பக்தி இயக்கம் பற்றி…

ஜெ,

நான் நாத்திகன். எனக்கு முன்னே பெரும் இடராக இன்று நான் பார்க்கும் இந்த பக்தி பிரவாகம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றிய போக்கு என அறிந்திருக்கிறேன். ஆறாம் , ஏழாம் நூற்றாண்டு வாக்கில் துவங்கி படையெடுப்புகள் வந்த காலம் பின்பும் பிரிட்டிஷ் காலம் வரை இது இருந்து இருக்கிறது.வெவ்வேறு அளவு வடிவுகளில் இன்றும் இருந்துகொண்டு உள்ளது. இந்த பிரவாகம் தோன்ற வரலாற்று அவசியம் என்ன என யோசித்து பார்க்கையில் சரியான காரணம் கிடைக்கும் அளவுக்கு அறிவு எனக்கு  இல்லாவிட்டாலும் there must be a reason. ஏதோ ஒன்றை காப்பாற்ற அல்லது ஒரு போக்கை  மாற்ற இவ்வாறு  அந்தந்த காலத்து தத்துவ ஞானிகள் செய்து உள்ளனர். எதை காப்பாற்ற இந்த பக்தியை உள்ளிழுத்தனர்??

மிக உயரிய தத்துவங்களை பேசிய சங்கரர் போன்றோரே  “கோவிந்தம் பஜ மூடமதேஎன எழுதும் அளவிற்கு தத்துவ விசாரனைகளை தாண்டி பக்தி மார்க்கம் முக்கியமாக பட்டு இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இந்த மூட பக்தியின் பாதுகாப்பில் இத்தனை தத்துவங்களும் உறங்கிக்கொண்டு இருந்தனவோ என்ற சிந்தனையும் எழாமல் இல்லை. இந்த பக்தி அரண் பெரும்  மதிலாக , அகழியாக மாறி இந்த தத்துவங்களை தனக்குள் மறைத்து பிறரை அண்டவிடாத காலத்தில் ந்ம்மை கொண்டு சேர்ததோ எனவும் நினைக்க தோன்றியது.

ஆக இந்த போக்கு தொடங்கிய காலக்கட்டம் எப்படி இருந்திருக்கும் ?

உண்மையிலேயே பக்தி மார்கத்தின் மூலம் மட்டுமே  சனாதன அல்லது வேதத்தின் சாரங்களை  தத்துவத்தை மீட்டெடுக்கும் நிலை இருந்ததா? மிட்டெடுட்த்திருக்காவிட்டால்தான் என்ன ?

எனில் , வெறும் சனாதன அல்லது தத்துவ‌ மீட்பு மாத்திரமே இதன் நோக்கமா ? அல்லது , இந்த பக்தி மார்க்கம் தொடங்கியகாலக்கட்டதில் (இந்து மத பிரிவுகள் ஏதுமே அரச மதமாக உருபெற்றிறாத காலம் என நினைக்கிறேன்) மனிதர்களின்  value system , கலாசாரம் எப்படி இருந்தது. அப்படியே இருந்திருந்தால்தான் என்ன?

இவ்வாறு பல கேள்விகள் என்னுள் எழுகின்றன. இதற்கு உங்கள் அறிதலில் இருந்து சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன்.

சீதாராமன்

அன்புள்ள சீதாராமன்,

இந்த வினாக்களை இத்தனை எளிதாக, ஓர் அரட்டைபோல, விவாதிக்க முடியாது. இவை ஆன்மிகம், பண்பாடு, வரலாறு என பல தளங்களைச் சேர்ந்தவை.

பக்தி இயக்கம் பற்றி மட்டும் ஒரு சுருக்கமான சித்திரத்தை அளிக்கிறேன். நீங்கள் இவற்றை நூல்களை கொண்டே விரிவாக புரிந்துகொள்ள முடியும்.

