன் வண்ணங்களும், வண்ணங்களின் கலவையும், பாகங்களில் உள்ள வண்ண வேறுபாடுகளும், இறக்கை வடிவங்களும், அதன் செயல்பாடுகளும் பார்க்க பார்க்க விரிந்து கொண்டே செல்கிறது. களத்தில் பறவைகளை பார்ப்பதை தாண்டி புத்தகங்கள், பறவைகளுக்கான செயலி, இணையம் மூலம் ஒரு தொடர்ச்சியான கற்றலுக்கு வழிவகுக்கிறது.
கற்றல் முறை
பறவைகள் மனதிற்கு அளிக்கும் பரவசம் மற்றும் மகிழ்ச்சியை தாண்டி தொடர்ந்து செல்லும் போது கற்றல் நிகழ்கிறது. அதற்கான தேடலும் துவங்குகிறது. ஒரு புதிய பறவையை அடையாளம் காண அதன் நிறம், அலகு, வாள், இறக்கை, கால் இவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இவ்விவரங்களை குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். பின்பு வந்து செயலியிலோ புத்தகங்களிலோ தேடி பறவையை அடையாளம் காணலாம். காகம், புறா, தவிட்டு குருவி எனதெரிந்த பறவைகள் போக நம்மிடத்தை சுற்றி இருக்கும் மற்ற பறவைகளை அடையாளம் காணலாம். நீல வால் கொண்ட வால்காக்கை, கண்ணுக்கு கீழ் சிவப்பான சதை கொண்ட செம்மூக்கு ஆள்காட்டி, வால் பிளவுண்ட கரிச்சான், உடல் கருமை நிறமும் கண்கள் சிவப்பாகவும் இருக்கும் ஆண் குயில், சிவப்பு கண்களும் பழுப்பு நிற உடலில் வெள்ளை புள்ளிகள் கொண்ட பெண் குயில் என ஒவ்வொரு பறவையாக பல முறை பார்த்து அடையாளம் காணுதல் கற்றலின் முதல் படி.
பறவைகளின் தோற்றத்தை வைத்து மட்டுமல்லாமல் அதன் குரலை வைத்தும் கண்டுகொள்ளவது கூடவே நிகழ்கிறது. எந்திரம் ஓடுவது போல பாடும் வால் காக்கை, கலகலவென பறந்து கொண்டே சிரிக்கும் வெண்மார்பு மீன்கொத்தி, உரத்த குரலில் ஓலமிடும் ஆள்காட்டி , அதிகாலையில் இனிமையான பாடல்கள் பாடும் குண்டுகரிச்சான் என அதன் குரலை வைத்து இன்ன பறவை என்று கண்டுபிடித்துவிட முடியும். நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை தினமும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அவை பரிச்சியமாகி விடுகிறது. இதைத் தாண்டி இனம், வாழ்விடம், வாழ்க்கை முறை, கூடுகட்டி முட்டையிடுதல், குஞ்சுகளை வளர்க்கும் திறன் என அறிந்து கொள்ளுதல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
படிநிலைகள்
பறவையியலாளர் ஜோசப் ஹிக்கி பறவைகளை அறிதல் மூன்று படிநிலைகளில் நிகழும் என்கிறார். முதல் நிலையில் பொதுப் பறவைகளையும் நாம் இருக்கும் இடத்தில் வாழும் பறவைகளையும் அடையாளம் காண முடியும். அதன் வாழ்விடம், அதன் தோரணைகளை வைத்து அடையாளம் காண முடியும். இரண்டாவது நிலையில் பறவைகளின் புற அடையாளங்களை வைத்து சிறிது தூரத்தில் இருந்தே கண்டுபிடிக்கலாம். அனைத்து இனங்களுக்கும் இதை செய்ய முடியாது ஆனால் தொடர்ந்து களத்தில் பறவைகளை கவனித்து வந்தால் அடுத்த நிலைக்கு முன்னேறலாம். மூன்றாவது நிலையில் வட்டார பறவைகளை தாண்டி வலசை வரும் பறவைகளையும் தொலைவில் இருந்து அடையாளம் கண்டுகொள்ள முடியும். அடுத்தடுத்த படிகளுக்கு செல்ல பறவைகளை காணும் நேரத்தை அதிகப்படுத்துவதன் மூலமே செய்ய முடியும். அதுவும் குழுவாக செல்லும் போது தகவல் பரிமாற்றத்தின் மூலமும் வல்லுநர்கள் துணையுடனும் இப்பயிற்சியை துரிதப்படுத்தி கொள்ளலாம். இதைவிடவும், ஒரே ஆர்வமுள்ள நண்பர்களை கண்டு கொள்ளவும், அனுபவங்களை பகிரவும் வாய்ப்பாக அமைகிறது.
கற்று என்ன செய்ய?
அறிதலின் இன்பத்தை தாண்டி நாம் பார்க்கும் பறவைகளை “ebird” செயலியில் உள்ளிடலாம். பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். நாம் உள்ளிடும் பறவைகளை பற்றிய தரவுகள் ஆராய்ச்சிகளுக்கும், பறவைகளை பாதுகாக்கவும் உதவுகின்றன. இதைத்தாண்டி நம் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் இவ்வறிவை பகிரும் போது இயற்கையின் உடனான நெருக்கம் அதிகரிக்கிறது. இயற்கையை பாதுகாக்கும் விதையை விதைப்பதன் மூலம் அதன் அழிவிற்கு காரணமாகாமல் இருக்கலாம். முடிந்தால் இயற்கையை பேணலாம். நம்பிக்கையுடன்.
நன்றி
பிரியா
சென்னை