‘கோமியம் குடித்ததால் காய்ச்சல் குணமானது’ – சென்னை ஐஐடி இயக்குநர் கருத்தும் தாக்கமும்
அன்புள்ள ஜெ
எது அறிவியல் என்ற கட்டுரை தற்செயலாகவே ஒரு ‘டைம்லி’ வெளியீடாக அமைந்துள்ளது. அண்மையில் ஐஐடி பேராசிரியர் ஒருவர் பேசியிருந்த வீடியோ வைரல் ஆனதை அறிந்திருப்பீர்கள். அவர் கோமியம் குடித்தால் உடல்களில் நோய்கள் தீரும் என்கிறார். ஆனால் அவர் சொல்வதெல்லாமே சொந்தக்கதைகள்தான். அறிவியல் என்பதிலுள்ள புறவய நிரூபணம் என்பதே அவருக்குத் தெரியவில்லை.
இந்த லட்சணத்தில் நீங்கள் கார்ல் பாப்பரை அறிமுகம் செய்து பேசும்போது அந்த அறிவியல் பற்றிய கொள்கைகள் எல்லாம் அறிவியல் படித்தவர்கள் அனைவருக்கும் தெரிந்ததே என்றும் பொதுவாசகர்களுக்காக அதையெல்லாம் சொல்வதாகவும் சொல்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை வாழ்க.
இன்றுவரை நமக்குத்தெரியாதது அறிவியலுக்கு அதற்கான ஒரு தத்துவம் உண்டு என்பதுதான். அந்த தத்துவமே அதன் தர்க்கம். அது மூன்றுபடிநிலைகளாக இருந்துவருகிறது என்று தெளிவாகவே சொல்கிறீர்கள். அரிஸ்டாடில் முதல் பிரான்ஸிஸ் பேக்கன் வரை ஒரு காலகட்டம். பிரான்ஸிஸ் பேக்கன் முதல் கார்ல் பாப்பர் வரை இன்னொரு காலகட்டம். அதன்பின் இன்றைய காலகட்டம்.
இங்கே சமூகவியல் கொள்கைகள் எல்லாமே அரிஸ்டாடில் காலகட்டத்து இண்டக்ஷன் டிடக்ஷன் முறைமையை மேற்கொள்பவை. அதை அறிவியல் என்று சொல்கின்றன. ஆனால் அந்த முறையை இன்றைய அறிவியல் ஏற்பதில்லை. கார்ல்பாப்பர் அதை மறுக்கிறார் என விளக்குகிறீர்கள். நம் மார்க்ஸியர்கள் மார்க்ஸியம் ஓர் அறிவியல் என்றெல்லாம் சொல்வது இந்த பழைய பார்வையின்படித்தான்.
பிரான்ஸிஸ் பேக்கனின் அறிவியல் புறவய நிரூபணத்தை முன்வைப்பது. அந்த அடிப்படையில்தான் இங்கே பொதுவாக பகுத்தறிவு அறிவியல் பேசப்படுகிறது. நிரூபிக்கமுடியுமா என்று கேட்பார்கள். கண்கூடாக அனுபவபூர்வமாக நிரூபிக்கமுடியுமா என்று அந்த கேள்வி. அறிவியல்கொள்கைகளை அப்படி நிரூபிக்கமுடியாது. அதற்கான நிரூபணமுறைகளையே கார்ல் பாப்பர் முன்வைக்கிறார். அனுபவ உண்மைகள் பிரான்ஸிஸ் பேக்கனின் நிரூபணவாத முறைப்படித்தான் நிரூபிக்கப்படவேண்டும். மருந்துகள், கருவிகள், பொருட்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பயன்பாடுகள் எல்லாம் இதில் வரும்.
கார்ல் பாப்பர் சொல்லுவத ஃபால்ஸிபிகேட்ஷன் முறைதான். பொய்ப்பித்தலுக்கான வாய்ப்பு. இந்த கோமியம் விவகாரத்தை ஒருவர் முன்வைக்கலாம். ஆனால் அதை எப்படி பொய்ப்பிப்பது என அவர்தான் சொல்லவேண்டும். இது அறிவியல்கொள்கை அல்ல.இன்று வரை பொதுவான முறையில் கோமியம் மருந்து ஆகமுடியும் என நிரூபிக்கப்படவில்லை. அது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை. கொஞ்சபேரின் மதநம்பிக்கை. ஆயுர்வேதமும் ஒரு குழுவின் நம்பிக்கையாகவே உள்ளது. அதை அறிவியல் உண்மை என அவர்கள் நினைத்தால் அதை பொதுச்சோதனைக்கு முன்வைக்கவேண்டும். இன்னின்ன காரணங்களால் அது மருந்து என்று நிறுவவேண்டும். அந்த காரணங்களை நாம் மறுத்து தவறென்று காட்டினால் நாம் சொல்வதை ஒப்புக்கொள்ளவேண்டும். அதுவே அறிவியல்.
இவர்கள் தனியனுபவம்– அறிவியல் என்னும் வேறுபாடே தெரியாமலிருக்கிறார்கள். நம்பிக்கை– அறிவியல் என்னும் வேறுபாடே இல்லாமலாக்குகிறார்கள். இப்படி இவர்கள் சொல்வதுபோல பார்த்தால் இமாம்கள் ஓதிக்கட்டுவது, பிஸ்மில்லா சொல்லி அறுத்த ஆடு கெடவே கெடாது என நம்புவது, மந்திரவாதிகள் நோயை குணமாக்குவது, வாயிலிருந்து சிவலிங்கம் எடுப்பது, பாதிரிமார் பேயோட்டுவது எல்லாமே ‘அறிவியல் உண்மை’கள் ஆகிவிடும்.
சுருக்கமான அறிமுகமாக இருந்தாலும் எல்லா முக்கியமான கருத்துக்களையும் சொல்லிவிட்டீர்கள்
ஜெயக்குமார் பார்த்தசாரதி