அன்புள்ள ஆசிரியருக்கு,
ஆலய கலை வகுப்பு, நித்ய வனத்தின் முதல் வகுப்பு எனக்கு. என்னுடைய தோழன் மற்றும் தோழியுடன் சென்னையில் இருந்து வெள்ளி காலை 7.30 க்கு வந்து சேர்ந்தோம். அதிகாலையில் மலை வழியில் வந்ததே மிக உற்சாகமானதாக இருந்தது. வந்தவுடன் மணி அண்ணா தான் அறிமுகமானார். எங்கள் அறைக்கு சென்று தயாரானோம். ஆலய கலை வகுப்பிற்கு வர வேண்டும் என்று மிக ஆசையுடன் வெகு நாட்களாக முழுமை அறிவு தளத்தை பார்த்து கொண்டே வந்தேன். ஆனால் நாள் அறிவித்த பொழுது உடனடியாக என்னால் பதிவு செய்ய முடியவில்லை, என் வேலையின்/படிப்பின் முக்கியமான ஒரு கலந்தாய்வு அந்த நாளில் இருப்பதற்கான வாய்ப்பு இருந்தது, கடைசி நேரத்தில் தான் அது அடுத்த வாரத்த்திற்கு ஒத்தி போனது. என் தோழியின் முன் பதிவு காரணமாகவே எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல வேலையாக வர முடிந்தது.
என் 38 வயதில் இது வரை எத்தனையோ ஆலயங்களுக்கு சென்று இருக்கிறேன், எதோ ஒர் அளவு புராணமும் (அப்பா அம்மா சொல்லியதில்), வரலாறும் தெரியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், வகுப்பில் ஜெயக்குமார் அவர்கள் மெதுவாக வரலாறு வழியாக ஆலயத்திற்குள் அழைத்து செல்லும்போது தான் தெரிந்தது ஒரு சிறிய கடுகு அளவு கூட ஆலயங்களை பற்றி தெரியவில்லை என்பது. ஒரு சிறு உதாரணம் சிவன் ஆலயங்களில் இருப்பது நந்தி அல்ல ரிஷபம் என்று. இதை போல் எத்தனை எத்தனையோ.
ஆலயத்தின் ராய கோபுரம் முதல் கருவறை விமானம் வரையிலான பெயர்கள். உபபீடம் முதல் ஆதிஷ்டானம் முதல் சிகரம் வரையிலான விளக்கங்கள். சிவன் ஆலயத்தின் கோஷ்டங்களில் இருக்கும்/இருக்க பட வேண்டிய சிற்பங்கள் வரை அனைத்துமே ஒரு பெரிய திறப்பாகவே இருந்தது எனக்கு.
வரலாற்றோடு ஆரம்பித்து celestial விளக்கங்கள் வரை வகுப்பில் ஆசிரியர் ஜெயகுமார் அவர்கள் விளக்கம் கொடுத்த பொழுது கண் இம்மைக்காமல் கவனித்தோம் அனைவரும். ஒரு சிறு கையேடு எடுத்து சென்றேன். என் இள நிலை கல்லூரி காலங்களுக்கு பிறகு இவ்வளவு குறிப்புகள் எடுத்தது இந்த வகுப்பிலே. சில குறிப்புகள் வேகமாக ஆசிரியர் சொல்லிவிட்டால் வேகமாக இடது புறம் அமர்ந்திருந்த எழுத்தாளர் சுசித்ரா அவர்களின் குறிப்பையோ அல்லது வலது புறம் இருந்த என் தோழியின் குறிப்பையோ பார்த்து எழுத வேண்டியது ஆகியது. அவ்வளவு விளக்கங்கள் இருந்தது வகுப்பில்.
சிற்பங்களின் ஸ்தானகங்கள், ஹஸ்தங்கள், கிரீட அமைப்புகள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் மிக கடினமாக இருந்தால் கூட அனைத்தயும் குறிப்பு எடுத்து கொண்டேன். எவ்வளவு அற்புதங்கள் ஒரு ஆலயத்தில், ஆசிரியர் ஜெயகுமார் அவர்கள் சொன்னதை போல் இவ்வளவையும் ரசிப்பதற்காகவே ஆலயத்திற்கு தனியே (பிரார்த்தனை தவிர) செல்ல வேண்டும்.
குடைவரைக்கோயில் விளக்கங்கள் அர்ஜுனன் தபசு (மாமல்லபுரம், மஹாபலிபுரம் அல்ல) சிற்ப்பங்களின் விளக்கங்கள், திருச்சி லலிதாங்குர பல்லவேஸ்வரம் குடைவரைக்கோயில் – அதற்காக விளக்கிய பாடலின் பொருள் (பார்வதி சிவனிடம் கங்கையுமுண்டு உன்னிடம், காவிரியும் பார்க்க வேண்டாம்), சித்தன்ன வாசல் ஓவியங்கள், பிள்ளையார் பட்டியின் சிற்பங்கள் இவை அனைத்தும் வந்த பொழுது மெது மெதுவாக வகுப்பின் தீவிரத்தை உணர முடிந்தது.
அடுத்ததாக ஒற்றைக்கல் கோவில்கள் கற்றளிகள் முடிந்தவரை அனைத்தையும் குறிப்பு எடுத்து கொண்டேன். கடைசியாக தஞ்சாவூர் ராஜ ராஜேஸ்வரம் ஆலயம். ஆலயலங்களின் உச்சம். வாயில் துவார பாலகர்களில் இருந்து விமான அமைப்பு வரை அணைத்ததும் மனதில் பசு மரத்துஆணி போல் பதிந்து விட்டன. என் 12 வயது மகனின் தஞ்சாவூர் பற்றிய சந்தேகங்களுக்கு சிறிதேனும் பதில் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. தஞ்சை பெரிய கோயில் ஒரு உச்சம் என்றால் தாராசுரம் வார்த்தைகளே இல்லை சொல்வதற்கு.
இவை அனைத்தயும் இரண்டரை நாள்களில் நான் ஓரளவேனும் தெரிந்து கொண்டேன், அதற்கு ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இன்னும் நிறைய அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இரண்டாம் நிலை வகுப்புக்காக காத்திருக்கிறோம்.
இவை அனைத்தோடு சேர்த்து போனஸ் ஆக கிடைத்த இசை கச்சேரி.. சுசித்ரா, நிரஞ்சன் பாராதி, திருமூலநாதன் மற்றும் ஜெயக்குமார் அவ்வர்களுக்கு நன்றிகள்.
இந்த வாய்ப்பு ஏற்படுத்திய ஜெ அவர்களுக்கு இனிய நன்றிகள். அங்கிருந்த இரண்டரை நாள்கள் எங்களுக்கு உணவு அளித்த சரஸ்வதி அம்மாவிற்கும், மணி அண்ணாவிற்கும் தாத்தாவிற்கும் நன்றிகள்.
அடுத்த வகுப்பிற்காக காத்திருக்கும்
ஈஸ்வரி.