அக்டோபர் மாதம் நடு தேதிகளில் ஒரு மூன்று நாள் பதாமி, அய்ஹோலே, பட்டடகல் பயணம் போக வர 5 நாட்கள் பிடித்தது(சென்னையிலிருந்து). இந்த ஆலய கலை குழு பயணங்கள் மனதிற்கு உகந்த ஒன்றாக மாறிவிட்டது. காரணம் நிறைய.. பயனுள்ள ஏதோ ஒன்றை செய்யப் போகிறோம் என முதலில் நமது மூளையை நம்பச் செய்ய தேவையான ஒரு திட்டமும் அட்டவணையும், வாசித்துச் செல்ல சில புத்தகங்களும் இருப்பதை கூட முதன்மையான காரணமாக சொல்லலாம். என்னை பொருத்தவரை மூன்று வகையாக இப்பயணங்கள் பொருள்படுகின்றன. ஒன்று, ஆலயங்களின் அமைப்புகளும் வரலாறுகளும் பற்றிய அறிதல், இரண்டாவது புதிய நிலம், இறுதியும் முக்கியமானதுமானதும் அங்கு நாம் சென்று நிற்கும் காலம்.மனங்களை பொருத்து விரித்து எடுத்துக் கொள்வதற்கான சாத்திய கூறுகளை கொண்டது அது.
பதாமியின் வரலாறு குறித்து ஆசிரியர் தந்த ஒரு வரைபடத்தின் மூலம் நான் அறிந்தது.. பதாமி குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு குலம் வந்து தனது அரசை நிறுவிய ஒரு இடமாக உள்ளது. அவர்கள் சள்க்ய, சளுக்கய என அழைக்கப்பட்ட குலத்தில் இருந்து உருவானவர்கள்.ஆதலால் சாளுக்கியர்கள். ஜெயசிம்மா வாதாபியின் முதல் சாளுக்கிய மன்னனாக அறியப்படுகிறான்.வாதாபி அவனது தலைநகரம்.
சிற்பக்கலையை பொறுத்த வரை பதாமி குடவரைகளாலும் சாளுக்கியர்கள் அமைத்த கற்றளிகளாலும் தனித்தன்மையுடன் அறியப்படுகிறது. இது ரசனை குறிப்பாக இருக்கட்டும் என்பதால் வரலாறையும் ஆலயக் கலை இலக்கணங்களையும் வேறு ஒன்றாக தொகுக்க வேண்டும்.
மலையின் மேலும் கீழும் பல்வேறு கால கட்டங்களில் சாளுக்கிய மன்னர்கள் எழுப்பிய கற்றளிகள் அமைந்துள்ளன. முதல் நாள் குடவரைகள் நான்கையும் பார்த்து பின் லோயர் சிவாலத்தையும் மேலிருந்த கோவில்களையும் ஒட்டுமொத்தமாக பார்த்தாயிற்று. அடுத்த நாள் பட்டக்கல், மூன்றாம் நாள் அய்ஹோளே.
மொத்த காட்சியும் கற்களின் வண்ணத்தால் நிறைந்து விட்டது. மூன்று நாட்களும் இரவு தூக்கத்தில் கோவில்களுக்குள்ளே சுற்றி கொண்டிருந்தேன். ஆலய கலை அமைவுகளின் அடிப்படை விசாரிப்புகள் தாண்டி அங்குள்ளவற்றினுடன் கனவுகளில் நிறைய உரையாடும் படியாய் தோன்றியது. முதல் நாள் கண்ட குடைவரைக் கோயில்கள் நான்கும் பேரழகு. சிற்பிக்கும் கல்லுக்கும் இடையே காதலில் உருவான குழந்தைகளாக அங்கு படுத்து கொண்டு வானோக்கிப் பார்க்கின்றன. காலம் அவற்றை கவனித்துக் கொள்கிறது.சரியான அளவில் குழைக்கப்பட்ட மண் போல அந்த பாறைகள் சிற்பியின் கைகளில் தங்களை வனையச் சொல்லியிருக்கலாம். ஒவ்வொன்றும் வாழ்வை விட்டு நீங்கா தெய்வ உருக்கள். எங்கோ இருந்து அத்தருணத்திற்காய் காத்திருந்து இறங்கி வந்து நிற்கின்றன.
முதல் குடவரையின் ஆடல் வள்ளான் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்தான். சிறு விரிசல் காரணமாக.அருகிருந்த வீணாதார ரிஷபாந்திகனை பார்க்கவே கண் போதவில்லை. ஒரு முழு கைலாய காட்சி அது.சிந்தையில் இருந்து நிறைந்து கைகளில் வந்து நின்றிருக்கும் போலிருக்கிறது. ரிஷபமும் பிரிங்கியும் வீணையும் சாய்ந்த கோலமுமாக ஒரு தரிசனம் அது.
