அன்புள்ள ஜெ
ஒரு நாளில் 4 மணிநேரம் நான் ஊடகங்களில் செலவழிக்கிறேன். நெட்ப்ளிக்ஸ் சீரியல்கள்தான் நீண்டநேரம். கொஞ்சநேரம் ஃபேஸ்புக், இன்ஸ்டா. கொஞ்சம் சினிமாக்களும் பார்க்கிறேன். போர்ன் பார்ப்பதுடன் நாள் முடிகிறது. நான் என் நாட்களை வீணடிக்கிறேன் என்று தெரியும். ஆனால் வெளியேறும் வழி தெரியவில்லை.
எம்
அன்புள்ள எம்
நீங்கள் வீணடிக்கும் பொழுது இந்தியாவில் பலகோடி பேருக்கு பெரும் கனவாக இருப்பது. உண்மையில் செயலூக்கமும் பெரும் கனவுகளும் கொண்ட பல்லாயிரம்பேர் பொழுதை ஈட்டிக்கொள்ள முடியாமல் மடிந்துகொண்டிருக்கிறார்கள்.
பொழுதை வீணடிக்கிறோம் என உங்களுக்குத் தெரிந்திருப்பதே மிகப்பெரிய விஷயம். அந்தப் புரிதல்கூட இல்லாதவர்களே இங்கே பெரும்பாலானவர்கள். ஆகவே அதுவே ஒரு நல்ல தொடக்கம்தான்.
ஊடகப்போதை என்பது பொழுதை வெட்டியாக வைத்திருப்பதனால் வருவது. அதை செயலால் நிறையுங்கள். எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். கற்றவற்றைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல், இடைவெளியே இல்லாத செயல் மட்டுமே அதிலிருந்து வெளியேறும் வழி
ஜெ