துடுப்புவால் கரிச்சானின் நாட்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்நலமே விளைக என்று பிராத்திக்கின்றேன்.

பறவையின் நிழற்சாயல்(Silloutte) படத்தை பார்த்து அனைவரும் அது எந்த பறவை என்று அடையாளம் காணவேண்டும்அந்த வரிசையில் வந்த துடுப்புவால் கரிச்சான் நிழல்படத்தை பார்த்ததும் மொத்த வகுப்பும் ‘ஏய்ய்ய்….’ என்ற ஒரு மகிழ்ச்சி ஓலி எழுப்பினர். அந்த சில நோடிகள் அங்கிருந்த அனைத்து நபர்களுக்கும் கூட்டாக ஒரே சிந்தனை ஒரே மனம் என்ற நிலை உருவானது. இதனை இயற்கையோடு நெருங்கிய சில வினாடிகள் என்று கூட சொல்லலாம். இதனை தற்செயல் என்று சொல்லமுடியாது.

முந்தைய தினம் முதல் நாள் தொடக்க வகுப்புகள் முடிந்து மாலை பறவைகள் பார்ப்பதற்காக ஆசிரியர்கள் திரு ஈஸ்வரமூர்த்தி மற்றும் விஜயபாரதி இருவர் தலைமையிலும் இரு அணிகளாக பிரிந்து பறவைகளை பார்க்க அரம்பித்து, அந்தி நேரத்தில் இந்த பகுதியில் அறிதாக காணப்படும் துடுப்புவால் கரிச்சான் பார்ப்பதற்காக அனைவரும் யானைக்குடிலை பார்த்தமாதிரி பள்ளத்தாக்கின் மறுபுறம் அமர்ந்திருந்தோம். குழுவே அமைதியாக அரை மணி நேரம் காத்திருந்தது…. எதிர்பார்த்த அசரிரியும் கேட்கவில்லை அதன் தரிசனமும் கிடைக்கவில்லை! மழை தூரல் தொடங்கவே ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

இரண்டாம் நாள் மாலை பறவைகள் பார்ப்பதற்காக கிளம்பி காவல் குடில் வரை சென்று அங்கிருந்து குரு நித்யா அரங்கம் வழியாக கீழே யானைக்குடில் போய் முகாமிட்டு இருந்தோம். ஆம் முகாமிட்டு என்று தான் சொல்ல வேண்டும், அதற்கேற்ற ஒழுங்கும் அமைதியும் அங்கிருந்தது. போர் வீரர்கள் போல கையில் தொலைநோக்கியுடன் வேலியை ஒட்டி வரிசையாக சிலர், இன்னும் சிலர் குடில் அருகில் இருந்தனர், குழந்தைகள் 20 நபர்கள் உட்பட அனைவரும் அமைதியாக அந்த அரை மணிநேரம் காட்டின் ரிங்காரத்தை மிக கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். துடுப்புவால் கரிச்சானிற்கான தடையங்களை ஏதிர் நோக்கி. ஆனால் இன்றும் காட்சி கிடைக்கவில்லை.இந்த இரண்டு நாளும் வேறு சில பறவைகள் கண்டோம் பச்சைக்குருவி இனப்பறவைகள் சில, மாங்குயில் மற்றும் வெண்கல கரிச்சான்.

இந்த தேடி கண்டுக்கொள்ளும் ஆர்வம் கண்ணாம்பூச்சி ஆட்டத்திற்கினையான குறுகுறுப்பு என்றாலும் இங்கே ஒரு பறவையை கண்டுகொள்வதில் இருக்கும் உற்சாகம் நிறைவடைவதில்லை மாறாக அங்கிருந்து தான் தொடங்குகிறது. இப்படியாகவே இந்த குழுவின் ஒரே சிந்தனையாகதுடுப்புவால் கரிச்சான்மாறியது என்று சொல்லவேண்டும்.

மூன்றாம் நாள் காலையில் பறவைகள் பார்க்க சென்ற போது ஈஸ்வரமூர்த்தி அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அறிதான மஞ்சள் தொண்டை சின்னான் பறவையை பெஜீலெட்டி போகிற வழியில் விஜயபாரதி அடையாளம் கண்டுக்கொண்டார். தொலைநோக்கி கொண்டு அதனை அருகே பார்க்கும் நேரத்திற்குள் மூன்று இடங்கள் மாறி புதர்களுக்குள் சென்று மறைந்துக்கொண்டது. அவற்றை பின்தொடர்கையில் மற்றொரு புதிய பறவையை அறிமுகம் செய்துகொண்டோம்பழுப்பு ஈபிடிப்பான்’.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பற்றி அறிமுகம் என்பதே உங்கள் தளத்தில் வந்த விஜயபாரதியின் கடிதத்திற்கு பிறகு தான். பிறகொரு நாள் அருகில் இருக்கும் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு சென்றோம். வலசை காலம் முடிவடையும் நாட்கள் என்பதால் பறவைகள் குறைவாகவே இருந்தது. புதிய பறவைகள் சிலவற்றை கையேடு உதவியுடன் தெரிந்துக்கொண்டோம். அங்கு சென்று வந்த பிறகு பிள்ளைகள் இருவரும் அவ்வப்போது பறவைகள் பற்றி பேச தொடங்கினார்கள், தமிழக பறவைகள் கையேடு வைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடியிலும், வீட்டின் முகப்பில் எழும்பிச்சை மரத்தில் இருக்கும் கூட்டை பார்த்தும், பறவைகள் பெயர்களை சொல்வார்கள். அவர்கள் சொல்லித்தான் புள்ளி சில்லை, தையல் சிட்டு, வெண்புருவ வாலாட்டி போன்ற பறவைகள் இத்தனை இருந்தும் கவனிக்கவில்லை என்று புரிந்தது. அதன் பிறகே ஆர்வமும் கவனமும் கூடியது.