இரண்டாவது, விஷ்ணு குடைவரை.பதாமியின் பாறைகளின் தன்மை நீரோட்டம் போன்ற வரிகளுடன் கூடியது.வராகன் பூதேவியை கடலில் இருந்து பெயர்த்து எடுத்து நிற்கிறான், அந்த காட்சிக்கு எவ்வளவு பொருத்தம் அந்த பாறைகள்?. வராகனின் முகத்தில் தான் எத்தனை பிரேமை?.அதற்கு நேர் எதிரான பாறைச்சுவரில் ஒரு திருவிக்கிரமன்.முழு காட்சியாக மாவலி வாமனனுக்கு பூதானம் கொடுப்பதும், பிறகு அவன் வின்னளப்பதுமாக. கொஞ்சம் ஆழ்ந்தால் அந்த இடத்தில் நாமும் நின்றிருக்கலாம்.
மூன்றாவது குடைவரையும் விஸ்வரூபங்களால் நிறைந்திருந்தது.பரவாசுதேவனாய் காலத்திற்கு அப்பால் அவன். நேர் எதிராய் ஒரு யுகத்தில் நரசிம்மனாய் இவ்வளவு ஒயிலாக அங்க வஸ்திரத்தை கையில் இட்டுக்கொண்டு சிறிது வளைந்து நின்றிருக்கும் அழகிய சிம்ம முகத்தோனை எங்கும் கண்டதில்லை. அவன் தலைக்கு மேல் கந்தர்வர்களும் வித்யாதர்களும் பறக்கிறார்கள். காற்றின் வேகம் காட்ட அவர்களின் உடைகளின் அமைவால் கை வர பெற்றிருக்கிறது.
நான்காவது குகை தீர்த்தங்கரர்ங்கள் அடங்கிய சமணர் குகை, அதற்கான அமைதியுடன். பௌத்தமும் சமணமும் விரிவாக வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. அடுத்து, மேலே உள்ள சிவாலயங்கள். இறுதியாக நாங்கள் அங்கு நுழைகையில் மிகத் தனிமையில் அவை. அதை சுற்றி கருமுக குரங்குகள் தனி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தன.குரங்கு தொகை அது. சில மட்டுமே கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன, மற்றவை அனைத்தும் ஒரு மோனநிலையில் மழைச் சாரலோடு சாரலாய்.கிட்டத்தட்ட வெண்முரசில் ஏதோ ஒரு மலையில் குரங்கு கூட்டங்களிடையே நிற்பது போன்று இருந்தது.மழை தூரல் சிறிது பெரிதாக குடைகளுடன் குரங்கு கூட்டத்திலிருந்து காத்துக்கொள்ள சத்தமே இல்லாமல் அனைவரும் சுற்றி வந்தோம்.
சுற்றுச்சுவர் முழுக்கவே இராமாயண சிற்பங்கள் சின்னஞ்சிறு சிற்பங்களும் அத்தனை நுணுக்கங்களுடன். பிறகு கீழேவந்து சேரும்போது நல்ல மழை.அனைவரும் தெப்பலாக நனைந்து பிறகு நனைவதைப் பற்றிய பெரிய அக்கறை இல்லாமல், மண்டபத்தில் ஏறி காலை தொங்க போட்டுக் கொண்டு உட்கார்ந்து ஒரு மணிக்கூறு போல மழையை வேடிக்கை. அப்படி ஒரு இடத்தில் நம்மை உட்கார வைக்க மழை தேவையாயிருக்கிறது. மேலிருந்து வரும் மழை அருவி விழத் துவங்கியதும் ஒரு உற்சாகக் கூச்சல்.மழைநனைதல், அருவிக்காட்சி நடுவில் இனிமையுடன் ஆசிரியர் அவர்களின் மழைப்பாடல்கள். மிக நிறைவான முழு நாள்.
அடுத்த நாள் பட்டடக்கல். அது ஒரு கோவில் தொகை.கற்களால் ஆன பூச்செண்டுகளை கட்டி மேலும் ஒரு பெரிய செண்டாக ஆக்கி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு ஆர்ட் கேலரி போல். தொடர்ந்து பல வருடங்களுக்கு உளிச்சத்தம் மட்டுமே அங்கு காற்றோடு பயணித்திருந்து இருக்கும் என்று தோன்றியது, ஒரு யோகம் போல தவம் போல.
சங்கமேஸ்வரர் கோயிலுக்கு முன்பகுதியில் ஒரு மதில் போன்ற அமைப்பின் அடிப்பகுதி போன்ற ஒரு கற்களின் அமைதியைக் காட்டி திரு. ஜெயக்குமார் அவர்கள் ‘இது சாதவாகனர்கள் காலத்ததாக இருக்கலாம், மதில்சுவர் போன்ற அமைப்பு..புதைந்துள்ளது.’என்றார். ‘காலங்கள் ஓடுகின்றன’ என்பது போல ‘காலங்கள் புதைந்துள்ளன’ என்பதும் தோன்றியது. இல்லை என்றால் காலம் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்பது.
