அன்புள்ள ஜெ
யோகப்பயிற்சிக்கு சிறுவர்களை கொண்டுவரலாமா? என் மகன்களுக்கு 12 மற்றும் 14 வயது. அவர்கள் யோகப்பயிற்சி பெறலாமா?
ஆனந்த்குமார்
அன்புள்ள ஆனந்த்,
நாங்கள் பொதுவான யோகப்பயிற்சிகளில் 10 வயதுக்கு மேலானவர்களை கலந்துகொள்ள அனுமதிக்கிறோம். உண்மையில் அதை விட சிறியவர்களுக்கும் யோகம் பயிற்றுவிக்கப்படவேண்டும்- ஆனால் அதை அவர்களுக்கு மட்டும் தனியாக நடத்துவதே பயனுள்ளது.
யோகப்பயிற்சி உண்மையில் இன்றைய கல்விமுறையில் பயிலும் மாணவர்களுக்கு மிக இன்றியமையாதது. இன்றைய நவீன வாழ்க்கைமுறை குழந்தைகளை கடுமையான பயிற்சிகள் வழியாகச் செல்ல வைக்கிறது. கல்வி கடுமையான உழைப்பை கோருகிறது, காரணம் அதிலுள்ள தீவிரமான போட்டி.
அந்த உழைப்பை அளிக்கையில் அதற்கேற்ப உடலும் உள்ளமும் வலிமையுடன் இல்லை என்றால் பலவகையான சிக்கல்கள் உருவாகின்றன. ஓர் எடையை தாங்கும் கட்டுமானம் அதற்குரிய வலிமையுடன் இருக்கவேண்டும். மின்சாரம் செல்லும் அழுத்தத்திற்கு ஏற்ப கம்பி தடிமனாக இருக்கவேண்டும்.
இல்லையேல் உருவாகும் சிக்கல்கள் முதலில் தெரியாது, ஏனென்றால் இளையோரின் உடல் மிகப்புதியது. அதில் சிக்கல்கள் உருவாக, வெளித்தெரிய கொஞ்சம் காலதாமதமாகும்.
உதாரணமாக, அமரும் விதம். மாணவர்கள் இன்று ஒருநாளில் பத்து மணிநேரம் வரை அமர்ந்தே இருக்கவேண்டியிருக்கிறது. அதற்குமேலும்கூட. சரியாக அமரவில்லை என்றால் மிக விரைவிலேயே முதுகுவலி, கழுத்துவலி உருவாகிவிடும். தோள்கள் தொங்கவிட்டு, கூன் விழுந்து அமர்ந்திருக்கும் சிறுவர்களை அடிக்கடிப் பார்க்கிறேன். அவர்களின் நெஞ்சு சுருங்கி சுவாசம் குறைவாகவே இருக்கும். மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் செல்வதில்லை. அது சோர்வை உருவாக்கும்.
உள்ளத்தைக் குவிக்கமுடியாத நிலை என்பது இன்றைய மாணவர்களின் பெரும் சிக்கல். காரணம் அவ்வளவு ஊடகங்கள், அவ்வளவு கவன ஈர்ப்புகள். எவர் தன்னை குவித்துக்கொள்கிறாரோ அவரே இன்று வெல்லமுடியும். உள்ளம் குவியாதபோது அகச்சக்தி வீணாகிறது. அந்நிலையில் கல்வியில் தன்னை அழுத்திச் செலுத்திக்கொண்டால் உள்ளம் சலிப்புறுகிறது. சோர்வும் பலவகையான அகச்சிக்கல்களும் உருவாகின்றன.
நம் சூழலில் மாணவர்களிடையே உள்ள கடுமையான உளச்சிக்கல்களை சற்றேனும் புறவயப்பார்வையுள்ளவர்கள் உணரமுடியும். உளஅழுத்தம் மட்டுமல்ல உளப்பிளவு, இருநிலை போன்ற தீவிரமான உளநோய்களின் தொடக்கங்களே பல மாணவர்களிடையே காணப்படுகின்றன. குழந்தைகளை மிதமிஞ்சி அழுத்தும் பெற்றோர் சிலசமயம் நிலைமை கைமீறிய பின்னரே உணர்கின்றனர்.
தன் மனதை குவித்துக்கொள்ள இளம் மாணவர்களை தொடக்கம் முதலே பயிற்றுவிப்பது நல்லது. பதற்றமும் நிலைகொள்ளாமையும் இல்லாத அமைதியான உள்ளம் அமைந்தால் கற்பது எளிது. உடலும் அதற்கேற்ப பழகவேண்டும். உலகமெங்கும் மிக இளமையிலேயே யோகப்பயிற்சிகளை அறிமுகம் செய்வது இன்று பெருகிவருகிறது.
ஓர் இளைய மாணவர் வெறும் 20 நிமிடம் யோகம் செய்தாலே போதுமானது, அதற்கான விளைவுகள் உடனடியாகத் தெரியலாகும்.
ஜெ