அன்புள்ள ஜெ
தாவரங்களைப் பற்றிய ஒரு வகுப்பை அறிவித்துள்ளீர்கள். அது எப்படி நிகழும் என அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். நான் தாவரங்களைப் பற்றிய நூல்களை வாசித்துள்ளேன். அவை சிலசமயம் சுவாரசியமாக இருந்தாலும் மனதில் நிற்பதில்லை.
சாந்தி. கே
அன்புள்ள சாந்தி,
எந்தக் கல்வியும் மூன்று அம்சங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். ஒன்று, ஆசிரியர். இரண்டு, நேரடி அனுபவ அம்சம். மூன்று திட்டமிடப்பட்ட பாடம்.
இந்த மூன்று அம்சங்களும் கொண்டதாகவே எங்கள் பயிற்சியை வடிவமைக்கிறோம். லோகமாதேவி தாவரவியல் நிபுணர், கற்பிப்பதில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர், வழக்கமான ஆசிரியர் அல்ல. ஆர்வமுள்ள பொது மாணவர்களுக்காகவும் வகுப்புகளை நடத்துபவர்.
இரண்டாவதாக உள்ள அம்சமே முக்கியமானது. இப்பயிற்சி நிகழுமிடம் ஒரு வேலியிடப்பட்ட காடு. அங்கே நேரடியாகவே சென்று அங்குள்ள தாவரங்களை அறியும் அனுபவக் கல்வியே இங்கே உத்தேசிக்கப்படுகிறது. அது இன்று எந்தக் கல்லூரியிலும் இல்லை. அதற்கு வேறொரு வழி தமிழகத்தில் இல்லை. இது ஒரு வாய்ப்பு, இதை உருவாக்கிப் பார்ப்போம் என நினைக்கிறேன்.
மூன்றாவதாக பாடத்திட்டம். இது தாவரவியல் ஆய்வாளர்களுக்கான பாடம் அல்ல. பொதுவான வாசகர்களுக்கு உரியது. கதைகவிதைகள் எழுதுவோருக்கும், தோட்டம் அமைப்போருக்கும் , சூழியல் ஆர்வம் கொண்டோருக்கும், பொதுவாக அடிப்படையான ஆர்வம்கொண்டவர்களுக்கும் பொருந்துவது
ஜெ