பிரபந்த உலகம்.

அன்புள்ள ஜெ!

ஜாஜா ரசிகர் மன்றம் எங்கேனும் இருக்கிறதா ? யான் அறியேன். எனினும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பிரபந்த பாடல்களின் மேம்போக்கான எனது புரிதலை வேரோடு அகழ்ந்து புதிய பரிமாணம் பாய்ச்சி மனமெனும் நிலத்தில் நற்விதைகளை ஜாஜா விதைத்ததன் விளைவு வீடு திரும்பும் முன் முளைக்கத் தொடங்கிற்று. மரமாகி கிளை பராவி பூக்கும் நாள் தூரத்தில் இல்லை. வியாழன் உறங்கி வெள்ளி முளைத்த காலை ( 23.01.2026) முதல் ஞாயிறு (25.01.2026) வரைஜாஜாவின் முற்றாத இளம் முறுவல் முகம் அவர் விவரித்து விதைத்த விளக்கங்கள் வழியே குட்டிக் கிருஷ்ணனையே கண்முன் நிறுத்தியது. கிருஷ்ணனனாக, திருமாலாக, பெருமாளாக, நாராயணனாக, ஆழ்வார்களாக ஜாஜா எடுத்த அவதாரங்கள் தரிசன கொண்டாட்டமாக இருந்தது. மிகையில்லை . வகுப்பு வந்த எவரிடமும் கேட்டுப்பாருங்கள் இம்மி அளவும் புகழ்ச்சியில்லை.

உரிய ஆசிரியரின்றி சிலவற்றை கற்றுத் தெளிய ஏலாது என நீங்கள் அடிக்கடி சொல்வதன் உண்மைவைணவ வகுப்புகள்வழி பிறங்கிற்று எனக்கு.

என் சிறு குட்டன், நப்பின்னை காணில் சிரிக்கும், பின்னும் ஆளும் செய்வன், ஒன்றும் அலாத மாயையாய், மூவுருவில் இராமனாய், பாதியும் உறங்கிப் போகும், கூனல் பிறை வேண்டி, என்னையும் உன்னில் இட்டேன்என ஈர்க்கும் தலைப்புகளின் தேர்வுகளே உள்நிற்கும் வேட்கையை கிளறின. பாக்களை பதம் பிரித்து, அதன் நேரடி அர்த்தங்களை கூறியதோடு அல்லாது மறைந்து கிடந்த தத்துவத்தினை இராமன் கால்பட்டு அகலிகை எழுந்தது ஒப்ப எடுத்தியம்பினார்

எல்லோரையும் வாய்விட்டு படிக்கச் சொல்லி பாடல்களின் பொருள் சொல்லிச் சொல்லி வினாக்களை தொடுத்து சரியான பதில்களுக்கு பரிசாக சாக்லேட் வழங்கி மேலும் சுவையூட்டினார் . சாக்லேட் பெறுவதற்கான மாணவ மனம் விழித்துக்கொள்ள பதில் சொல்வதில் ஒரே உற்சாகம்

கம்பீரமான ஆணைகளின் வழி கடவுளை கட்டிப்போட்ட மிடுக்கி ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களில் வரும்பறைஎன்பதன் பொருள் தோலால் மூடப்பட்ட, கோல் கொண்டு ஒலியெழுப்பப்படும் தமிழர்களின் மிகப்பழைமையான தாள இசைக்கருவி எனவே நான் நினைத்திருந்தேன். அப்பொருள் இப்பாசுரங்களுக்கு செல்லாது என இயம்பி அதன் மெய்ப்பொருள்சொல்எனச் சொன்னார் சொல்லின் செல்வன். இம்மாதிரி‌ தவறாக கொள்ளப்பட்ட பல சொற்களுக்கு சரியான பொருள் தந்து பொலிவூட்டினார். பல பாடல்களுக்கு புராணப் பிண்ணனி இல்லாமல் புரிந்துக் கொள்ள இயலாதென பகன்று புராண நிகழ்வுகளை தொடர்புப்படுத்தி பொருள் கொள்ள வைத்தது சாலச் சிறப்பு. ஒரு திரைப்படத்துலஇவ்வளவு நாளா எங்கேயா இருந்த ? உன்னதான் தேடிக்கிட்டிருந்தேன்என்ற பொருளில் ஒரு வசனம் வரும். அதுபோல தேடியவரை கண்டுகொண்டேன். எஞ்சியுள்ள பாடல்கள் இனி விளங்கும். கற்பனவும் இனியமையும்

தங்களுக்கும், தங்களின் வழிகாட்டுதல் வழி வைணவ வகுப்புகளை ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும், கலந்துகொண்ட அதிர்ஷ்டசாலிகளுக்கும், நித்யவனத்தின் நித்யசூரி அந்தியூர் மணிக்கும், அமுதூட்டும் அம்மைக்கும் நன்றிகள் பல.

பிரபந்தம் கற்காத நாளென்ன நாளே.

மிக்க அன்புடன் 

பார்த்திபன்..

காரைக்கால்

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவம், மேலைத்தத்துவம்.