அன்புமிக்க ஜெயமோகன் சாருக்கு,
ஆலயக்கலைக்கான வெள்ளிமலை பயணம், வழக்கமான என் தாழ்வுணர்வு, பயம், என் முயற்சியின் மீதான நம்பிக்கையின்மை என்ற மனநிலையுடன் தான் தொடங்கியது. இம்முறை என் மகன் 8 வயது ஆரண்யாவுடன், வழக்கமாக குழந்தைகளுடன் தனிப்பயணம் மேற்கொள்ளும்போது உள்ள பயம், பதற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் ஆலயக்கலை ஆசிரியருடந்தான் பயணித்தோம்.
ஒவ்வொரு கற்றல் நிகழ்வின் போதும் எனக்குள் புதிய திறப்பை உணர்வேன். இம்முறை மனதளவிலான விழிப்புணர்வுக்கு தொடக்கமாக அமைந்துவிட்டது.
சிற்பங்களின் அம்சங்களை காணும் முறையும், சிற்பங்களை கவிதை, மரபு, புராணக்கதைகளென புள்ளிகளை இணைத்து பார்த்து ரசிக்கும் பெரிய உலகை திறந்துவிட்டார் ஆசிரியர் ஜே கே.யானையை பாம்பு விழுங்கும் திருஞானசம்பந்தரின் கயிலாய மலை குறித்த பாடலில் தொடங்கி, தஞ்சை பெருவுடையார் கோயில் கயிலாய மலையையும் கடந்து தட்சிணமேருவாக உயர்ந்து நிற்கும் அழகையும் சொல்லி, அதன் அறிவியலின் படி திருவள்ளுவ சிலையை வடிவமைத்த கணபதி ஸ்தபதி வாழ்வில் நிறுத்திய போது, உடலும் மனமும் சில்லிட்டு விட்டது.
ஏதோ பெருங்கடலில் இறங்கிவிட்ட பயமும் பதட்டமும் பின் உற்சாகமும் ஒன்று சேர்ந்துவிட்டது.
ஆரண்யா பயணம் என்றாலே உற்சாகமாகிவிடுவான்.
வாசிப்பு பயிற்சியில் நீங்கள் சொன்னது எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் சார். குழந்தைகளை நம்பிக்கையுடன் வளருங்கள் என்று அழுத்தமாய் சொல்லியிருந்தீர்கள்
ஆரண்யா வை முடிந்த வரை கலை சார்ந்த சூழலில் இருக்க வைக்கவே எப்பொழுதும் நாங்கள் இருவரும் முயல்வோம்.
ஆலயக்கலை வகுப்பின் தொடர்ச்சியாக அஜந்தா,எல்லோரா,பதாமியென பெரும் பயணம் இரண்டு ஆரண்யா சாமோடு போய் வந்தான்.அதன் தொடர்ச்சியாகவே அவனை உங்களிடமும்,ஜே கேவிடமும் அனுமதி பெற்று ஆலயக்கலை வகுப்பிற்கு அழைத்து வந்தோம்
அவன் வரைந்த கோட்டோவியங்களைப் பார்த்தும், அவன் எடுத்த புகைபடங்களைப் பார்த்தும் அவனை குட்டி ஆசிரியனாகவே நடத்தினார்கள் இளங்குமரன் அண்ணனும் மருத்துவர் கார்த்திக்கும். இளங்குமரன் அண்ணாவின் குடும்பம் ஆரண்யாவை மடம் கோவிலுக்கு அழைத்துச் சென்று பலாமுசு பறித்துக் கொடுத்து ஊர் சுற்றி காட்டினார்கள். முகாமில் இருந்த அத்தனை நண்பர்களும் ஆரண்யாவை அன்புடன் அரவணைத்துக் கொண்டார்கள்.
ஆரண்யா பயப்படாமல் நித்தியவனத்தை அளந்து வைத்தான். நான் தான் வகுப்பை கடந்து நடக்கும் உரையாடலில் கேள்வி கேட்கவும், பாடியபோது கூட வரிகளை மறந்து போய் பயந்திருந்தேன்.
கற்றலின் பெரும் உவகையை இருவரும் ஒரு சேர அடையத் தொடங்கிவிட்டோம். முயற்சியின் பிடியை இறுக்கிக் கொண்டும், ஆலயங்களை பார்க்கும் ரசனையையும் மேம்படுத்தியபடி நாட்கள் செல்லும்… ஆசிரியர் ஜே.கே.விற்கும்,இது அத்தனைக்கும் மூல காரணமாக உங்களுக்கும் மன பூர்வமான நன்றி சார்
மதிப்புடன்
சரோஜா