அடுத்து ராவணப்பாடி குடைவரை ஆடலரசன். என்னவிதமான சிற்பம் அது. அவனோடு நாகங்களும் சேர்ந்து சுழன்றாடுகின்றன.. உற்றுப் பார்த்தால் சீறி விடும் உக்கிரம் அவற்றின் பார்வையில் உள்ளது. இறுதியாக அய்ஹோளே..பார்க்க பார்க்க தீராமல் வந்து கொண்டிருந்தன மூன்று நாட்களும் சிற்பங்கள். விதானத்தில் .. மும்மூர்த்திகளும் புடைப்புச் சிற்பங்களாக…கொள்ளை அழகு. நண்பர்கள்.. தரையில் படுத்துக் கொண்டு.. விதான கடவுளர்களிடம் பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தினார்கள்.
பயணத்தின் உச்சமாக இறுதியாக கண்ட நெகுட்டி மலை சமணர் கற்றளி. அதன் சிறப்புகளில் ஒன்று அங்கு கவிஞன் ரவிகீர்த்தியின் கல்வெட்டு. அதன் தமிழ் மொழியாக்கத்தை நண்பர் திருமதி.ஸ்வேதா சண்முகம் செய்திருந்தார். அங்கமர்ந்து ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொருவர் வாசிக்க அந்த மாலைநேரம் மன்னன் பொலக்கேசனின் கீர்த்தியை பாடிய கவிஞன் ரவி கீர்த்தியின் கீர்த்தியோடு பிரகாசமாய் இருந்தது. வாழ்த்துப்பாவின் இறுதியில் ஒவ்வொருவரும் அதை உணர்ந்தது போல் முகங்கள் நெகிழ்ந்திருந்தன,வாசிக்கும் போதே சிலரின் குரல்களும். அனைவரையும் விட அக்கவிஞனும் அவனுடைய பாட்டுடைத் தலைவனும் மிக அருகில் அமர்ந்திருந்த தருணத்தை அந்த பாடல்களில் நிகழச் செய்து கொண்டே உள்ளன அவை.
பொதுவாக இந்த பயணத்தில் என்னை கவர்ந்தவற்றில் மிக உச்சமாக திகழ்ந்தது அம்மை மகிஷாசுரமத்தினி. மேதியை சம்காரம் செய்பவள். வித விதமாக அதனை செய்கிறாள். அத்தனை கொலைகரங்களுடன் முகத்தில் அப்படி ஒரு புன்னகையும் சில இடங்களில் அழகான தாய் சிரிப்புமாக. கவனித்தால் ஒன்றில் கூட அவள் மகிஷனை பார்க்கவே இல்லை, சிறு பார்வையாக கூட. நம்மை நோக்கி புன்னகை புரிகிறாள், சிலவற்றில் உதடுவிரித்துச் சிரிக்கிறாள். கைகளும் கால்களும் அவற்றின் வேலைகளை புரிந்து கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொன்றிலும் அவள்கை ஈட்டி ஆழமாக அவனை கொன்றுத் தரைதட்டுகிறது.நடுமுதுகு, கழுத்து, அடிமுதுகு என வெவ்வேறு இடங்களில். அவன் நிமிர்ந்து அவளின் முகவாயை நோக்கிக் கொண்டிருக்கிறான். காலின் அழுத்தமும் கையின் விசையும் அவ்வளவுத் துல்லியமாக தெரிகிறது. அம்மண்ணில் நிறைய எருமைகள் அதேபோல் நாகங்களும் அதிகம் போலிருக்கிறது. நாகராஜன் இல்லாத கருவறை முகப்பே இல்லை. அத்தனை தோரண வாயிலும் அவர்களாலேயே முழுமை அடைகின்றன. தத்ரூபமான நாகங்கள், அவற்றின் தோல் அமைவுகள்
மொத்தத்தில் சிற்பிகள் வடித்து முடித்து கொஞ்சம் தூரம் நின்று அதன் நகைப்புகளை பார்த்த கணம் அத்தனை தெய்வங்களும் அவற்றிலிருந்து அவனைப் பார்த்தும் கணம் சிரித்திருக்கும்.
இறுதியாக சென்று பார்த்த ஒருத்தி மட்டும் தன் முகவாயை தூக்கிக் கொண்டு வான்பார்த்த வண்ணம் ஒரு யோக நிலை இமைமூடலுடன் மகிஷனை வதைத்துக் கொண்டிருந்தாள். சங்கிலியால் பூட்டப்பட்டிருந்த இரு கதவுகளை சிறிது விலக்கி ஒரு கண்ணை மட்டும் வைத்து பார்த்த போது நம்முள் தோன்றுவதின் பெயர் என்ன?.. மிகத் தனிமையில் அல்லது வேறெங்கோ அது அப்படியே இருந்தது. அம்முகத்தின் உணர்வு மட்டும் பிடிபடவே இல்லை. விளங்கா ஒன்றின் மேல் ஏற்படும் பெருமூச்சு மட்டுமே நம்முடையது போல.அப்போது தோன்றிய கண்ணீர் வாழ்வில் இதுவரை இல்லாத தன்மையது.
நிகழ்த்திய இறைக்கு நன்றி.
விஜயலட்சுமி