கனவும் நடைமுறையும்

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு,

என் பெயர் அ, நான் 2018 ஆம் ஆண்டு மின்பொறியியல் துறையில் B.E. பட்டம் பெற்றேன். என் கல்லூரி நாட்களில் பொறியியல் சார்ந்த (control systems) படிப்பிலும் அதன் ஆராய்ச்சியிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். பின்பு கடந்த 4 வருடங்களாக embedded software engineer ஆக பணியாற்றி வருகிறேன். ஆனால் அதில் என்னால் முழு மனநிறைவு அடைய முடியவில்லை. வேலையில் சரியான கவனம் செலுத்த முடியவில்லைஎன் வேலையில் ஏதேனும் ஒரு creative process  வேண்டும் என்று பட்டது, ஏதேனும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்சிறு வயது முதல் எனக்கு இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் அதில் ஒரு career வேண்டும் என்று நான் என்றும் ஆசைப்பட்டது கிடையாது. எப்போதுமே career and interest ஐ தனி தனியாகவே பார்த்து பழகி விட்டேன். சென்ற மாதம் மிகுந்த frustration இல் வேலையில் இருந்து resign செய்து விட்டேன். வெற்றியோ தோல்வியோ ஒரு முறையாவது இசை துறையில் ஏதேனும் ஒரு வேலை தேடிக்கொள்ள முடிவெடுத்தேன். இசை துறை சம்மந்தமான course களை பயின்றும், ஒரு சில இசை அமைத்தும் வருகிறேன்எனக்கு 2023 ஆம் ஆண்டு திருமணம் ஆனது, இப்போது எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறான். வாழ்க்கையை பற்றின ஒரு பயமும் கேள்வியும் ஒவ்வொரு நாளும் என்னை குழப்புகிறதுபுத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.

சில நாட்களுக்கு முன்பு உங்களுடையஅறம்சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அது தான் நானாக தமிழில் படித்த முதல் புத்தகம். அந்த புத்தகத்தை படிக்கும்போதே ஒரு சில இடங்களில் என்னையே அறியாது என்  உடம்பில் சில வேதியல் மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தேன். இந்த புத்தகத்தை படிக்கும்போதே நீங்கள் இடும் காணொளிகளையும் உங்களுடைய இணையதள இதழையும் தொடர்ந்து படிக்க ஆரமித்தேன். எந்த ஒரு கருத்தையோ சிந்தனையையோ முன்வைக்கும்போது உங்களுடைய தருக்கரீதியான பார்வை என்னை ஈர்த்தது. இப்போது உங்களுடையஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்புத்தகத்தை படித்து வருகிறேன். உங்கள் காணொளிகளை கேட்கும்போது, தமிழ் இலக்கியதிலும் வாழ்நாளில் ஒரு சிறு பங்களிப்பேணும் செய்து விட வேண்டும் என்ற ஆசை வருகிறது

அறிவார்ந்த கருத்து பரிமாற்றத்திர்க்கும் discussion போன்ற வற்றிற்கும் ஒரு circle வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டதன் இன்றியரியாமையை நான் உணர்கிறேன். முழுமையறிவு தளத்தில் நீங்கள் list செய்யும் வகுப்புகளில் இசை அல்லது இலக்கியம் சம்மந்தமான வகுப்புகளை சேர்க்க பரிந்துரைக்கிறேன். இப்போது குறிப்பிட்டுள்ள வகுப்புகளில் டிசம்பர் 6,7,8 நடக்கவிருக்கும் கிறிஸ்தவ இறையியல் வகுப்புகளில் கலந்து கொள்ள விழைகிறேன். அதற்கான procedure என்ன என்பதை பகிர தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு நன்றியுடன்,

 

