கனவுகளை துரத்துவது…

ஐயா வணக்கம்,

என்பெயர் பி (28), நான் ஒரு சினிமா இயக்குனராக வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றறை ஆண்டுகளாக அந்த முயற்சி கடும் வலிகளை மட்டுமே எனக்குத் தருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை நான் கோவையிலே வீடியோ எடிட்ங் மற்றும் வீடியோ கவரேஜ் செய்து வீட்டிற்கு தேவையானதை செய்து கொடுத்தேன் கடந்த ஆண்டுத் தங்கையின் திருமணம் முடிந்த பின் இனி முழு நேரமாகச் சினிமாவில் செயல்படச் சென்னைக்கு வந்து விட்டேன்.

ஆனால் இங்க வாழ்க்கை நான் நினைத்தது போல அல்ல, ஒர் இயக்குனர்க்கு அடிப்படை தினமும் வாசிப்பதும் எழுதுவதும் தான், ஆனால் நான் பள்ளியிலே இருந்து படிப்பில் கொஞ்சம் பின்தங்கிய மாணவன் தான். படிக்க ஆர்வம் இல்லாமல் இல்லை, அதை எனக்கு யாரும் ஆர்வமாய்ச் சொல்லிதரதால். படிப்பு இது வரை என் வாழ்வில் பிரச்சனையாக வரவில்லை, ஆனால் சென்னையில் அது எனக்குப் பிரச்சனையானது. இங்கு இருக்கும் மற்றவர்கள் நன்றாக வாசிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்னால் அப்படி முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி சில மாதங்கள என்னைக் கட்டுப்படுத்திவைத்து என்னை அதன் வழியில் இழுக்கப்பாக்கிறது.

எனக்கு என் இப்படி நடக்கிறது என்று என்னை நான சுயபரிசோதனை செய்து பார்த்த போது தான் கண்டறிந்தேன் எனக்கு மனகுவிப்பில் பிரச்சனை இருக்கிறது, என்னால் ஒரு ழுழு மனதாக இருந்து 10 பக்கங்களுக்கு மேல வாசிக்க முடியவில்லை, 2 பக்கங்களு மேல எழுத முடியவில்லை, கடந்த ஒன்றறை ஆண்டுகளாக எழுதுகிறான். இன்னும் என் முதல் கதையை எழுதி முடிக்க முடியவில்லை. இப்படியே போனல் என்னாகும் என்ற பயம் இப்போது என்னைக் காயப்பட வைக்கிறது.

காந்தார படத்தில் முதல் காட்சியில் அந்த மன்னனிடம் சொல்வது போலதான்எனக்கும் அறிவை சொல்லி தர ஒரு குரு வேண்டும்என்று என் சினிமா நண்பன் சொன்னான். நாங்கள் 40 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் இருந்து கோவைக்குக் கூடி பெயர்ந்து வந்தோம். எங்கள் குடும்பத்தில் தற்கொலை அல்லது துர்மரணங்கள் அவ்வப்போது நடக்கும். அது இப்போ எனக்கும் நடந்துவிடுமோ என்ற பயன் என்னை நிஜ உலகிலிருந்து தள்ளி நிக்க வைக்கிறது.

கனவை மட்டும் நம்பி ஓடி சரியான நண்பர்கள், தோழி, குடும்பம், வாழ்க்கை, சந்தோஷ்சம் என்று எதுவும் கிடைக்காமல் போனதும் கூடப் பரவயில்லை ஆனால் இப்போது அந்தக் கனவே கிடைக்கது போல இருக்கிறது. என்னைத் தற்கொலையில் இருந்து மீட்ட, என்னால் எதவது செய்ய முடியும் என்று தன்நம்பிக்கைத் தர, மறைந்து போன தொன்மக கதைகளைத் திரையில் காட்ட, எனக்கு ஆசான் தேவை, என்னை இந்த இயந்திர லோகத்திலிருந்து விடுவிங்கள்……

பி

அன்புள்ள பி

உங்களுடைய பிரச்சினை ஆசிரியர் இல்லாமை அல்ல. உங்கள் பிரச்சினை நீங்களே தீர்த்துக்கொள்ளத்தக்கதுதான்.

அதை இப்படி வகுக்கிறேன். நீங்கள் பெரிய கனவுகள் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதை நோக்கிச் செல்ல உங்களைத் தயாரித்துக்கொள்ள உங்களால் இயலவில்லை. காரணம் உங்களுக்கு ஒருங்கு குவிந்து செயலாற்ற முடியவில்லை. ஆகவே அச்சமும் சோர்வும் கொண்டிருக்கிறீர்கள்.

தீர்வு என்பது ஒருங்கு குவிந்து செயலாற்றுவதற்கான பயிற்சியை அடைவதிலேயே உள்ளது. அதை எப்படி அடைவது என்பதை மட்டுமே நீங்கள் இப்போது யோசிக்கவேண்டும். அதற்கு புற உலகம் காரணம் அல்ல. புறத்தில் இருந்து எந்த உதவியும் வராது. முழுக்கமுழுக்க நீங்களே காரணம்.

