நம்பிக்கையின் பாதை பொய்யா?

அன்புள்ள ஜெ

நீங்கள் எப்போதுமே நம்பிக்கையின் பாதையை முன்வைக்கிறீர்கள். பெரும்பாலும் ஆப்டிமிஸ்டிக் ஆன பார்வையை அளிக்கிறீர்கள். இந்த பாஸிட்டிவ் அப்ரோச் தான் உங்களை நோக்கி இத்தனைபேரை ஈர்க்கிறது. ஆனால் இந்த அணுகுமுறை உண்மையை நெருங்குவதாகுமா? இது ஒரு மாயைதானே? எழுத்தாளன் முன்வைக்கவேண்டியது உண்மையை அல்லவா?

பெயரிலி

அன்புள்ள பெயரிலி,

சரி, இருண்மையே உண்மை என்று கொள்வோம். எதற்கும் அர்த்தமில்லை என்ற அவநம்பிக்கையே உண்மைக்கு அணுக்கமான மனநிலை.  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? வாழ்க்கையைத் துறந்து, பண்டாரமாக ஆகப்போகிறீர்களா? எங்கும் நிலைக்காமல், எந்த உறவும் இன்றி, எந்த உடைமையும் இல்லாமல், எதையும் செய்யாமல் யோகியாக அமரவிருக்கிறீர்களா?

ஆம் என்றால் அந்த உண்மையை தலைக்கொள்க. அந்த மனநிலையை ஏற்றுக்கொள்க. அதற்கான வழிகள் இங்குள்ளன. யோகி அறியும் இருள் ஒன்று உண்டு. அதற்கு யோக இருள் என்று பெயர். முழுமையான அர்த்தமின்மை. முழுமையான வெறுமை. மகாசூன்யம். அதில் இருந்து அவர்கள் பெறும் ஒளியும் ஒன்றுண்டு. அதை அடையும் வழிகளும் உண்டு. அங்கே செல்க.

அதுவன்றி, இங்கே உலகியலில்தான் இருக்கப்போகிறீர்கள் என்றால் எதற்கு அந்த மனநிலை? உலகியலில் இருந்துகொண்டே அதை கசந்தும் வெறுத்தும் வாழ்வதற்காகவா? வாழ்க்கையை அவ்வாறு வீணடிப்பதற்காகவா? உறவுகளை விலக்க, செயல்களை குழப்பிக்கொள்ள அந்த மனநிலை உதவும் வேறெதற்கு?

இங்கே நீங்கள் வாழ்வதென்றால் இங்கு தேவையான உண்மைகளையே உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகியலில் எல்லா உண்மைகளும் உருவாக்கப்படும் உண்மைகளே. அவற்றை   சாமான்ய சத்யம் என்கிறோம். அதில்தான் வாழ்கிறோம். முழுமையான உண்மை என்பது விசேஷ உண்மை. அதில் முழுமையான யோகிகள் மட்டுமே வாழமுடியும். அவர்களும் உலகியலுக்காக சாமான்யத்திற்கு வந்தாகவேண்டும்.

நீங்கள் யோகி அல்ல என்றால், யோகி ஆவதற்கான உளத்திட்பமும் உரிய பயிற்சிகளும் இல்லை என்றால், உங்களுக்கான உலகியல் சூழலுக்கு உகந்த சாமானிய உண்மைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதில் வாழுங்கள்.

இப்போது நீங்கள் செய்வது வெறும் பாவலா. முதிரா அறிவுஜீவிகளின் பாவனை அது. அவர்களுக்கு உலகியல் தேவை. ஆனால் அதற்கு அப்பாற்பட்ட உண்மைகளில் வாழ்பவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளவும் வேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைநவீன மருத்துவம், நவீன வாழ்க்கை
அடுத்த கட்டுரைநமக்கான கோபுரங்கள்