அன்புள்ள அ,

நம் இந்தியச் சூழல் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இன்று உள்ளது. இந்தியாவில் 2000 வரை இருந்தது தொடக்க முதலீட்டிய காலம் எனலாம். காலகட்டத்தில் ஒருவர் அவருக்கு வாய்த்த வாழ்க்கையை வாழவேண்டியிருந்தது. அது இயல்பாக இருந்தது. அதில் நிறைவும் கண்டனர். இன்று இருப்பது வளர்ச்சியடைந்த முதலீட்டியக் காலம். இன்று ஒவ்வொருவரும் தனக்கான வாழ்க்கையை, நிறைவை தேடவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது.சமூகத்துக்காக அல்லது சொர்க்கத்துக்காக எவரும் வாழ விரும்பவில்லை. இந்த வாழ்க்கையே முக்கியம் என்னும் எண்ணம் நிலைகொண்டுவிட்டது. அனைவரும் இந்த வாழ்க்கையை ஒரு பிரியாணிக்கொண்டாட்டமாக நிகழ்த்த விரும்புகின்றனர்.பல்லாயிரத்தில் ஒருவர் அதை தனக்குப் பிடித்தபடி படைப்பூக்கத்துடன் நிகழ்த்த விரும்புகின்றனர்.

இந்த இரண்டாம்வகையினருக்கான வாழ்க்கைச்சூழல் இங்கே இன்னும் உருவாகவில்லை. அமெரிக்காவில் ஒருவர் தன் விழைவுக்காக வேலையை விட்டால் அவர் இழப்பது பெரியது ஒன்றும் அல்ல. திரும்பவும் அவ்வேலைக்குப் போகமுடியும். அடிப்படைப்பொருளியல் பாதுகாப்பு எப்படியும் அமெரிக்காவில் அமையும். இந்தியா அப்படி அல்ல. இங்கே நாம் பொருளியல் பாதுகாப்பை விட்டுவிட்டு எதுவும் செய்ய முடியாது. நாம் இன்னும் வறுமைநீங்காத ஒரு சமூகம். மிகக்குறைவான வாய்ப்புகள் கொண்ட ஒரு சமூகம். இங்கே ஒருவன் தனக்கான வாழ்க்கையை, தன் கலையைத்தேடி உலகியலை துறப்பதென்பது தற்கொலைத்தனமான முயற்சி. உலகியல் துன்பங்கள் காலப்போக்கில் அவன் சுதந்திரம், கலை ஆகியவற்றையே அழித்துவிடக்கூடும்.

இங்கே உலகியலுக்கான ஒரு பாதுகாப்பை, ஓர் அடிப்படையை உருவாக்கிக்கொண்ட பின்னர்தான் மேற்கொண்டு தனக்கான தேடலில் ஈடுபடவேண்டும். ஆகவே எதையும் சிறிய அளவில் செய்து பார்க்கவேண்டும். ஒன்றைச் செய்துபார்க்கும்போதுதான் உண்மையாக நமக்கு அதில் ஆர்வமுள்ளதா, நமக்கு திறமை உள்ளதா என நமக்கே தெரியும். நம்முடையது வெறும் ஒரு தற்காலிக ஈடுபாடாக இருக்கலாம். நாம் எண்ணுவதைப்போல நமக்கு திறமை இல்லாமலும் இருக்கலாம். ஆகவே சிறிய அளவில் செய்து பார்க்கலாம். சிறிய அளவில் எதையாவது அடையலாம். அதன்பின் நம் தேடலை விரிவாக்கம் செய்யலாம்.

இசை போன்றவற்றில் பயிற்சி முக்கியம். அதற்கு கொஞ்சகாலம் தேவையாகும். அதுவரை உங்கள் பொருளியல் தாக்குப்பிடிக்கவேண்டும். உங்கள் பொருளியலுக்கு ஓர் அடிப்படையை உருவாக்கிக்கொண்டபின் அதில் ஈடுபடுவதே உகந்தது. முழுவாழ்க்கையையும் கோரும் வேலையில் இருந்தபடி கலையிலக்கியங்களில் ஈடுபடுவது இயல்வதல்ல என்பது உண்மை. தேவையான அளவு வாழ்க்கையின் அளவை குறைத்துக்கொண்டு நமக்கான தேடலுக்கு உகந்த கொஞ்சம் சவால்குறைந்த வேலையை ஈட்டிக்கொள்ளலாம்.

பயில்வதற்கான உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். பயில்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த சிலர்
அடுத்த கட்டுரைஅன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்