பொயு 7 ஆம் நூற்றாண்டு முதல் பக்தி இயக்கம் ஆரம்பிக்கிறது. (தமிழகத்தில் முதல் ஆழ்வார்களின் காலகட்டத்தில் உருவாகி வட இந்தியாவெங்கும் பரவிய ஒரு குறிப்பிட்ட கலாச்சார இயக்கத்தையே நாம் பக்தி இயக்கம் என்கிறோம்)

அதற்கு முன்பு பக்தி இல்லாமல் இருந்தது என்று அதற்குப்பொருள் இல்லை. பக்தி என்பது பலவகையில் என்றும் இருந்துகொண்டிருந்தது – வரலாற்றுக்காலத்திற்கு முன்னரே. பழங்குடிகளுக்கு வழிபாடுகளும் அவர்களின் கடவுள்கள்மேல் பக்தியும் உண்டு. நமக்குக் கிடைக்கும் கற்காலத்துச் சின்னங்கள் அவர்களின் தெய்வங்களையே முக்கியமாகக் காட்டுகின்றன. கற்காலம் முதல், தீயைக் கண்டுபிடித்துச் சுட்டுத்தின்ன ஆரம்பிப்பதற்கும் முறையாக மொழி வழியாகப் பேசிக்கொள்வதற்கும் முன்னாலிருந்தே தெய்வங்களும் பக்தியும் இருந்திருக்கின்றன என்றுதான் குகை ஓவியங்கள் காட்டுகின்றன. கற்காலக் குகை ஓவியங்களிலெல்லாமே பூசாரி இருக்கிறான்.

இந்தியாவில் இறைவழிபாடு பல வகைகளில் இருந்தது. எல்லாமே பழங்குடிகளிடமிருந்து உருவாகி வந்தவைதான். ஒன்று, வேதவேள்வி மரபு. எரியூட்டி அவியிடுதல், அருவமான தெய்வங்களை வழிபடுதல். இரண்டு, படையலும் பலியும் தந்து வழிபடுதல். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் தெய்வங்களை உருவங்களாக்கி வழிபடுதல். மூன்று, தெய்வங்கள் மானுடன்மேல் ஆவேசித்தல், அத்தெய்வங்களை வழிபடுதல்.

மனிதகுலம் இனக்குழுக்களாக இருந்தபோது இந்த வழிபாட்டு மரபுகள் தனித்தனியாக பல சரடுகளாக வளர்ந்தன. வரலாற்றில் அரசுகள் உருவானபோது ஓர் அரசுக்குள் எல்லாவகை மனிதர்களும் வாழ்ந்தனர். அப்போது இவை ஒன்றோடொன்று உரையாடி ஒன்றாகக் கலந்தன.

அதன்பின்னர்தான் தத்துவம் உருவானது. வழிபாடுகளிலுள்ள குறியீடுகளையும் படிமங்களையும் மதங்கள் தத்துவார்த்தமாக விரிவாக்கிக் கொண்டன. அந்த தத்துவ உருவகங்கள் வெவ்வேறு வழிபாடுகளை இணைப்பதற்கான விளக்கங்களாக ஆயின. அவ்வாறுதான் மதங்கள் உருவாயின. மதங்கள் எல்லாமே பண்பாட்டு ஒருங்கிணைப்பால், பல்வேறு வழிபாடுகளின் தொகுப்பாக உருவாகி வந்தவை.

இந்தியப்பெருநிலத்தில் மதங்கள் இன்றைக்கு மூவாயிரத்தைநூறு- நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன், இரும்புக் காலகட்டத்தின் தொடக்கத்தில் உருவாகியிருக்கலாம். அரசுகள் பேரரசுகளாக ஆனபோது மதங்கள் பெருமதங்களாயின. வெவ்வேறு இனமக்களை ஒன்றாக இணைக்க பெருமதம் தேவைப்பட்டது. அல்லது மக்கள் ஒருங்கிணைந்தபோது பெருமதம் உருவாகியது. சைவமும் வைணவமும் பெருமதங்களாக ஆயின

சைவ- வைணவப்பெருமதங்கள் உருவான பின்னர் மேலும் பலநூறாண்டுகளுக்குப் பின்னர்தான் பக்தி இயக்கம் ஆரம்பிக்கிறது. ஆகவே பெருமதங்களை பக்தி இயக்கம் உருவாக்கவில்லை. பக்தி இயக்கம் என்பது பெருமதங்களுக்குள் உருவான ஒன்று

ஏன் அது உருவானது? பக்தி இயக்கத்தின் உள்ளடக்கம், அதற்குப்பின் வந்த வரலாற்று மாற்றம் இரண்டையும் பார்த்தால் அது புரியும்.

