தத்துவத்தின் அருகாமை

அன்புக்குரிய ஆசிரியருக்கு,

“இளம் எழுத்தாளர்களுக்கு தத்துவக் கல்வியின் அவசியம்” என்னும் காணொளியைக் கண்டவுடன் இதை எழுதுகிறேன்‌. பலமுறை சில சிறிய மனச்சிக்கல்கள் மனதை அலைக்கழிக்கையில் அவை குறித்து உங்களுக்கு எழுத நினைத்து கைவிட்டிருக்கிறேன். அப்படி எழுதும்போதே அந்த மனச்சிக்கலின் முடிச்சுகள் அவிழ்வதையும் இன்னும் கொஞ்சம் முயன்றால் நானே சரியாகிவிடுவேன் என்னும் உணர்வையும் அடைந்திருக்கிறேன். நான் முயன்றாலே தெளிவாகும் விஷயங்களைப் பற்றி உங்களிடம் கேட்பது ஏதோ ஒரு வகையில் என் சிந்தனைச் சோம்பேறித்தனத்தைக் காட்டுகிறது என்றே பட்டது. ஆனால் இதை எழுதியே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது.

சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டம் உண்டு. ஆனால், ஆசாரங்களையே ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு அதனை கடைபிடித்திருக்கிறேன். எந்த வழிபாட்டுமுறை என் அகத்தில் புரியாத எழுச்சி நிலைகளை ஏற்படுத்துகிறதோ அந்த மரபைச் சேர்ந்தவன் நான் என்று நினைத்துக்கொண்டு சுற்றுவேன்.‌ தந்திர சாத்திர பூஜை முறைகளைப் புரியாமையின் குறுகுறுப்போடு பார்த்தபோது அது பெரும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. அந்த மயக்கத்தில் நான் என்னையே வைத்துப் பார்த்துக்கொள்ள, மீண்டும் அந்த நிலையை அடைந்துகொள்ள அந்த பூஜை முறைகளைச் செய்து பார்த்திருக்கிறேன்.‌ வார்க்கரிய சம்பிரதாயம், கிருஷ்ண பக்தி போன்ற வழிகளில் சென்று கண்ணீர் விடும் அளவுக்கான உணர்வுக்கொதிப்புக் கணங்களை ஸ்பரிசித்திருக்கிறேன். ஆனால் இவை அனைத்தையும் அறைக்குள் ஓரங்க நாடகமாகவே நிகழ்த்தியிருக்கிறேன் என்று படுகிறது. அதில் நானே நடிகனாய்; நானே அந்த நாடகத்தை பார்ப்பவனாய்; நானே அந்த நாடகமாய்.

இந்த போக்கு ஒரு கட்டத்தில் தீவிர மதவெறி நோக்கிக் கொண்டுசென்றது. உங்களின் “கனிமரமும் கல்தூணும்” உரை எனக்கு பல தெளிவுகளை ஏற்படுத்தி என் மேல்கிடந்த பாறைகளை இறக்கியது. ஆசாரவாதியாக மாறி, வாழ்வையே கசப்பாக்கிக்கொள்வது எனக்கான வழியல்ல என்று தோன்றியது.

ஆசாரங்கள் சலிப்பூட்டுவதை அனுபவித்திருக்கிறேன். மூர்க்கமான நம்பிக்கைகள் மூச்சிறைக்க ஓடிச்சென்று முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு நின்றபோது “இனியென்ன?” என்னும் கேள்வி வந்து அழுத்தி நசுக்கியிருக்கிறது. இத்தனை நாடகம் என் உள்ளத்தில் நிகழ்வது ஏன்? உண்மையில் வாழ்கிறேனா? நடிக்கிறேனா?‌ என் அன்பு, கோவம், காதல், காமம் இவையெல்லாம்?

இலக்கிய வாசிப்பு ஊரடங்கு காலகட்டத்தில்தான் தொடங்கியது.‌ முதலிரண்டு வருடம் ஏதேதோ வாசித்து பின்னர் தீவிர இலக்கியத்துக்கு வந்து சேர்ந்தேன்‌. இப்போது கோவையில் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் இளங்கலைத்தமிழ் படிக்கிறேன். பத்தொன்பது வயதே ஆகிறது.‌ எழுதவேண்டும் என்னும் கனவு உள்ளது. அதுவும் இலக்கியத்தில் உள்ளம் பறத்தலை உணரும் கணத்துக்காக போட்டுக்கொள்ளும் நாடகமா என்று தெரியவில்லை. பரவாயில்லை. நல்ல நாடகம் என்றும் அந்த நாடகத்தையேனும் எழுதவேண்டும் என்றும் நினைக்கிறேன். என்னைப்போலவே நிகழும் இந்த உலகத்தின் நாடகத்தையும் எழுதவேண்டும். என் அகத்துக்கு உரியது எழுத்துதான். வாசிக்கையில் நான் அடைந்த அனுபவங்களை, அர்த்தத்தை, பரவசத்தை, தாழ்வுணர்ச்சியின் பாற்படாத தூய கண்ணீரை எந்த வழிபாடும் தந்ததில்லை.

உங்களின் அணுக்கத்தை இந்த வருடம் புத்தாண்டு சந்திப்பில்தான் அனுபவித்தேன். உலகின் தலைசிறந்த கலைஞன் அருகில் நிற்கிறேன் என்னும் எண்ணமே மொத்த வெள்ளிமலையையும் என்னுள் மலரச்செய்தது. மனதின் ஆழத்தில் “நான் தாண்ட நினைக்கும் எல்லைமுன் நிற்கிறேன்” என்னும் எண்ணம் எழுந்தது. எண்ணமாகவே அது போகக்கூடாது என்று நினைக்கிறேன்.‌

ஆன்மீகமாகவும் இலக்கியரீதியிலும் காலத்தை வீணடிக்காமல் கற்க விரும்புகிறேன். உங்கள் தத்துவ வகுப்பு எனக்கு மிகவும் தேவை. என் வாழ்வில் கிடைக்கும் பெரும் பேறாகவே அதைக் கருதுகிறேன். ஆனால் நான் வகுப்புகளைப் பற்றிக் கேள்விப்படும்போது முதல்நிலை தத்துவ வகுப்புகள் இல்லை. இன்றுவரை அதற்காக காத்திருக்கிறேன்.‌ முழுமை அறிவு தளத்தில் காணொளிகள் வரும்போதும் தத்துவ வகுப்புகளின் நிழற்படங்கள் பகிரப்படும்போதும் ஏக்கமே மனதைத் நிறைக்கிறது. உங்களிடம் வேண்டிக் கேட்கிறேன்.  முதல்நிலை தத்துவ வகுப்பை விரைவில் வைத்தால் என்னைப்போன்றவர்கள் பெரும் பயனை அடைவார்கள்.

இந்த வாழ்க்கையை எனக்கு திறந்துக்காட்டியதற்கும் இன்றுவரை அருவமாய் விரல்பிடித்து அழைத்துச்செல்வதற்கும் நன்றியும் வணக்கங்களும்‌.

 

அன்புடன்,

கவிநிலவன்.

 

அன்புள்ள கவிநிலவன்

முதல்நிலை வகுப்புக்கு மீண்டும் எத்தனைபேர் வரக்கூடும் என்னும் ஐயம் இருக்கிறது. பார்ப்போம். மார்ச் மாதம் ஒரு வகுப்பை வைத்தாலென்ன என்னும் எண்ணம் உள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைபறவையும் தாவரங்களும்
அடுத்த கட்டுரைஆலயங்களின் வழியே வரலாற்றை மீட்டெடுத்தல்