ஆசிரியருக்கு வணக்கம்,
அமெரிக்க பயணம் முடிந்து நல்லபடியாக ஊர் வந்துவிட்டீர்கள். பூன் முகாம் மிக சிறப்பாக நடந்ததை அமெரிக்க வாசகர்களின் கடிதங்கள் சொல்கின்றன. நவம்பர் 1,2,3 தேதிகளில் நடந்த நவீன மருத்துவ அறிமுகம் வகுப்பில் கலந்துகொண்டேன்.
பண்டிகை தினமான தீபாவளியன்று மிக சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வகுப்புக்கு வந்தவர்கள் மொத்தம் பதினாறுபேர். மருத்துவத்தின் வரலாறு,இந்திய மருத்துவ மற்றும் உலக மருத்துவ முறைகளுக்குப்பின் அடிப்படை புரிதலுக்காக மிக எளிய முறையில் கொஞ்சம் வேதியியல் பாடத்துக்குப்பின், பிசியாலஜி,அனாட்டமி வகுப்புகளை மிக எளிதாக முழுமையான தமிழில் மருத்துவர் மாரிராஜ் நடத்தினார்.
உடலில் இருக்கும் ஒரு செல் எப்படி வேலை செய்கிறது என்பதில் துவங்கி ஒரு செல்லுக்குள்ளே இருக்கும் பாகங்கள், திசுக்கள், உள் உறுப்புகள் (ரத்த ஓட்ட மண்டலம்,நரம்பு மண்டலம்)என விவரித்து முழுஉடலும் எப்படி இயங்குகிறது என்பதை என்னை போன்ற எளியர்வர்கள் புரியும் விதத்தில் அவர் விளக்கியது ஒரு சாதனை.
இந்த உலகிலுள்ள மிகச்சிறந்த விஞ்ஞானியாலோ, இஞ்சினியராலோ உருவாக்க முடியாத மிக விந்தையான அமைப்புகள் இந்த உடலுக்குள் இருப்பதை அறிந்தபோது பெரும் வியப்பு ஏற்பட்டது.(எண்டோதீமியாவில் காயம்பட்டால் ஏற்படும் ரத்த கசிவை,ரத்தம் உறைதல் மூலம் தடுப்பது).
ஆசிரியர் மருத்துவ கல்லூரியில் பேராசிரியர்,இலக்கியம் வாசிப்பவராகவும் இருப்பதால் மிக இயல்பாக சிக்கலான பாடங்களை எளிய மொழியில் நடத்தினார். அம்மை தளும்புக்கு உதாரணமாக சோற்றுக்கணக்கு கெத்தேல் சாகிப்பின் முகம், வெண்முரசின் நீர்க்கோலம், வண்ணக்கடலின் வரிகளை மிகப்பொருத்தமான இடங்களில் நினைவுபடுத்தினார்.
வகுப்பில் கேள்விகள் கேட்டு பதில் சொன்னவர்களுக்கு சாக்லேட் கொடுத்ததோடு. மூன்றாம் நாள் வகுப்பில் கேட்ட கேள்விக்கு ஸ்டீராய்ட் என மிக சரியாக சொன்ன திவ்யாவிற்கு சாக்லேட் கொடுத்ததோடு மருத்துவ மாணவர்களே இந்த கேள்விக்கு சரியான பதிலை சொல்லவில்லை என மகிழ்ந்தார்.
எனது யோக குரு நடத்தும் சத்சங்கங்களில் உடலை ‘திருமேனி’(இறைவன் குடி கொண்டிருக்கும் இடம்) எனச்சொல்வார். நவீன மருத்துவ வகுப்புக்குப்பின் தான் நான் அதை புரிந்துகொண்டேன்.
புகை,மது,நாம் உண்ணும் அதிகப்படியான உணவு,மிகை மாமிசம்,தேவையான தண்ணீர் குடிக்காமல் இருத்தல் இதெல்லாம் நாம் உடலுக்கு கொடுக்கும் பெரு தீங்குகளே. உடல் அதன் போக்கில் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டே இருக்கும்.சம்பளமே வாங்காமல் ஓய்வு என்பது என்ன வென்றே தெரியாமல் இயங்கும் அதன் சீரான இயக்கத்தில் தொந்தரவு செய்யாமல் ஒத்திசைவுடன் இருப்பதே நமது வேலை.
பதினெட்டு ஆண்டுகளாக யோக பயிற்சிகளும்,தியானமும் செய்து வரும் நான். மூச்சு பயிற்சி வகுப்பை நடத்தும்போது நுரையீரலின் முக்கியத்துவத்தையும் ரத்தம் எப்படி ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கிறது என்பதை சொல்லி கொடுப்பேன்.
இந்த வகுப்புக்குப்பின் தியானத்தில் மூளை,நரம்பு மண்டலம் அடையும் பயன்,உடற்பயிற்சியினால் இன்சுலின் இன்றியே தசைகளுக்கு குளுகோஸ் எப்படி செல்கிறது என விரிவாக யோக வகுப்பில் சொல்லிக்கொடுக்க முடியும்.
டாக்டர் மாரிராஜ் மிக உற்சாகமான மனிதர்.முன்பே நன்கறிந்த ஒருவரிடம் இந்த வகுப்பை கற்றதில் மகிழ்ச்சி.பெரும் ஆச்சரியத்திலும்,வியப்பிலும் உறைந்துபோன மிக முக்கியமான ஒவ்வொரு மனிதனும் அறிந்தே ஆக வேண்டிய அடிப்படை மருத்துவ அறிமுகத்தை கற்று கொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி சொல்லி கடந்து போக விரும்பவில்லை.
சரியான உடற்பயிற்சியும்,சத்தான குறைந்தளவு உணவுண்டு என் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,இந்த சமுதாயத்திற்கு உதவவும் இயலும்.
வெளியில் எங்கும் கிடைக்காத இந்த கல்வியை வாய்ப்புள்ள அனைவரும் கற்பது என்பதுதான் என் அவா.குறைந்தபட்சம் நமது நண்பர்களாவது இந்த அடிப்படை கல்வியை கற்று பயன்பெற வேண்டும்.
ஷாகுல் ஹமீது,
நாகர்கோவில் .