திட்டு, முதற்சாதனை
அன்புள்ள ஜெ
திட்டு முதற்சாதனை என்ற கடிதத்தை படித்தேன். ஒரு பெரிய வாழ்க்கைக்கதை அதிலுள்ளது. ஒரு வாழ்வின் திருப்புமுனை. ஒரு நல்ல கதையாகவே அதை எழுதிவிடலாம். ஒரு திட்டு விழுந்ததும் அதில் சோர்ந்துபோகாமல் சீண்டப்பட்டு தடைகளைக் கடந்து வந்து தன்னைக் கண்டடைந்து சாதித்திருக்கிறார். இது தமிழ்ச்சூழலில் சாமானிய விஷயமே அல்ல. மிகப்பெரிய ஒரு வெற்றி அது. இங்கே ஒவ்வொருவரும் தங்களிடமிருந்தே வெற்றியை அடையவேண்டியிருக்கிறது. தாங்கள் எதையெதையோ சுமந்துகொண்டிருக்கிறோம் என்று பாவனை செய்கிறோம். நமக்கு எது மகிழ்ச்சி அளிப்பது என்று தெரியாமலேயே இருக்கிறோம். தெரிந்தால்கூட அதைச் செய்வதில்லை. கஷ்டப்பட்டால்தான் நமக்கு மதிப்பு என்று நினைக்கிறோம். அந்த பாவனைகளைக் கடப்பதுதான் மிகப்பெரிய சவால். அவருக்கு வாழ்த்துக்கள்
தேவி