அன்புள்ள ஜெ,
நேரடியாகவே ஒரு கேள்வி. நான் ஓர் இந்து. வேதாந்தஞானம் மீது ஆர்வம் கொண்டவன். சைவசித்தாந்தம் மீதும் ஈடுபாடுண்டு. யோகப்பயிற்சிகள் எடுத்து வருகிறேன். கிறிஸ்தவக் கல்வி எனக்கு எந்தவகையில் தேவை?
ஆ.ராஜபாண்டியன்
அன்புள்ள ராஜபாண்டியன்,
நீங்கள் வேதாந்தத்தில் ஆர்வமுடையவர் என்பதனால் அக்கோணத்திலேயே பதில் சொல்கிறேன்.
வேதாந்த ஞானிகளான ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் , நாராயணகுரு, நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி ஆகியோருக்கு எதற்காக கிறிஸ்தவ மெய்யியல், பைபிள் தேவைப்பட்டது? அதற்காகவே உங்களுக்கும் தேவை.
தத்துவார்த்தமாகக் கேட்டீர்கள் என்றால் இதை இவ்வாறு சொல்வேன். உதயணர் எழுதிய நியாயகுசுமாஞ்சலி வேதாந்த மரபின் மூலநூல்களில் ஒன்று. அதில் பிரம்மத்தின் இருப்புக்கான தர்க்கபூர்வ விளக்கங்களை அளிக்கிறார். அவர் அளிக்கும் விளக்கங்களில் இரண்டு ஸ்ருதே, அனவத்யாத். ஸ்ருதே என்றால் உலகம் முழுக்க சுருதிகள் என்னும் மெய்ஞானநூல்கள் உருவாகியிருப்பது. அனவத்யாத் என்றால் மானுடம் முழுக்க ஞானிகள் உருவாகியிருப்பது. எவன் ஒருவன் அந்த இரண்டையும் மெய்யாகவே உணர்கிறானோ அவனுக்கு மட்டுமே வேதாந்த ஞானம் உரியதாகும்.
நாம் மதத்தால் கட்டமைக்கப்பட்ட உள்ளம் கொண்டவர்கள். மதம் நமக்கு மெய்யியலையும் பண்பாட்டையும் அளிக்கிறது. ஆனால் கூடவே நம் மதம் – பிற மதம் என்னும் பேதத்தையும் அளித்துவிடுகிறது. அந்த பேதத்தை கடக்காமல் மெய்ஞானம் நிகழாது. பேதபுத்தியே அறியாமையும் துயரமும் ஆகும் என்பது வேதாந்தம் கற்பிக்கும் ஞானம்.
பிற மதங்களைக் கற்பவர் அகம் விரிகிறார். தான் அடைந்த மெய்ஞானத்தை மானுடம் அளாவ விரித்துக் கொள்கிறார். கிறிஸ்தவக் கல்வி என்பது அளிக்கும் நெகிழ்வும் விரிவும் ஓர் இந்து மெய்ஞான சாதகன் கற்று அறிந்தாகவேண்டியவை.
ஜெ