பறவையும் தாவரங்களும்

அன்புள்ள ஜெ,

மே மாதம் நடந்த பறவைகள் பார்த்தல் வகுப்பிற்கு பிறகு குடும்பமாக அருகில் உள்ள மலைகளுக்கும், நீர் நிலைகளுக்கும் சென்று பறவைகள் பார்த்து பதிவிட்டு வந்தேன்.

பறவைகள் பார்க்கும் அனுபவம் உள்ள குழுவுடன் செல்லும் வாய்ப்பு எனக்கு அமையவே இல்லை. சென்னையில் இருப்பவர்கள் அவ்வப்போது செல்வதை வாட்ஸ் அப் குழுவில் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

கடந்த ஜனவரி 9ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பதாவது தமிழ் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு நடந்தது. மிக உற்சாகமாக நான் அதில் கலந்து கொண்டேன். வழக்கம் போலவே என் மகனும், கணவரும் சேர்ந்துதான்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து கூட பலரங்கு வந்திருந்தார்கள். பறவை ஆய்வாளர்கள், பறவை ஆர்வலர்கள், பறவைகள் புகைப்பட ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் அங்கே வந்திருந்தார்கள். ஒரு நாள் முழுவதுமாக அந்த கருத்தரங்கு நடந்தது. பறவைகளைப் பற்றிய நிறைய வகுப்புகள் நடந்தன. எதில் பங்கு பெற எதை விட என ஒரே குழப்பம்தான்.

முடிந்த வரையிலும் மிக ஆர்வமாக பங்கு கொண்டேன். அன்று மாலையில் என் பறவை பார்த்தல் ஆசிரியர்களான விஜய பரதி மற்றும் ஈஸ்வர் இருவருடனும் பறவைகள் பார்க்கச் சென்றோம். மறுநாள் காலையிலும், மதியமும் சென்றோம். வகுப்பு முடிந்தபின் குழுவுடன் நான் பறவை பார்க்கச் செல்லும் முதல் நாள் அது. இரவு முழுவதும் தூக்கமே இல்லை. முழுக்க முழுக்க இனித்துக் கொண்டே இருந்தேன். ஐந்தரை மணிக்கு தயாராவதற்காக 4 மணிக்கே தயாராகி உட்கார்ந்து விட்டேன்.

நவம்பரில் எங்களின் பறவை பார்த்தல் வகுப்பின் வாட்ஸ் அப் குழுவில் ஜெயராம் அவர்கள் வரைந்த பறவைகள் கருப்பு வெள்ளை ஓவியத்தை கண்டறியும் ஒரு போட்டி நடந்தது. அதில் நான் வெற்றி பெற்றேன். அதற்கான பரிசு ஜெகநாதன் அவர்களால் 9ம் தேதி மாலை எனக்கு வழங்கப்பட்டது. பரிசாக அதோ அந்த பறவை போல – முகமது அலி எழுதிய பறவைகள் பற்றிய புத்தகம் தரப்பட்டது. 4 மணியிலிருந்து அந்த புத்தகத்தோடு அமர்ந்திருந்தேன். உண்மையில் நான் வாங்கிய முதல் பரிசு,

பள்ளி கல்லூரி எல்லாம் சென்ற பின்னர் இந்த வயதில் அது ஒரு மிக இனிமையான ஒன்றாக இருந்தது.

விடிந்தவுடன் குழுவோடு பறவை பார்த்தல். அன்று முழுக்கவே அவர்களோடு இருந்தேன். கற்றலின் பொருட்டு செல்லும் தூரம் கணக்கிடவோ அளவிடவோ முடியவே முடியாது இல்லையா ஆசானே.

காலை முதல் சின்ன சின்ன மலைகளின் மீதும் ஒரு பெரிய ஏரியை சுற்றி வந்தும் நீண்ட தூரம் நடை நடந்து பறவைகள் பார்த்திருந்தாலும், மறுப்பேதுமின்றி மாலையில் பாடாலூர் ஆஞ்சநேயர் மலையின் மீது ஏறினேன். குழந்தை பிறந்த பின் ஏறும் முதல் மலை. அநியாயத்திற்கு ஒரு பறவை கூட இல்லை. முக்கால் பாகம் மலையை ஏறிய பின் சூரிய அஸ்தமனம் கண்ட பிறகு திரும்பி வந்தோம். மிக நிறைவாக உணர்ந்தேன் அப்போது.

என்னால் இவ்வளவு தூரம் நடக்க முடியும், நடந்த பின் ஒரு பெரிய மலையை ஏறவும் முடியும், எனக்கு அந்த உடல் வலு இருக்கிறது எனும் நம்பிக்கையை எனக்கு தந்த நாள்.

அடுத்ததாக பொங்கலைத் தொடர்ந்து நான்கு நாட்களும் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பிலும் பங்கு கொள்ள இருக்கிறேன். மீண்டும் குழுவோடு என்னால் செல்ல இயலாவிட்டாலும் என் குடும்பத்துடன் என் கணவர், என் நான்கு வயது மகன் மூவரும் மட்டுமாக பறவைகள் பார்க்கச் செல்வோம்.

மிக நிறைவான நாட்களை எனக்கு தந்தமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி

சரண்யா ராஜேந்திரன்

அன்புள்ள சரண்யா

பறவை பார்த்தலுக்கு இணையான இன்னொன்று தாவரங்களைப் பார்த்தல். படித்துப் புரிந்துகொள்ளுதல் அல்ல, நேரடியாகப் பார்த்தல். பறவை பார்த்தலுடன் இணைத்து கற்கவேண்டியது. பறவை பார்க்கையிலெயே அதுவும் நிகழலாம். பறவைக்காகக் காத்திருத்தலுடன் நிகழலாம். பறவைகள் தாவரங்களுடன் இணைந்தவை என்னும் மிகப்பெரிய திறப்பு அமையும். பறவைகள் போலவே முடிவில்லாத வகைப்பாடுகளும் விந்தைகளும் கொண்டவை. மனநிலைகளும் மாறுபாடுகளும் கொண்டவை. திகைப்பளிக்கும் திறப்புகளை ஒவ்வொரு நாளும் அளிப்பவை

ஜெ

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்களுக்கான கல்வி, கடிதம்
அடுத்த கட்டுரைதத்துவத்தின் அருகாமை