அன்புள்ள ஜெ
முழுமையறிவு காணொளிகளை தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கம்பராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம் போன்றவற்றை வாசிப்பதற்கும் ரசிப்பதற்கும் தமிழகம் முழுக்க ஏராளமான அமைப்புகள் உள்ளன. 1930கள் முதல் அவை தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகளில் பல இன்னமும் செயல்பட்டுக்கொண்டேதான் உள்ளன. முழுமையறிவு போன்ற ஒரு அமைப்பு கூடுதலாக என்ன செய்ய உள்ளது? அவை செய்வதையே மீண்டும் செய்வதுதான் உங்கள் திட்டமா?
கிருபாகரன்
அன்புள்ள கிருபாகரன்,
கம்பன் கழகங்கள், சைவசித்தாந்த அமைப்புகள் போன்றவற்றின் செயல்பாடுகள் சென்ற நூறாண்டுக்காலமாக இங்கே நடைபெற்று வருகின்றன. அவற்றின் பங்களிப்பு முக்கியமானது.
ஆனால் அவை பெருவாரியான மக்கள் பங்கேற்பை விரும்புகின்றன. பெருவாரியான மக்களால் விரும்பப்படவேண்டும் என்றால் நிகழ்ச்சிகளின் பொதுவான தரம் மிகச்சராசரியாக இருக்கவேண்டும். ஆகவேதான் எளிமையான பட்டிமன்றங்களும், நகைச்சுவைச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன.
அந்த நிகழ்ச்சிகளும் முக்கியமானவையே என்பது என் எண்ணம். அவை மரபை சாமானியர்களுக்கு அறிமுகம் செய்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றில் அறிவார்ந்த இளைஞர் ஒருவர் பங்கேற்க முடியாது. அவருக்கு அவை சலிப்பூட்டும். அர்த்தமில்லாதவையாகப் படும்.
அத்தகைய இளைஞர்களுக்காகத்தான் முழுமையறிவு உத்தேசிக்கப்பட்டுள்ளது.எங்கள் வகுப்புகள் தீவிரமான கல்விக்குரியவை. ஆர்வமும் அறிவாற்றலும் கொண்டவர்களுக்காக நடத்தப்படுபவை. இத்தகைய வகுப்புகள் வழியாகவே நவீனச்சிந்தனைகளுக்கு நிகராம மரபார்ந்த இலக்கியத்தையும் இளைஞர்களிடம் கொண்டுசெல்ல முடியும்.
இன்றைய இளைஞர்கள் மரபிலிருந்து அன்னியப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் மரபின் சாராம்சத்தைக் கொண்டுசென்று சேர்ப்பதுதான் எங்கள் நோக்கம்.
ஜெ