என்ன செய்யலாம்? ஒன்று தியானம், யோகம் போன்ற சில அடிப்படைப்பயிற்சிகளை எடுத்துக்கொள்ளலாம். (நாங்கள் 3 தியானயோக வகுப்புகளை நடத்துகிறோம். குரு சௌந்தர் (யோகம்) , தில்லை செந்தில்பிரபு (நவீன தியானம்), அமலன் ஸ்டேன்லி (விபாசனா). இவை உளக்குவிப்புக்கான வழிகளைப் பயிற்றுவிப்பவை. இந்த ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டிகளும்கூட. 

ஆனால் இப்பயிற்சிகளை நாம் தான் செய்யவேண்டும். அதற்கு ஆசிரியர்களைத் துணைக்கொள்ளலாம். இவற்றை நாம் தொடர்ச்சியாகச் செய்யத்தவறினால் இப்பயிற்சிகளால் எப்பயனுமில்லை.  

அதற்கான சில வழிகள் அல்லது நிபந்தனைகளைச் சொல்கிறேன்

. நம் அன்றாடம் ஓரளவேனும் சீரானதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும். காலை எழுவதில் இருந்து துயில்வது வரை நம் செயல்களில் ஓர் ஒழுங்கு இருந்தாகவேண்டும். ஒழுங்கின்மை என்பதுதான் கவனச்சிதறலின் முதன்மையான அடிப்படை. திட்டமிடப்படாத நாளில் என்ன நிகழுமென்றால் சிலசமயம் செயல்கள் குவிந்துகிடக்கும். சிலசமயம் வெறும்பொழுது நீண்டு கிடக்கும். வெறும்பொழுதில் நாம் வெட்டிக் கவனச்சிதறல்களில் ஈடுபடுவோம். அதுவே நீண்டு நீண்டு குவிந்து கிடக்கும் செயல்களைச் செய்யமுடியாமலாக்கும்.

. வெறும்பொழுதே இருக்கலாகாது. அந்தவகையில் நாட்களைத் திட்டமிடவேண்டும். செயலில் மூழ்குதலே கவனக்குவிப்பைப் பயில்வதற்கான வழி. சலிப்பும், வெறுமையும், தனிமையும்தான் நம்மை வெட்டிச்செயல்களை நோக்கிச் செலுத்துகின்றன.

. செயலைச் சிதறடிக்கும் புறச்சூழலை முழுமையாகவே தவிர்க்கவேண்டும். சமூகவலைத்தளங்கள், காணொளிகள், வெட்டி விவாதங்கள். பலசமயம் பயனற்ற பேச்சு பேசும் நண்பர்கூட்டம் தான் நம்மை கவனச்சிதறல்களுக்கு கொண்டுசெல்கிறது. அந்நண்பர்கள் இல்லையேல் நாம் தனிமைப்பட்டுவிடுவோம் என்று நினைக்கிறோம். அது உண்மை அல்ல. அவர்கள் நம்மை அழிக்கும் கிருமிகள். நமக்குரிய நண்பர்களுடன் மட்டுமே நாம் இருக்கவேண்டும். நாம் செயலில் குவிந்து அடிப்படை வெற்றிகளை அடைந்தால் நமக்குரிய நண்பர்கள் வருவார்கள்

. சுற்றத்தை தேடிக்கொள்ளவேண்டும். நாம் செய்யும் பணிக்கு அணுக்கமானவர்கள். தாங்களும் தேடலில் இருப்பவர்கள். நம்மை செயலுக்கு கொண்டுசெல்பவர்கள். அத்தகைய சுற்றம் சிறிதாகவே இருக்கமுடியும். அவர்களே நம்மை செயலூக்கம் கொள்ளச் செய்வார்கள். 

. ஒரு குறிப்பிட்ட பொழுதில் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யவேண்டும். அந்த பொழுதே அந்த மனநிலையை உருவாக்கும். உண்மையில் செயலைச் செய்ய முடியவில்லை என்றாலும் ஒவ்வொருநாளும் அந்தப் பொழுதில் அதைச் செய்ய முயன்றபடியே இருந்தாகவேண்டும்.

. செயலை உளம்குவித்துச் செய்வது ஒரு பயிற்சி. செய்தே ஆகவேண்டும். மூர்க்கமாக, முழுவீச்சாகச் செய்யப்பழகுதலே ஒரே வழி.

முழுவெறியுடன் தன்னைத் தயாரித்துக்கொள்ளும் ஒருவன் ஒருபோதும் அர்த்தமில்லாத தோல்வியை அடைவதில்லை. தான் உத்தேசித்ததை அவன் ஒருவேளை அடையாமல் போகலாம், ஆனால் அவனுக்கான களம் ஒன்றில் அவன் வெற்றிகளை அடையாமலிருக்க மாட்டான்.

ஜெ 

முந்தைய கட்டுரைஊடகம் எனும் Matrix
அடுத்த கட்டுரைகிறிஸ்தவ இறையியல் வகுப்புகள்