முதல் நாள் மாலை பறவைகள் பார்க்க சென்ற போது, நித்தியவனத்தின் காவல் குடில் எதிரில் இருக்கும் இரண்டு மரங்களிலும் மஞ்சள் கால் பச்சை புறாக்கள், இருவாச்சி பறவைகளும் கண்ணில் பட குதூகலமானோம். அடுத்ததாக நுழைவாயில் கதவின் அருகில் போகும் போது எதிரில் உள்ள புதரில் ஒரு சிறிய மரத்தில் வெள்ளைக்கண்ணி பறவையை பார்த்த அனுபவம் எனக்கு என்றும் நினைவில் நிற்கும்.

நம் உள்ளங்கை அளவே இருக்கும், தொலைநோக்கி கொண்டு நம் பார்வை முழுவதும் அந்த பறவை மீது மட்டும் இருக்கும்படி கவனித்து பார்த்தால், இந்த வெளியில் துள்ளி மிதக்கும் மீன்கள் அவை!

பார்க்கும் கனப்பொழுதில் பறவைகளின் உற்சாகமும், சுறுசுறுப்பும், ஒன்று மற்றொன்றை வருடிக்கொடுக்கும் அன்பும், நம்மையும் தொற்றிக்கொள்பவை. அப்படியான சில நேரங்களில் நாம் நின்றிருக்கும் இடம் கவனத்தில் இருந்து மறைந்திருக்கும், காலமும் நேரமும் கவனத்தில் இல்லாமல் போயிருக்கும். இதை இந்த கனத்தில் வாழ்வது என்று சொல்லலாம்.

ஆசிரியர் எக்கார்ட் டோள் அவர்களின்பவர் ஆப் நௌவ்புத்தகத்தில், வெளி மற்றும் நேரம் பற்றி பேசும் போது, ஒரு மரத்தை கவனித்து பார்த்துக்கொண்டே இருக்கும் போது ஏதோ ஒரு கனத்தில், நாம் மெய்மறந்து அந்த மரத்தோடு ஒன்றி நாமும் மரமும் ஒன்றே என்றாகிவிடுகிறோம் என்பதை சொல்கிறார். பறவையை கவனிப்பதில் இந்த அனுபவம் அதிகம் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஏன் இந்த பறவையை பார்க்க வந்தோம் என்பதையும் மறந்து, நம்மையும் மறந்து பார்த்துக்கொண்டிருக்கும் பறவையாக மாறியிருப்போம்.

மூன்று நாட்களும் சீரான இடைவேளியில் வகுப்புகள். பறவைகளின் புற தோற்றம் பற்றிய வகுப்பில் ஒரு கேள்வி, ஏன் பெண் பறவைகளுக்கு வண்ணங்கள் குறைவாக இருக்கிறது? பறவைகளின் கூடுகள் பற்றிய வகுப்பில், இனப்பெறுக்க காலத்தில் இறை தேட சென்ற ஆண் இருவாச்சி பறவை இறந்துபோனால் மரப்பொந்தில் அடைப்பட்டிருக்கும் அதன் இணை பெண் பறவை எப்படி வெளியே வரும்? போன்ற கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன, இன்றைய சராசரி கல்வி பள்ளி சூழலில் அவர்களுக்கு பள்ளி அல்லாது சூழலிலிருந்து ஊக்கபடுத்தபட வேண்டிய அவசியமான ஒன்றுசிந்திப்பது’. இப்படியான தனித்திறன் வகுப்புகள் வழியாக சிந்திக்கும் பழக்கங்களை வளர்த்துக்கொள்வது கூடுதல் சிறப்பு.

இந்த வகுப்பிற்கான ஆசிரியர்கள் இருவரும் குழந்தைகளை நன்கு  ஊக்கப்படுத்தி, உத்வேகத்தையும் ஆர்வத்தையும் குறைக்காமல், வகுப்புகள் வடிவமைத்து, குழந்தைகளின் கவனம் முழுவதும் இந்த மூன்று நாளும்பறவைகள் என்ற புள்ளியிலேயே வைத்திருந்தனர். குறிப்பாகநிழற்சாயல் படத்தை காட்டி பறவையை கண்டுக்கொள்வது, ஒலியை கேட்டு பறவையின் பெயரை குறிப்பிடுவது, பறவை படத்தை பார்த்து நாமே ஒரு பெயர் வைப்பது போன்ற வகுப்புகள்.