அ. பெருமதங்களின் மையம் வைதிகம் சார்ந்ததாக, உயர்குடிகள் சார்ந்ததாக இருந்தது. பக்தி இயக்கம் வழியாகவே அது சாமானிய மக்களின், அடித்தள மக்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. பக்தி இயக்கத்தையே சிரமண இயக்கம், உழைப்பவர் இயக்கம், என்று சொல்வதுண்டு. பக்தி இயக்கத்தின் கதைகள் எல்லாமே வேதஞானம், அதிகாரம் இரண்டைவிடவும் எளிமையான மக்களின் தூயபக்தியே கடவுளுக்கு அணுக்கமானது என்றே காட்டுகின்றன

ஆ. பக்தி இயக்கம் இந்தியச் சமூகத்திலுள்ள அடித்தளமக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் ஆகியவற்றை பெருமதங்களுக்குள் செலுத்தி மையத்துக்குக் கொண்டுசென்றது

இ. பக்தி இயக்கம் வேள்விகளுக்குப் பதிலாக இசை, கவிதை, கலைகள் ஆகியவற்றை பக்தியின் முகமாக முன்வைத்தது.

வரலாற்றுநோக்கில் பக்தி இயக்கம் என்பது வெறும் பக்தி அல்ல. அது அடித்தளத்து மக்கள் அதிகாரத்தை அடைந்த ஒரு வகையான சமூக- அரசியல் எழுச்சி. மத அதிகாரம், கருத்தியல் அதிகாரம், பொருளியலதிகாரம் ஆகியவை மக்களிடம் வந்துசேர்ந்தன.

சங்கரர் பக்தி இயக்கத்தின் எதிர்த்தரப்பு அல்ல. அவர் தன்னை பக்தி இயக்கத்தின் நண்பராகவே குறிப்பிடுகிறார். பெரும் பிரியத்துடன் தமிழ்ஞானசம்பந்தனை திரவிட சிசு என்கிறார்.

சங்கரர் முன்வைத்த தூயபிரம்மவாதம் இந்து மதத்தின் ஆறு மதப்பிரிவுகளையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்தது. அது உண்மையில் பக்தி இயக்கத்துக்கே உதவியது.

இன்றைய இந்தியா என்பது பக்தி இயக்கத்தின் கொடை. நம் இலக்கியங்கள், கலைகள், இசை அனைத்துமே பக்தி இயக்கத்தால் உருவானவை. பலநூறு இனக்குழுக்களாக, அரைப்பழங்குடி வாழ்க்கை வாழ்ந்த கோடானுகோடி மக்கள் சைவ- வைணவ மதங்களுக்குள் திரட்டப்பட்டனர். அடையாளமும் அதிகாரமும் அடைந்தனர். நம் திருமணம், பிறப்பு, சாவு என எல்லாச் சடங்குகளும் பக்தி இயக்கத்தால் வரையறை செய்யப்பட்டவை.

பக்தி இயக்கம் என்பது ஒரு மாபெரும் மீட்பு- தொகுப்பு இயக்கம். இந்தியாவின் அடிப்படைத்தள மக்களின் பண்பாடுகளை அது தொகுத்தது. அவர்களின் வாழ்க்கைமுறையே வழிபாடுகளாகவும் சடங்குகளாகவும் இந்து மதத்துக்குள் இன்றுள்ளன. அவர்களை அது வரலாற்றை உரிமைகொள்ளச் செய்தது

ஜெ

முந்தைய கட்டுரைஉளக்குவிப்பு- தியானம் பயிற்சி
அடுத்த கட்டுரைதுடுப்புவால் கரிச்சானின் நாட்கள்