கோயில்கள் வழிப்பாட்டு தளங்கள் என்பதை தாண்டி கோயில்களை தெரிந்து கொள்ள பல முறை முயன்றுள்ளேன். பல கோயிலுக்குச் சென்று வழிபாடு ஏதும் செய்யாமல் திரும்பிய நாட்கள் பல. ஏன் என்று தெரியாமலேயே கோயில் கோயிலாக ஏறிய நாட்கள் இன்னும் நினைவில் உள்ளது. தாராசுரம் … கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோயில்களை கண்ட போது அப்படியே ஒரு குழந்தையைப் போல அள்ளி அணைத்துக் கொள்ள முடியாதா ..? என்று ஏங்கியதுண்டு.
கோயில்கள் பிடிக்குமென்றாலும் அவற்றை சரியான முறையில் அணுக தெரியவில்லை. நேரடியாகவும் வலைதளங்களில் அலைந்து தேடியும் சரியான வழி கிடைக்கவில்லை.
அந்த மாதிரி செயலற்ற நிலையில் நானிருந்த நிலையில் தான் ஆலயகலை பயிற்சி … பற்றிய தகவல் எனக்கு கிடைத்தது. 2023 நவம்பர் வகுப்பிற்காக தொகை சொலுத்தி பதிவு செய்து காத்திருந்த சமயம் தலிர்க்கயியலாத காரணத்தால் என்னால் கலந்துக் கொள்ளயியலவில்லை. ஏதேர்ச்சையாக மீண்டும் 2025 ஆலயகலைப் பயிற்சி பற்றிய தகவல் கிடைத்தது. மின் அஞ்சல் மட்டும் செய்தேன்.(மீண்டும் நான் பணம் செலுத்தவில்லை) என்னை மீண்டும் இணைத்துக் கொண்டனர்.
யார் பயிற்றுவிக்க போகிறார்கள்…. யார் யார் பயில வருவார்கள் …. நித்தியவனம் எங்கேயுள்ளது என்ற எந்த அடிப்படையும் தெரியாமல் ஈரோடு வரை வந்தடைந்தேன். ஸ்வரன், ராமமூர்த்தி, தர்ஷன் ஆகிய பங்கேற்பாளர்களின் உதவியோடு நித்தியவனம் வந்தடைந்தேன்.
முதல் நாள் வகுப்பில் J. K என்ற ஜெயக்குமார் வந்தமர்ந்தவுடன் பாடல் ஒன்றை பாடி நிகழ்வை ஆரம்பித்தார். என்னே!! ஒரு குரல் … வகுப்பை ஆரம்பித்த விதமும் பங்கேட்பாளர்களை வகுப்பில் ஈடுபாட்டுடன் கவனிக்க வைத்த விதமும் ஆசிரியர் என்றால் இப்படி இருக்கனும் என்றே தோன்றியது.
அவரது உச்சரிப்பும் முக பாவனையும் உடலசைப்பும் சேர்ந்து பங்கேற்பாளர்களை குழந்தை மனோபாவத்திற்கு இட்டுச் சென்றார். .தாராசுரம் கோயிலுடன் வகுப்பை முடித்த போது என்ன இவருக்கு இன்னும் வகுப்பெடுக்க கோயிலா இல்லை என்ற செல்ல கோபம் வந்ததை தவிர்க்கயியலவில்லை.
கோயிலுக்குள் நீங்க நுழைந்தால் போகப் போக கோயில் உங்களுக்குள் நுழையும் என்ற J K யின் வார்த்தைகள் அவ்வளவு உண்ணதமானது.
மணி அண்ணா அவரது கம்பீர குரலில் அருவியாக அவர் பேசியது இன்னும் மனதில் நிழலாடுகிறது.
சரஸ்வதி அம்மாவின் கைபக்குவ உணவு சுவையின் எச்சத்தை என் மனதில் வைத்து வீடு வரை எடுத்து வந்துள்ளேன். .
நல்ல நிகழ்வு. நல்ல மனிதர்களுடன் சேர்ந்து பிடித்த விசயத்தை கற்றுக்கொள்ள முயன்றுள்ளேன்.
நன்றிகள் பல.
S.சிவக்குமார்
பழனி.