சலீம் அலி மற்றும் ம.கிருஷ்ணன் என்ற இரண்டு ஆளுமைகளை அறிமுகம் செய்தும், அறிந்திருக்க வேண்டிய இன்றைய சில அறிஞர்கள் பற்றியும் பேசினர்.

எந்த ஒரு சிறு பிள்ளையின் ஆர்வமும், அவர்கள் வேகமும், குறுகுறுப்பும் குறும்புகளும் நாம் அறிந்ததே, இங்கு அப்படியான 20 குழந்தைகள் அதிலும் 8 முதல் 14 வயது வரை அனைவரையும் அந்த ஒற்றை புள்ளியில் மிக லாவகமாக அவர்கள் வழியிலே அவர்களை அமர்த்திவிட்டார்கள். அதற்காக ஓரு சபாஷ் சொல்ல வேண்டும்!!

கூடவே நித்தியவனத்தை, அதன் கர்மயோக தியானத்தில் இருந்து அசைத்தும் பார்த்திருக்கிறது பிள்ளைகளின் துடிப்பான ஆராவாரமான இந்த மூன்று நாட்கள்.

பொருமையும், அயறாத தேடலும், உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும் இந்த பழக்கம் வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன்.

இராமும் நானும் இந்த வகுப்பிற்காக வர எங்கள் ஊரில் இருந்து இரவு 7;30 மணிக்கு தொடங்கிய பயணம் அடுத்த நாள் காலை 6;15 மணியளவில் தாமரைக்கரையில் தடைப்பட்டது. அங்கிருந்து ஏதும் சரக்கு ஏற்றி செல்லும் வாகனம் சென்றால் கேட்டுப்பார்ப்போம் என்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் இராம் இங்கிருந்து நடந்து போகலாமா என்று வேற கேட்டுவைத்தான்! 😉 நல்ல வேளையாக அந்த வழியே வந்த நண்பர் பெங்களூர் திரு பாலமுருகன் குடும்பத்தினர் அவர்கள் காரில் எங்களையும் ஏற்றிக்கொண்டு நித்யவனம் வர உதவி செய்தார்கள். அதே போல் திரும்பி போகிற போதும் அவர்களே எங்களை ஈரோடு வரை அழைத்து சென்றனர். அங்கிருந்து திருச்சி வழியாக காரைக்குடி வந்து வீடு சேர சாம்ம 12;30 மணி. இந்த பயணத்திற்காக இராமிடம் இருந்து எந்த குறையும் வரவில்லை. இதுவே பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. (இவன் தான் காரைக்குடியில் இருந்து 10 கீ.மி தூரத்தில் இருக்கும் சொந்த ஊரிற்கு போக கிளம்பினால் ஆட்டோ, ஸ்கூட்டி, சைக்கிள் என்று தான் இருக்கும் டவுன் பஸ் கடைசி தான் அதிலும் முடிந்தால் தவிர்த்துவிடுவான்.)

இரண்டு நாட்களும் விடியற்காலை 5;30 மணிக்கு பறவை பார்க்க எழுந்ததின் தொடர்ச்சியாக வீட்டில் காலையில் அவனை எழுப்பவது சுலபமாகிவிட்டது. காலை எழுந்ததும் பறவை பார்க்கிறேன் என்று 20 நிமிடங்கள் வரை இதனை பழகுகிறான். மெர்லின் செயலில் பதிவு செய்து விபரங்கள் பார்த்து விட்டு தவறாமல் வகுப்பு ஆசிரியர் ஈஸ்வரமூர்த்தி அவர்களுக்கு அனுப்பி ஏதாவது கேள்வி அல்லது பார்த்ததைபற்றி செய்தி அனுப்பிவிடுகிறான். அவர்களும் தினமும் அவனை ஊக்குவிக்கும் விதமாக பதில் அனுப்புகிறார்கள் அதற்கும் ஒரு பொருமை வேண்டும்.

குழந்தைகளின் ஆர்வங்கள் பல மாறிக்கொண்டே இருக்கிறது சிலவற்றை மட்டுமே தொடர்கிறார்கள் அப்படி மாறாத ஒன்றாக இந்தபறவை பார்த்தல்திறன் இருக்கவேண்டும் என்பதற்காக இராமின் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக அவன் முன்பே கேட்டிருந்தபனி மனிதன் போல ஒரு அறிவியல் புனைவுஉடையாள் புத்தகம் வாங்கி அதில் இரண்டு ஆசிரியர்களின் வாழ்த்துக்களையும் பெற்று வர அறிவுரித்தினேன்.

ஆசிரியர்களின் இந்த சொற்கள் அனைவருக்குமானது.’பறவைகளின் அற்புதங்கள் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள்’.

முந்தைய கட்டுரைபக்தி இயக்கம் பற்றி…