அன்புள்ள ஜெயமோகன்,
கலைப்படங்கள் பற்றிய உங்கள் நீண்ட உரை அறிவூட்டக்கூடியதாக இருந்தது. திரைப்படக் கலை, அதை பயிலும் முறை, அதற்கான மனநிலை எல்லாவற்றையும் விரிவாகவே அதில் சொல்லியிருந்தீர்கள். சென்னையிலே திரைப்பட விழாக்களுக்கு சென்று திரைப்படங்களை நான் பார்ப்பதுண்டு. அங்கு வரும் பார்வையாளர்கள் நீங்கள் சொல்வது போல கலைந்து கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் இருப்பார்கள். அவர்களால் அந்த படங்களை பார்த்து ரசிக்க முடிவதில்லை. அந்த வகையான படங்களின் அழகியல் என்ன, அவற்றை எப்படி பார்க்க வேண்டும் என்ற பயிற்சி எங்குமே அளிக்கப்படுவதில்லை. இங்கே உலக சினிமா என்ற பெயரிலே பேசப்படுபவை எல்லாம் பரபரப்பாக ஓடும் தன்மை கொண்ட வணிகப் படங்கள்தான். வணிகப்படங்களில் கொஞ்சம் கூர்மையான படங்கள்தான் உலக சினிமா அல்லது தரமான சினிமா என்ற பெயரிலே இங்கே பரவலாக முன்வைக்கப்படுகின்றன. வன்முறை காமம் போன்றவற்றை தீவிரமாக வெளிப்படுத்திவரும் அந்தப் படங்களை பார்த்து பழகியவர்களால் க நிதானமாக ஓடும் கலைப்படங்கள் அன்றாடத்தை காட்டும்போது பார்க்க முடிவதில்லை. அந்த வேறுபாடு என்ன, அதற்கான மனபயிற்ச்சி என்ன என்று தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த உரை மிக முக்கியமானது. இந்த தளத்தில் படங்களை உண்மையிலேயே பார்க்க விரும்பும் ஒவ்வொருவரும் இந்த உரையை கவனிக்கவேண்டும்.
ராஜசேகர்












